தேர்தல் நடத்த முடியாது என ஜனாதிபதி தெரிவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சபையில் போராட்டத்தை மேற்கொண்டதால் ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச்சென்றார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில் தேர்தலை நடத்துவதற்கு தற்போது பணம் இல்லை என பல தடவைகள் தெரிவித்து வந்தார். இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் ஜனாதிபதி அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்ற கருத்தையே தெரிவித்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,விமல், டலஸ் அணி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக சபைக்குள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்திக்கொண்டிருந்தனர். இறுதியில் ஜனாதிபதி தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு இணக்கம் தெரிவிக்காமல் செயற்பட்டுவந்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடுவில் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்தபோது, உடனடியாக ஜனாதிபதி சபையில் இருந்து வெளிறிச்சென்றார்.
ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச்சென்றதும் சபை நடுவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துவந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியடைந்து தங்களின் ஆசனங்களுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றன.