போர் முடிந்துவிட்டது உண்மைதான் ஆனால் சமாதானம் பிறக்கவில்லை! சித்தார்த்தன்

” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். எமது கொள்கையென்பது எங்கள் மக்களின் அபிலாஷைகளையே பிரதிபலிக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும், அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என எமது மக்கள் தெளிவாக எடுத்துரைத்துவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆணை வழங்கிவருகின்றனர். எனவே, இது ஓரங்கட்டக்கூடிய விடயம் அல்ல.

எமது பகுதிகளுக்கு அபிவிருத்தி என்பதும் அவசியம். அந்த விடயத்தை நாம் மறுக்கவில்லை. அதைவிடவும் அரசியல் தீர்வே அடிப்படையாக உள்ளது.

கொரோனாவால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு கொரோனாவும் ஓர் காரணம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நாட்டில் பொருளாதாரம் மேம்படவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு மூலக்காரணியே இந்த இனப்பிரச்சினைதான். பண்டா – செல்வா காலம் தொட்டு பல பேச்சுகள், போராட்டங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் நியாயமான தீர்வு இல்லை. அந்த தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

போர் முடிவடைந்திருந்தாலும் சமாதானம் வந்துவிட்டதாக கூறமுடியாது. போர் ஏற்படுவதற்கு வழிசமைத்த காரணிகள் இன்னும் அவ்வாறே உள்ளன. இதற்கு சரியான பரிகாரம் தேட வேண்டும். புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஜனாதிபதி சொல்கின்றார். அதன் ஊடாகவேனும் நிலையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்றார்.

Posted in Uncategorized

சுற்றுலாப் பயணிகளிடம் டொலர்களை அறவிடுமாறு உத்தரவு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு விசேட உத்தரவை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.

இதன் ஊடாக நாட்டுக்குள் வரும் டொலர்களை அதிகரிப்பது மத்திய வங்கியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வணிக வங்கிகள் இறக்குமதி பத்திரங்களை வழங்கும் போது, வங்கிக்கு கிடைக்கும் அந்நிய செலாவணிகளின் விகிதங்களுக்கு நிகராக பணத்தை வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையானது நிரந்தர வைப்பு வசதிகளின் வீதத்தையும் நிரந்தர கடன் வசதி வீதத்தையும் தலா இலக்கம் 50 என்ற வகையில் 5.50 வீதமாகவும் 6.50 வீதமாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியுடன் இணைந்து மைத்திரி கட்சியை அழித்து விட்டார்! சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அவர், நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டாம் என நான் கூறினேன். அதனை கவனத்தில் கொள்ளாது அந்த கட்சியுடன் இணைந்தனர். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றினேன்.

தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமையை அழித்து விட்டது. மிகவும் கவலைக்குரியது. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. யுத்தம் பயங்கரமாக நடைபெற்ற காலத்தில் நான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன்.

ஒருவர் கூறுவது மற்றுமொருவருக்கு தெரியவில்லை. காலையில் கூறுவதை மாலையில் மாற்றி விடுகின்றனர். பெரிய சிக்கல். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விட்டனர்.

மொட்டு கட்சியுடன் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக கூறி வந்தேன். நாம் அழிந்து விடுவோம் என்று சுட்டிக்காட்டினேன். இதனை கூறியமைக்காக என்னை கட்சியின் அரசியல் சபையில் இருந்து விலக்கினர்.

என்னை அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கினர். நாங்கள் பல வருடங்களாக கூறியமை மைத்திரிபால சிறிசேன தற்போது கூறுகிறார். இந்த மனுஷனை விரட்ட வேண்டாமா? என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு மேற்கொண்ட விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சந்திரிக்கா நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் ஆணைக்குழுவிற்கு செல்லவில்லை. விசாரணை அதிகாரிகள் பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை – வினோ எம்பி!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அவருக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்காமை தொடர்பில் கவலையும் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம் பெற்ற சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கணேஷ் இந்துகாதேவி மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்.அரசு அவருக்கு பயண அனுமதியை வழங்கியதே தவிர வேறு எந்த உதவிகளையும் வழங்கவில்லை .அவரின் பாகிஸ்தான் பயணத்துக்கு எமது பொது அமைப்புக்களே நிதி உதவி செய்தன.இவ்வாறான நிலையில் தான் அவர் தங்கம் வென்று நாட்டுக்கும் வன்னி மண்ணுக்கும் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரைப்போன்ற எத்தனையோ திறமையான, நாட்டுக்கு பெருமை தேடித்தரக்கூடிய வீர,வீராங்கனைகள் வடக்கு,கிழக்கில் உள்ளனர். அவர்களுக்கு அரசு வாய்ப்புக்களையும் வசதிகளையும் வழங்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கையில் 11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு ஐந்து நட்சத்திரங்கள்!

இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக நாட்டின் இளைஞர் யுவதிகள் உட்பட்ட பொதுமக்கள், எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் அவர் இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் அரசியல்வாதிகள் மாறப்போவதில்லை என்பதன் காரணமாகவே இளைஞர் மற்றும் யுவதிகள், அரசியல் கலாசாரத்தை மாற்றவேண்டும் என்று தாம் கோருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இளைஞர் யுவதிகள் இந்த மாற்றத்தை எதிர்பார்த்தபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். எனவே எதிர்காலத்தில் பொதுமக்கள் தூரநோக்கத்துடன் செயற்படுமாறு சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பு இல்லாத நாடாக இங்கிலாந்து இருக்கின்றபோதும் இங்கிலாந்தில் ஜனநாயகம் சிறப்பாக பேணப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது ஆதரவாளர் ஒருவரையும் அழைத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தமது பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.

எனினும் இலங்கையின் அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது தமது வளர்ப்புப்பிராணிகளையும் கொண்டு செல்கின்றனர் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் இளவரசர் அன்றூ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே, அவர் வகித்து வந்த அட்மிரல் பதவியை மஹாராணி ரத்துச்செய்தார்.

Posted in Uncategorized

பிரிட்டனில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரியுள்ள ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின்​ புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் , இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஒரே சமூகமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் இலக்கென இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்களின் அடைவு மட்டம், மிகுந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக தாரிக் அஹமட் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதனை மேலும் பலப்படுத்துவதற்தான திட்டத்தை வகுத்து முன்னோக்கி செல்வதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடிவும் என அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் இன்று (20) மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

மார்ச் மாத ஜெனிவா அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளுக்கு பிரித்தானியா தலைமை தாங்குவதனால், அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பிரித்தானிய அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் விஜயம்

பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் இன்று காலை யாழ். வலி வடக்கு மயிலிட்டித்துறை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton கலந்து கொண்டிருந்தார்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குறித்த பகுதிக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு தச்சு வேலைக்கான இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது முதலீடு, புலம்பெயர் மக்கள், கல்வி உள்ளிட் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையைத் தரமிறக்கியமை தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் மீண்டும் விளக்கம்

சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் குறிகாட்டியைப் பொறுத்தமட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழல் கட்டுப்பாடு ஆகியவற்றில் இலங்கை 5 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குறிகாட்டியில் இலங்கை ஐம்பதை விடவும் குறைவான நிலையிலிருப்பது நாட்டின் கடன் நிலைவரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடையும் பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 19 ஆம் திகதி புதன்கிழமை செலுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இயங்கும் மூன்று முக்கிய கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஃபிட்ச் ரேட்டிங்’ தரப்படுத்தல் முகவர் நிறுவனம் இலங்கையை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாகக் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவித்தது.

நாட்டின் கையிருப்பில் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாகப் பல்வேறு காரணங்களால் இலங்கையை ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாக ஃபிட்ச் ரேட்டிங் விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமானது இலங்கை தொடர்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புடன் மேலும் சில காரணிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய அறிவிப்பை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை சர்வதேச பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை நேற்றைய தினத்திற்குள் (18 ஆம் திகதி) செலுத்தவேண்டியிருந்த நிலையில், அக்கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அப்பதிவில் ஆளுநர் இலங்கையைத் தரமிறக்கம் செய்திருக்கக்கூடிய மூன்று முக்கிய சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், மூடியின் முதலீட்டாளர் சேவை மற்றும் ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளையும் இணைத்திருக்கின்றார்.

எனினும் வெளிநாட்டுக்கையிருப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாடு பாரிய டொலர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களைக்கூட இறக்குமதி செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

எனவே மத்திய வங்கியினால் கடந்த 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் கையிருப்பில் உள்ள 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்துமாறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் – அமைச்சர் காமினி லொகுகே

மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனல் மின்நிலையத்தில் 300 மெகாவாட் மின் உற்பத்தி இழக்கப்பட்டுள்ளதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனல் மின்நிலையததில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறினை எதிர்வரும் 24 ஆம் திகதி சீர் செய்ய முடியும் என மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் சபுகஸ்கந்த,களனிதிஸ்ஸ மற்றும் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள மிதக்கும் மின் நிலையத்திற்கு டீசல் மற்றும் உராய்வு எண்ணெயை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மின்நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 1500 மெற்றிக் தொன் உராய்வு எரிபொருள் அவசியமாகவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கிய 3000 ஆயிரம் மெற்றிக்தொன் உராய்வு எண்ணெய் இன்று மாலையுடன் நிறைடைந்தது.

இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து தற்காலிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிப்பெறவில்லை.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பலை விடுவிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடமும், நிதியமைச்சிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்கவே எதிர்பார்த்துள்ளோம். மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் மின்பாவனையாளர்களுக்கு முன்கூட்டியதாக அறிவிக்கும் வகையில் மின்துண்டிப்பு செய்யப்படும் நேரம் குறித்து அட்டவணை தயாரிக்குமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் தளமாக மாறிவிடுமா?

கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை “பொருளாதார மாற்றத்துக்கான காரணி” என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள்.

பரந்த மணல் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சர்வதேச நிதி மையம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு மெரினா ஆகியவை உருவாகப் போகின்றன. அதன் உருவாக்கத்துக்கு பிறகு இது ஒரு துபாய், மொனாக்கோ அல்லது ஹாங்காங் உடன் ஒப்பிடும் அளவிற்கு இருக்கும்.

“இந்தப் பகுதியால் இலங்கை வரைபடம் மீண்டும் வரையப்படலாம். உலகத்தரம் வாய்ந்த தகுதியை அடையும், உதாரணமாக துபாய் அல்லது சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடப்படலாம்” என்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், உண்மையில் இலங்கைக்கு இது எந்தளவுக்கு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

665 ஏக்கர் (2.6 சதுர கிமீ) புதிய நிலப்பரப்பு உருவாக்குவதற்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது சீன துறைமுக பொறியியல் நிறுவனம் ( China Harbour Engineering Company – CHEC). இதற்காக இலங்கை அந்த நிறுவனத்திற்கு 43 சதவீத பகுதியை 99 ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்க உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த கட்டமைப்பு பணிகள் இங்கு நடந்து வருகிறது. தற்போது இது வேகமடைந்து புதிய நகர வடிவம் பெற்று வருகிறது.

சீன பொறியாளர்களால் கண்காணிக்கப்படும் இந்த இடத்தில் பெரிய கிரேன்கள் கான்கிரீட் அடுக்குகளை நகர்த்துகின்றன, மறுபக்கம் மண் அள்ளுபவர்கள் லாரிகளில் டன் கணக்கில் மணலை நிரப்பி வருகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நிலப்பரப்பு வழியாக செல்லும் ஒரு நதி உள்ளது. அது தற்போது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு சிறு படகுகள் அதில் சென்று வருகின்றன.

தெற்காசியாவிலேயே முதல் முறையாக இம்மாதிரியான திட்டம் இங்குதான் நடைபெறுகிறது. இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெற சுமார் 25 ஆண்டுகள் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் புதிய பகுதியும் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பகுதிகளும் பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இங்கு வரக்கூடிய நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதியையும் இலங்கை அரசாங்கம் கட்டணமாக கேட்கலாம் என்றும் சொல்லப்படுகிறது .

புதிதாக உருவாக உள்ள நகரத்தில் சுமார் 80,000 பேர் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு முதலீடு செய்து வணிகம் செய்பவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சம்பளம் உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலர்களில் இருக்குமாம்.

ஆசியா மற்றும் ஐரோப்பா இடையிலான வர்த்தக மேம்பாட்டிற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் சாலை, ரயில் மற்றும் கடல் போக்குவரத்து திட்டம் தொடங்கிய அதே காலக்கட்டத்தில் 2014-ல் அவர் கொழும்பு வந்திருந்த போது இலங்கையில் இந்த துறைமுக நகரத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்திருந்த அதேவேளையில், 2009-இல் போர் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் இலங்கையை சீரமைக்க சீனாவிடம் அன்றைக்கு இலங்கை உதவிகேட்டிருந்தது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின் போது, ​​மகிந்த ராஜபக்ச இலங்கையின் அதிபராக இருந்தார், ஆனால் அவர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலில் தோல்வியடைந்தார். சீனாவிடம் இருந்து அதிக அளவில் இலங்கை வாங்கிய கடனாக தெற்கில் அம்பாந்தோட்டை துறைமுகம் கடன் பார்க்கப்பட்டது. இது அன்றைக்கு தேர்தலில் வாக்களிக்க இருந்த இலங்கை வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜபக்ச இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார், அவரது இளைய சகோதரர் கோட்டாபய அதிபராக உள்ளார்.

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது இலங்கையின் கையில் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போது இருந்த இலங்கை அரசாங்கத்தின் கீழ், சீனாவிடம் இருந்து வாங்கிய கடனுக்கு துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்து விட்டது.

இலங்கையில் புதிதாக உருவாகவுள்ள துறைமுக நகரம் ஒரு தரப்பினரை மகிழ்ச்சி அடைய செய்தாலும் மற்றொரு தரப்பினர் அதற்கு கவலை தெரிவித்துள்ளதற்கான காரணம், கடந்த காலத்தில் சீனாவுக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக ஒரு துறைமுகத்தை கொடுத்துவிட்டோம், தற்போது அது போல் சீனாவின் ஆளுகைக்குள் தான் இந்தத் திட்டம் நடைபெறுகிறது என்ற அச்சம் தான்.

