5 இலட்சம் வரிக் கோப்புக்கள் இருந்தாலும் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறிலங்கா சுங்கத் திணைக்களம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பனவற்றுடன் தமது குழு தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதுடன் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கும் போது, நாட்டின் பணவீக்கம், கையிருப்பின் அளவு மற்றும் அரசாங்க வருமானம் ஆகியனவற்றில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது முக்கியமாகும்.

எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து இலட்சம் தனிநபர் வருமான வரிக்கோப்புகள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் 31 ஆயிரம் பேரே வரி செலுத்துகிறார்கள். வரையறுக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் 328 நிறுவனங்களிலிருந்தே வரி வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையான 904 பில்லியன் ரூபாய் தொகையை உரிய தரப்பினரிடம் அறவிடுவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.