தனது முதலாவது நூற்றாண்டிலே அடிமைகள் போன்று நடாத்தப்பட்ட மலையக சமூகம் இரண்டாவது நூற்றாண்டிலே தன்னை அமைப்பாக்கம் செய்து அரசியல், தொழிற்சங்க, இலக்கிய பண்பாட்டுத் தளத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் குடியுரிமைப் பறிப்புக் காரணமாக அந்த இரண்டாம் நூற்றாண்டு அரசியல் பிரவாகம் பல ஏற்ற இறக்கங்கங்களைக் கொண்டது.
அத்தகையதொரு அரசியலே இப்போது நடைமுறையிலுமுள்ளது. அதே நேரம் மலையகம் 2023 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது நூற்றாண்டைத் தொடங்குகிறது. அடுத்த நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் அவசியம் உள்ளது. அதனையே இலக்காக்க் கொண்டே மலையக அரசியல் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார் .
மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவும் வி. கே. வெள்ளையன் நினைவுப் பேருரையும் ஹட்டன் நகர சபை மண்டபத்தில் எந்த ஞாயிறன்று (27/11) நடைபெற்றது. அரங்கத்தின் 13 வது நினைவுப் பேருரையை மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் மெய்நிகர் முறையிலும், இளைஞர்களினதும் பெண்களினதும் அரசியல் பங்கேற்பு எனும் தலைப்பில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸும், ஓராண்டுச் செயலாற்றுகை எனும் அரங்கச் செயற்பாட்டு அறிக்கையை கிருஷ்ணகுமாரும் ஆற்றியுருந்தனர் . நிகழ்வுக்கு தலைமை வகித்து கொள்கை விளக்க உரையாற்றியபோதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையக அரசியல் அரங்கம் தனது ஓராண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. அரசியலில் ஒரு ஆண்டு என்பது ஒரு கிழமை போன்றும் ஓடி மறையலாம் அல்லது ஒரு யுகமாற்றமும் நடந்து முடியலாம். இலங்கையப் பொறுத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் என்பது ஒரு யுகமே. அத்தனை மாற்றங்கள் அரசியல் தளத்திலே இடம்பெற்ற இந்த இரண்டரை ஆண்டு காலகட்டத்தில்தான்
மலையக அரசியல் அரங்கமும் பிறந்தது.
மலையக அரசியல் அரங்கம் என்பது மலையகத்தின் புதிய யுகத்துக்கான அரசியலை முன்வைக்கும் சமூக அரசியல் தளம். இது ஒரு கட்சியல்ல. கூட்டணியும் அல்ல. நான்கு பிரதான இலக்குகளைக் கொண்டு அரங்கம் செயற்படுகின்றது. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடல் வெளியை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பை வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கான அரசியல் பாலமாகச் செயற்படுவது என்பனவே அந்த இலக்குகளாகும்.
மலையகத்தின் முதலாவது நூற்றாண்டு காலம் அடிமைத் தனத்துக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே அரசியல் அமைப்பாக்கம் பெற்ற சமூகமாக மலையகத்தை நிமிர்த்திய பெருமை மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்குரியது. அவரது துணைவியார் மீனாட்சியம்மை யும் அந்த பயணத்தில் இணைந்து பெண்களும் அரசியலில் ஈடுபடும் முன்மாதிரியைக் காட்டியவர் .எனவேதான் அவர்கள் இருவரையும் மலையக அரசியல் அரங்கம் முன்னோடி அரசியல் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்துகிறது.
அறிவார்ந்த அரசியல் உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலே முன்வைப்புச் செய்யவேண்டிய இருபத்து நான்கு (24) தலைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை மாதாந்த உரையரங்க நிகழ்வாக நடாத்தி வருகிறோம். இந்த உரையரங்கத் தொடரில் இதுவரை 12 உரைகளை சமகால ஆளுமைகளைக் கொண்டு கடந்த கால ஆளுமைகளின் நினைவாக எதிர்காலத் தலைமுறையினருக்காக வழங்கி உள்ளோம். அவற்றை இணையத்தில் கேட்கலாம். ஆளுமைகளை நினைவு கூர்வதில் நாங்கள் கட்சி பேதம் பார்ப்பதில்லை.
அவர்களது செயற்பாடுகள் மீதான விமர்சனத்தை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 200 ஆண்டுகால மலையகத்தின் 100 ஆண்டுகால அரசியலில் 60 ஆண்டுக்காலம் தலைவராகவும் 30 ஆண்டுகாலம் அமைச்சராகவும் இருந்த ஒருவரை இலகுவாக தவிர்த்துச் செல்ல முடியாது. அந்தச் சாதனையை நினைவுபடுத்தும் அதேநேரம் அறுபது ஆண்டு காலம் ஒருவர் தலைவராக,அமைச்சராக இருந்தும் மக்களுக்கு ஆனது என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது.
அந்தவகையில், எமது 12 உரைகளும் பல்வேறு அரசியல் முன்வைப்புக்களைச் செய்துள்ளது. அதே நேரம் இருநூறு ஆண்டு காலம் நாட்கூலித் தொழிலாளர்களாக வாழும் எமது உழைப்பாளர் மக்களை சிறு தோட்ட உடைமாயளர்களாக்கி சுயாதீன உழைப்பாளர்களாக்குவதன் மூலமே அடுத்த தலைமுறை மலையகத்தையாவது நாம் அடிமைத்தளைகளில் இருந்து நீக்க முடியும் என்ற வலியுறுத்தலைச் செய்யவே அந்த விடயத்தை தலைப்பாகக் கொண்டு 13 வது நினைவுப்பேருரையை தொழிற்சங்கத் துறவி வீ.கே. வெள்ளையன் நினைவாக ஆற்றுகின்றோம்.
அதனை அர்த்தமுள்ளதான ஓர் உரையாக அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் அவர்கள் வழங்கி உள்ளார். அடுத்து வரும் 11 மாதமும் நாங்கள் மலையக மாவட்டங்கள் தோறும் மாதாந்த நினைவுப் பேருரைகளை நடாத்தத்திட்டமிட்டுள்ளோம். மலையகத்தின் இரண்டாம் நூற்றாண்டில் அரசியல் அமைப்பாக்கம் செய்த எங்கள் முன்னோடி நடேசய்யர் எதிர்கொண்ட சவால்களை நாம் கற்றறிந்துள்ளோம். அதேபோல மூன்றாவது நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் மலையக அரசியல் அரங்கத்தின் பணியை இன்றுபோல் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.