13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்; உலக நாடுகள் வலியுறுத்து

13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது என்று ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இந்திய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடரில் முழுநிறை காலமுறை மீளாய்வு செயல்குழுவில் இலங்கை குறித்து நேற்று மீளாய்வு செய்யப்பட்டது. இதில், பங்கேற்ற இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கவும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்க வும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இதில், இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும். அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சித்திரவதை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கொலம்பியா பரிந்துரைத்துள்ளது.

மேலும் அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு டென்மார்க் பரிந்துரைத்துள்ளது.