பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை.
காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.
மாகாண சபை முறைமை வெள்ளையானை போன்றது. புதிய அரசியலமைப்புக்கே மக்களாணை உண்டு, ஆகவே மாகாண சபையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு குறித்து ஜனாதிபதி புதன்கிழமை (9) விசேட உரையாற்றினார். நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை பார்வையிட்டுள்ளேன்.
பௌத்த தொல்பொருள் மரபுரிமை வாய்ந்த வவுனியாவில் வெடுக்குநாறி பகுதியில் உள்ள பௌத்த மரபுரிமை சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காணி அதிகாரம் வழங்காத போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் இவ்வாறு அழிக்கப்படும் போது காணி அதிகாரத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மரபுரிமை சின்னங்கள் காணப்படுகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே எங்களின் உரிமை இவை சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சொந்தமானது.
பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு எதிர்மறையாக செயற்படும் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாடு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரே அதிகார பகிர்வை கோருகிறார்கள்.
விடுதலை புலிகளின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. 30 வருடகால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாததை தற்போது தட்டில் வைத்து வழங்க முயற்சிப்பது முறையற்றது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் பேர் உயிர் நீத்தார்கள், 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள் தமது உடல் அங்கங்களை அர்ப்பணித்தார்கள்.
மாகாண சபைகள் செயற்பட்ட போது 10 கல்வி அமைச்சர்கள்,10 விவசாய அமைச்சர்கள் என பல அமைச்சர்கள் இருந்தார்கள். நாட்டில் தற்போது கல்வி,சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளதா இல்லை, மாகாண சபை முறைமை வெள்ளை யானை போலவே உள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே மக்களாணை உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை நீக்கி புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.