வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.புதிய வீடமைப்பு திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படமாட்டாது என வீடமைப்புத்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மை என்று கருதி செய்த விடயங்களில் வீட்டுத்திட்டம் உரிய இலக்கை அடையவில்லை. வீட்டுத்திட்டம் சிறந்ததாக அமைந்திருந்தால் இன்று ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் ஏழ்மையில் வாழந்த மக்கள் இன்று மென்மேலும் பாதிக்கப்பட்டு, வங்கி கடனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வீட்டுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியுதவி இதுவரை முழுமையாக மக்களுக்கு கிடைக்காததால் மக்கள் அரைகுறை குடியுறுப்புக்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை பிறிதொரு அரசியல் கொள்கை கொண்ட கட்சி ஆட்சிக்கு வரும் போது அந்த அபிவிருத்தி திட்டத்தை கண்டு கொள்வதில்லை.
வீட்டுத்திட்ட கடனால் பெரும்பாலானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். பலர் சொல்லனா பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு அரசாங்கம் எடுத்த செயற்திட்ட அபிவிருத்தி பணிகளை தொடர கூடாது என்ற நிலைப்பாடு அரசுகளுக்கு இருக்க கூடாது. வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன தீர்வு, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார் என்றார்