13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – மொஹமட் முஸம்மில்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். உண்மையான நாட்டு பற்றாளர்கள் அதிகார பகிர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு உறுதியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் அயல் நாடான இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுவது ஆச்சியரியமாக உள்ளது.

1987 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட்டிருந்தால் 60 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். நாட்டில் இனக்கவலரம் என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்த வண்ணம் உள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை.

போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி துப்பாக்கி அதிகாரத்துக்கு பதிலாக மாற்று அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதியின் தந்திர செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

13ஆவது திருத்த விவகாரத்தில் போலியான தேசப்பற்றாளர்கள் அனைவரும் மௌனித்துள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அனைவரும் 13 ஆவது திருத்த விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.