வெடுக்குநாறி மலையில் மீண்டும் ஆதிசிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் – சபா குகதாஸ்

கச்சதீவில் புத்த விகாரை என்ற விடயம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை தங்களது ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதற்கு கையில் எடுத்திருக்கின்ற புத்த பெருமானுடைய சிலையை வைத்துக்கொண்டு விகாரைகளை அமைத்து அதன் மூலமாக ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டத்தை நகர்த்திச் செல்கின்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இருந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கம் மத நல்லிணக்கம் என கூறிக்கொண்டு இப்படியான சட்டவிரோதமான விகாரைகளை அமைத்தல், புத்தர் சிலைகளை வைத்தல் என்பது உண்மையிலேயே இந்த நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற வகையில் பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மத்திய மக்களின் கலாச்சாரங்கள் மதம் உள்ளிட்ட விடயங்களை மதிக்காது அவற்றினுடைய வரலாறுகளை மாற்றி அமைக்கின்ற வகையிலும் அவற்றினுடைய புனித தன்மைகளை செயல் இழக்க செய்வதாகத்தான் இவர்களுடைய செயற்பாடுகள் முன்னெடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கச்சதீவில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் புத்தக விகாரை என்பது உண்மையிலேயே ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரால் ஏனைய இனங்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துகின்றனர்.

இதற்கான பூரண ஆதரவை இந்த அரசு இயந்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்த அரசு இயந்திரம் என்பது நாட்டில் உள்ள அத்தனை மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு இயந்திரம் பெரும்பான்மை இனத்தின் நலன் சார்ந்து செயற்பாடுகிறது.

இது உண்மையிலேயே ஒரு மனித உரிமை மீறல், அடிப்படை ஜனநாயக உரிமை மீறல். இதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கச்சதீவு என்பது இந்திய பூகோள அரசியலில் ஒரு முக்கிய இடமாக விளங்குகின்றது. இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்ற விடயம் இலங்கைக்கு இந்தியாக்கும் இடையிலான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்க கூடியதாகவும் அந்த நாடுகளின் உறவுகளை சீண்டுகின்ற விதமாகவும் அமைகிறது.

அடுத்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் தகர்த்தெறியப்பட்டு அங்கிருந்த சூலங்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

இது சைவ மக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகும். யாரும் உள்ளே செல்ல முடியாது என்று நீதிமன்றம் தடையுத்தரவை போட்டுள்ள நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.