கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமலுக்கு வருகிறது

2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட் -19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி குறித்த சட்டமூலம், வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

கொவிட் 19 நிலைமை காரணமாக சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சில செயல்களை தனிநபர்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய முடியாத நிகழ்வுகள் குறித்தும் அதேபோன்று கொவிட் சூழ்நிலையால் சில நீதிமன்றங்களுக்கு அதன் செயற்பாடுகளை தொடர முடியாத சந்தர்ப்பங்களில் மாற்று நீதிமன்றங்களை நியமிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், கொவிட் நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவற்காக தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் செல்லுதல், கொவிட் நிலைமை காரணமாக ஒப்பந்த கடமைகளை நிறைவேற்ற முடியாத சில ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய விடயங்களுக்கு தற்காலிக ஏற்பாடுகளை வழங்குவதும் இந்த சட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

Posted in Uncategorized

ஒரே நாளில் கொரோனாவுக்கு 209 பேர் பலி,உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 351,069 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு 4 இலட்சத்தை கடந்தது

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3348,930 க அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 46,605 பேர் வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்சிஜன் வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கெஹெலிய கோரிக்கை

இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதிகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சுவசிறிபாய – சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதி தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமானதொன்று எனவும், ஒக்சிஜன் தேவைப்பாடு தொடர்பில் முன்னுரிமை வழங்கி, இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, Tocilizumab மருந்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியருக்கு கொலை மிரட்டல்: ரிஷாட் பதியுதீனிடம் சிறைச்சாலை தீர்ப்பாயம் விரைவில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மெகசின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகரின் பரிந்துரைக்கு அமைய, தீர்ப்பாய விசாரணையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 87-இன் முதலாம் பிரிவிற்கு அமைய, சிறைச்சாலைக்குள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை, சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய, வைத்தியரை அச்சுறுத்தியமை தொடர்பான விடயத்தை தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் நீதவான் ஒருவரினால் சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மற்றும் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் ​கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஆராய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை வழங்க ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் 1979 இலக்க 48 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 -ன் படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம், உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக்குழுவின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி அசோக டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெயின்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் நாயகம் சுஹந்த கம்லத் ஆகியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமான ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்படாத காரணத்தால் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தமது உரிமைகள் தொடர்பில் விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டதுடன் குறித்த சிறைக்கைதிகளுக்கு அவர்களது பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது – பிரசன்ன

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என அவர் கூறினார்.

எவ்வாறிருப்பினும் Bio-bubble திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதி​களையும் ஏற்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட கும்பலானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மிக சூட்சுமமாக, குறித்த பயங்கரவாத வலையமைப்பு 2 ஆம் நிலை குழுவொன்றினை தயார் படுத்தி, சிறுவர்களுக்கு தமது சிந்தனைகளை விதைத்துள்ளமையும் அவ்விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரையிலான விசாரணைகளில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 311 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலின் கீழ் உள்ளனர்.

பல வங்கிக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 365 மில்லியன் ரூபா பணம், அசையும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு, 168 மில்லியன் சொத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இதுவரை 11 குற்றப் பத்திரிகைகள் 46 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 இற்கும் அதிகமான சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு ஆவணங்கள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டுள்ளன.

சுமார் 52 ஆயிரம் பக்கங்களை கொண்ட 104 ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளன.

எனவே இது ஒரு பரந்துபட்ட விசாரணை என்பது தெளிவாகின்றது. இவ்விசாரணைகள் தொடர்பில் எனக்கு எந்த அழுத்தங்களும் எவராலும் பிரயோகிக்கப்படவில்லை.

இந்த குண்டுத் தாக்குதல்களில் இறந்த, காயமடைந்தவர்களுக்கு நிலை நாட்டப்படும் நியாயமாக, உறுதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகளை தண்டிப்பதையே நாம் கருதுகின்றோம். எனவே தான் மிக ஆழமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது சீன இராணுவம்

சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் (People’s Liberation Army of China) இலங்கை இராணுவத்திற்கு Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 300,000 சினோபார்ம் தடுப்பூசிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு வீசா!

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் வீசா வழங்கும் நடைமுறையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘இணையவழி இலத்திரனியல் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையின் (ETA)’ மூலம் சுற்றுலா வீசா விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘இலங்கை சுற்றுலா கைத்தொலைபேசி செயலி (Mobile App)’ இனைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்கும் குறித்த நடை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த 2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்வரும் வகையில் வீசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

சார்க் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 70 அமெரிக்க டொலர்கள்
சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 85 அமெரிக்க டொலர்கள்
சிங்கப்பூர், மாலைதீவு, சீசெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 50 அமெரிக்க டொலர்கள் (குறித்த நாடுகளுடன் தற்போதுள்ள இருதரப்பு உடன்படிக்கைகளுக்கமைய)