இத்திட்டத்தின் மீது வேறு சில கவலைகளும் உள்ளன எனவும், அதில் இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அடங்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இந்தத் திட்டத்தினால் இலங்கைக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அப்படியான முன்னேற்றம் இருக்காது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இந்தத் திட்டம் சம்பந்தமாக பொருளாதார நிபுணர் தேஷால் டி மெல் கூறுகையில், “இந்த துறைமுக நகரத்துக்கு என பிரத்தியேகமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். அந்த சட்டத்தின்படி இங்கு முதலீடு செய்பவர்களுக்கு 40 வருடம் வரை வரிச் சலுகை அளிக்கப்படும் என்று சொல்கின்றனர். இதனால் இலங்கை நாட்டிற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்” என்கிறார்.

இது சம்பந்தமாக அமெரிக்கா கூறுகையில், குறைந்த அளவிலான வரிகளை அறிவிப்பதன் மூலம் கருப்புப் பணத்தின் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்துள்ளது.

இலங்கையின் நீதி அமைச்சர் மொஹம்மத் அலி சப்ரி இதை முழுமையாக மறுக்கிறார்.

“சாதாரண குற்றவியல் சட்டம் இங்கு பொருந்தும் என்பதால் அது நடக்க வாய்ப்பில்லை. எங்களிடம் பணமோசடிச் சட்டம் உள்ளது, எங்களிடம் எங்கள் நிதிப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. எனவே, யாரும் கருப்பு பணம் போன்ற வேலைகளை செய்தால் தப்பமுடியாது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

உலக அளவில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரக் கூடிய சூழலில் இலங்கையில் சீனா அமைக்கும் துறைமுக நகரத்தால் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும் என்று இந்தியா கவலைப்படுகிறது.

இது சம்பந்தமாக இந்தியா மட்டுமல்ல இலங்கையும் கொஞ்சம் கவலைப்படவேண்டும். காரணம், 2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் லாவோஸ் ரயில்வே பாதை இணைக்கும் ஒரு திட்டத்தை தொடங்கினர். இந்தத் திட்டத்தில் லாவோஸ் நாடு பெரிய கடன் சுமைக்கு ஆளானது. அப்போது லாவோஸின் எரிசக்தி அமைப்பின் ஒரு பகுதியை சீனாவிற்கு விற்றதன் மூலம் மட்டுமே லாவோஸ் கடன் சுமையில் இருந்து தப்பிக்க முடிந்தது.

“இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு – சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?”

கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த கோரிக்கை

இந்தியாவுடன் நெருங்கும் இலங்கை: அவசரப் பயணம் மேற்கொள்ளும் சீன வெளியுறவு அமைச்சர்

லாவோஸுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கும் இதற்கு முன்னால் இத்தகைய அனுபவம் உண்டு. வருங்காலத்தில் இந்த புதிய துறைமுக நகரத்தையும் சீனாவிடம் விற்க நேரிடலாம்.

இலங்கை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பிபிசியிடம் கூறுகையில் “இந்த அரசாங்கம் சீனர்களுக்கு இணங்கிய நேரத்தில், துறைமுக நகரத்தில் உள்ள அனைத்தையும் சீனா கையகப்படுத்தியுள்ளது,” என்று தெரிவித்தார்.

சீன கல்வியாளர் ஜௌ போ இதை முற்றிலும் மறுத்து, “இரு நாடுகளும் பயனடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.

“சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி ஒரு தொண்டு அல்ல. நாங்கள் பரஸ்பரமாகப் பயனடைய விரும்புகிறோம். அதாவது எங்களது முதலீடுகள் பொருளாதார ரீதியில் லாபம் ஈட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியின் மூத்த கர்னல் சௌ பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகளும் இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். “துறைமுக நகரத்தின் முழுப் பகுதியும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரோந்து, காவல்துறை, குடிவரவு மற்றும் பிற தேசிய பாதுகாப்பு கடமைகள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது” என்று துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்தார்.

ஆனால், இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் முழுமையாக இழந்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைகிறது.

தற்போது இலங்கை நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் 45 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அதில் சீனாவுக்கு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த சூழலில் சீனாவிடம் மொத்தக் கடனில் சிலவற்றை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுள்ளது இலங்கை. ஆனால் அதற்கான பதில் இன்னும் இலங்கைக்கு எதுவும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில் கொழும்புவால் தனியாக பன்னாட்டு முதலாளிகளை ஈர்க்க முடியாத சூழல் உள்ளது.

இதனால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக மீள்வதற்கு சீனாவை தவிர வேறு எந்த வழியும் இல்லை.

இந்த புதிய துறைமுக நகரம் வெற்றிகரமாக அமைந்தாலும் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தைத் தக்க வைக்க இந்த நகரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே பலரும் நம்புகின்றனர்.

BBC