22 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது சிறைகளில் உள்ளனர் – நீதி இராஜாங்க அமைச்சர்

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் எனவும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஆண் கைதிகள்,பெண் கைதிகள், நீதிமன்றத்தினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகள்,சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், மரண தண்டனை கைதிகள், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்,ஆயுள் தண்டனை கைதிகள்,சிறு வயது கைதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,290 ஆக காணப்பட வேண்டும். ஆனால் பௌதீக வள பற்றாக்குறையினால் 25,899 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகமாக 14,609 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும், 01 பெண் என்ற அடிப்படையில் 46 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமாதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்