அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலைக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும் – சபா குகதாஸ் தெரிவிப்பு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அவர்களது சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் வலுப் பெறுகின்ற சம நேரத்தில் நாட்டில் சகல அடிப்படைப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கின்றன இவ்வாறான விலை அதிகரிப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ்தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள உயர்வுக் கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஊதியம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கான குறைநிரப்பு செயற்பாட்டை அடிப்படை பொருட்களின் விலை உயர்வு மூலமே அரசாங்கம் பெற முயற்சிக்கின்றது அத்துடன் அதிகரித்த சம்பளத்தை உடனடியாக பொருட்களின் விலை உயர்வு மூலம் பறித்தெடுக்கின்றது அரசாங்கம்.

அரசாங்கம் வருமான மார்க்கங்கள்  யாவற்றையும் இழந்து அன்னியச் செலாவணியை பெறமுடியாத சூழ்நிலையில்  இருக்கின்ற போது சம்பள உயர்வு கோருவதால் அரசாங்கமே தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்  கொள்வதற்காக விலை உயர்வை கையில் எடுக்கின்றது.

சம்பள உயர்வு கோரல் மூலம் மேற் கொள்ளப்படும் விலை உயர்வு   அரச ஊழியர்களை மாத்திரமல்ல நாட்டின் ஏனைய இரண்டு கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கொடூரமாக பாதிக்கும் இதனால் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை விட பொருட்களுக்கான நிர்ணய விலை கோரிய போராட்டங்கள் வலுப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் .

மேலும் அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலையே பெரும் எண்ணிக்கையில் வாழும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு  ஆதாரமாக இருக்கும் எனவே அரசாங்கம் அடிப்படைப் பொருட்களின் விலைகளை நிர்ணய முறையில் பேண வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வட இலங்கையிலும் பரவலடைய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.