வன்னி மண்ணில் பொது மைதானம் அமைக்கப்படுவதில் ஆட்சியாளர்கள் பாராபட்சம் – ரெலோ வினோ எம்.பி

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வவுனியா மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் பொது விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறுவதை தடுத்து வருகின்றார்கள். எமது மண்ணின் விளையாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்றார்கள். சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள். விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு என பொது மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தில் தலையீட்டுடன் ஆரம்பத்தில் நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது,தற்போது உரிய காரணிகள் இல்லாமல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டத்திற்கு பிரசித்துப் பெற்றுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு உரிய மைதானம் இல்லாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறித்த மைதானம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்திகளின் போது பாரப்பட்சம் காட்டப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் பொது மைதானம் இல்லை.அப்பிரதேச இளைஞர்களுக்கு என்று வசதிகளுடனான மைதானம் ஒன்று இல்லை. ஆகவே மாவட்ட அடிப்படையில் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மைதானத்தை அமைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,வெறும் இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம்பெறுகிறது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறது.வடமாகாணத்திற்கு என சகல வசதிகளுடன் மைதானம் என்பதொன்று இல்லை.

சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிபகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள்.விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து செல்கிறது,போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் சீரழிந்து செல்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

ஆகவே போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் பொலிஸார் மந்தகரமாக செயற்படுகிறார்கள்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.