முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு சென்ற தமிழ் மக்கள் பெரும் களேபரத்தின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மலையிலிருந்து மக்களை கீழே இறக்குவதற்கு பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும், தள்ளிவிழுத்தப்பட்டதாகவும் பலர் குற்றம்சுமத்தினர்.
குருந்தூர் மலையில் பொலிசார், விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பின் மத்தியில் சிங்கள இனவாதிகளும், பிக்குகளும் ஆடிய சன்னத்தினால் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.
இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு சிங்கள கடும்போக்காளர்கள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர். வெளியிடங்களில் இருந்து 2 பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள். க.சிவனேசன், பா.கஜதீபன், து.ரவிகரன் உள்ளிட்டவர்களும் அங்கு சென்றிருந்தனர்.
பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொண்ட போது, அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என சிங்கள இனவாத தரப்பினர் மிரட்டல் விடுத்தனர். பிக்குகளும் சன்னதமாடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மோதுவதை போன்ற சூழல் ஏற்பட்டது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை சிங்கள இனவாத தரப்பினர் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்கவில்லை.
தொல்பொருள் திணைக்கள பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருந்தார். அவரும் பொங்கல் மேற்கொள்ள முடியாது என்றார்.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்ற அனுமதியுடனேயே பொங்கலுக்கு வந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொங்க முடியாது என்றால் அதை எழுத்துமூலம் தருமாறு கேட்டார்.
இதையடுத்து சுருதியை மாற்றிய தொல்பொருள் திணைக்கள பிரதிநிதி, கட்டுப்பாடுகளுடன் பொங்கல் செய்யலாம் என்றார்.
நிலத்தில் தீ மூட்டாமல், நிலத்தில் கல் வைத்து அதன் மேல் தகரம் வைத்து, அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு கூறினார்.
தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, மீண்டும் சிங்கள இனவாத தரப்பினரும், பிக்குகளும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது முல்லைத்தீவு பொலிசார் அடாத்தாக செயற்பட்டு, பொங்கலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை சிதைத்தனர். பொலிஸ் அதிகாரியொருவர் சப்பாத்து காலால் கற்பூர தீயை மிதித்து அணைத்தார்.
மலைக்கு கீழே பொங்கி, பொங்கலை எடுத்து வந்து மேலே படையல் செய்யலாம் என பொலிசார் கடுமையான நிபந்தனை விதித்தனர். எனினும், தமிழ் மக்கள் அதை ஏற்கவில்லை. குருந்தூர் தலையில் தமக்குள்ள வழிபாட்டு உரிமையை சுட்டிக்காட்டினர்.
எனினும், பொலிசார் பொங்கலுக்கு அனுமதியளிக்கவில்லை.
பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் அனைவரையும் மலையிலிருந்து கீழே இறங்கி செல்லுமாறு பொலிசார் கட்டளையிட்டனர். அதே சமயத்தில், இன்று குழப்பத்தில் ஈடுபட்ட சிங்கள தரப்பினர், சட்டவிரோத விகாரை பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர்.
தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பிய தமிழ் தரப்பினர்,அங்கு கூடி, சிறிய மத அனுட்டானத்தில் ஈடுபட்டனர்.
சிங்களவர்களையும் மலையிலிருந்து இறக்கினாலே நாமும் இறங்குவோம் என பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் குறிப்பிட்டனர். இதையடுத்து, பொலிசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு, தமிழ் தரப்பினரை மலையிலிருந்து கீழே இறக்கினர்.
இதன்போது, பலரை பொலிசாரால் பலவந்தமாக தள்ளினர். சிலர் தாக்கப்பட்டனர். அண்மையில் முல்லைத்தீவில் முஸ்லிம் காங்கிரசின் தராசு சின்னத்தில் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் என்ற இளைஞன் தாக்கப்பட்டு, இரத்தம் வழிந்த நிலையலிருந்தார்.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும், து.ரவிகரனும் தள்ளிவிழுத்தப்பட்டனர். இதனால் தமது காலில் உபாதையேற்பட்டுள்ளதாக கஜதீபன் குறிப்பிட்டார்.