வடக்கில் மூன்று இடங்களில் நிலவிடுவிப்புக்கு ஜனாதிபதி பணிப்புரை

வலி. வடக்கில் 110 ஏக்கரும்,வடமராட்சி கிழக்கில் 4,360 ஏக்கரும், குறுந்தூர்மலையில் 354 ஏக்கரும் நிலத்தை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந் துரையாடலின்போதே இவற்றை தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கேயும், மயிலிட்டி நிலம் தொடர்பிலும், வலி.வடக்கில் படையினர் நிலை கொண்டுள்ள நிலத்தில் விடுவிக்க சாத்தியமானவை என இனங்கண்ட இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரியபோது, 5 இடங்களில் 110 ஏக்கரை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பார்கள் என படையினர் உத்தரவாதம் தெரிவித்தனர்.

அதில் பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கில் 18 ஏக்கர், கே.கே.எஸ. பிரிவில் 28 ஏக்கர், கீரிமலையில் 30 ஏக்கர், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடங்களிலுமாக 110 ஏக்கரை இம் மாத இறுதியில் விடுவிக்க இணக்கம் தெரி விக்கப்பட்டது. இதேநேரம் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 641 ஏக்கரையும் விடுவித்தால் அங்கே கட்டடங்கள் எழுந்தால் விமானங் கள் தரை இறக்க முடியாத நிலை ஏற்படும் என மறுப்புத் தெரிவித்தபோது, அவ்வாறானால் அங்கே உள்ள தோட்ட நிலங்களை உடன் விடுவியுங்கள், மக்கள் பொருளாதார நெருக்கடியில் தோட்டச் செய்கையை மேற்கொள்வர் என கோரினார். இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகப் பதிலளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு

இதேநேரம் வடமராட்சி கிழக்கில், நாகர் கோவில் கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட 19 ஆயிரத்து 368 ஏக்கரில், 4 ஆயிரத்து 360 ஏக்கருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை வேண்டும், அது மக்களின் உறுதிக் காணிகள், யுத்த காலத்தில் அப் பகுதியில் படையினருக்கும் புலிகளிற்கும் இடையில் நீண்ட காலம் போர் இடம் பெற்றபோது மக்கள் அங்கே செல்லாத காரணத்தால் பற்றைகள் வளர, அதனைக் காடு எனக் கருதி, வன ஜீவராசிகள் திணைக்களம் தனக்குரியது என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அவ்வாறானால் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு, அந்த இடம் எனக்குத் தெரியும், அப் பகுதியில் எந்தக் காடும் இருக்கவில்லை, அதனால் அப் பகுதியை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறூந்தூர்மலை பகுதியில் உள்ள 341 ஏக்கரில் 6 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வற்றை மக்களிடம் வழங்க (ஜனாதிபதி ) நீங்கள் கூறியும் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நிலங்களில் தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லைக் கல்லை அகற்றி விட்டுத்தரவில்லை என மாவட்ட அரச அதிபர் பதிலளித்தபோது, அந்த இடத்தை மாவட்ட அரச அதிபரே உடன் விடுவிக்க வேண்டும், தொல்லியல்த் திணைக்களத்திற்கு ஏதும் பிரச்சினை என்றால் என்னுடன் பேசுமாறு தொல்லியல் திணைக்களத்திற்குப் பதிலளியுங்கள் என ஜனாதிபதி உத்தரவிட்டார் என அறிய வந்தது.