13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் மூலமே தீர்வைக் காண முடியும் – மிலிந்த மொரகொட

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்மிலிந் த மொராகொட இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது பூகோள அரசியல் மற்றும் மூலோபாய அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என மிலிந்தமொராகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பே எங்களின் பாதுகாப்பு எங்கள் மத்தியில் நீண்டகால நாகரீக உறவுகள் காணப்படுகின்றன நாங்கள் ஒரே இரத்தத்தை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக தொடர்பாடல்களும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன அவை இலங்கைஜனாதிபதியின் விஜயத்தினால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய பிரதமரின் கருத்து குறித்து டைம்ஸ்ஒவ் இந்தியாவிற்கு கருத்து தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட 13 வது திருத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து எந்த சந்தேகமும் இல்லை,எனினும் இதற்கு நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைநல்லிணக்கம் குறித்த ஆர்வத்துடன் உள்ளது ஜனாதிபதி தொடர்புபட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் இலங்கை ஆழமாக துருவமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம் நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தான் என்ன செய்ய முயல்கின்றார் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதன் மூலம் அவர் அதனை செய்ய முயல்கின்றார்,எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.