சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு பகுதியிலே பேசும் பொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. அவ் ஆலயத்தின் வரலாறு அதாவது எம் தமிழ் இந்துக்கள் இவ் ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழமையானது.
இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந் நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடுன்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள் .
அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது குருந்தூர் மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.
எனவே நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வை தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக 9 மணியளவில் மிக பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டு தன்மைகளை பேணுவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அதுமட்டுமல்லாது இம் மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.