தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை, 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த கப்பல் மதியம் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மதியம் 1.20 மணியளவில் மீண்டும் நாக பட்டினத்திற்கு 31 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலை இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 இலங்கை ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.
இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்த நிலையில் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. அதனால் 40 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.