நல்லூர் வீதிதடைகள் நீக்கம்!

நல்லூர் கந்தன் அடியவர்களுக்கான அறிவித்தல்.

•தற்கால கோவிட் 19 சூழலில் நல்லூர் கந்தன் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வீதித் தடைகளுக்கு உள்ளே உள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட பூஜை நேரங்களான காலை 04.00 – 5.30, காலை 10.00 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அனுமதி வழங்கப்படும்.

•விசேட திருவிழா நாட்களில் மேற்படி அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மேலும் இந்நடைமுறையில் தேவைப்படின் நாட்டின் சுகாதார நிலைமையின் அடிப்படையிலும் சுகாதார வைத்திய அதிகாரியின் மேலதிக பணிப்பின் அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.

யாழ். மாநகர முதல்வர்
வி.மணிவண்ணன்

ரணிலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்துள்ளார் என ஐக்கியத் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய கொரோனா நிலைமை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ரணில் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசியல் தலைவர்கள் முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஐ.தே.க ஏற்கனவே தங்கள் சொந்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி இந்த கோரிக்கைக்கு சாதகமாக இருந்தார் என்றும் ஆனால் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்ப விடுக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் அனைத்து கடைகளுக்கும் பூட்டு

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (17) திருகோணமலை நகர சபையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய, இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் திருகோணமலை நகரசபைத் தலைவர் என்.ராஜநாயகம் தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யும் முகமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிறுகடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும், நடமாடும் சேவைகள் மூலம் மீன் மற்றும் மரக்கறி வகைகளை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ‘பட்டணமும் சூழலும்‘ பிரதேசசபை தலைவர் சதுன் தர்ஷன ரத்னாயக்க, திருகோணமலை வர்த்தக சம்மேளனத் தலைவர் கே.குலதீபன் மற்றும் ஷிரோமன் ரங்கன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

Posted in Uncategorized

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி

சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாயாகும்.

இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக படையினர் மீது குற்றச்சாட்டு!

பொன்னாலை மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் யுஹ12525 இலக்க மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தினர். இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கினர்.

படையினரின் மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடினர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சமடைந்தனர். சில மணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவு நேரம் மக்களை தாக்கிய படையினரின் செயற்பாடு குறித்து படையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.

பொலிஸார் வந்தால் சிக்கல் நிலை உருவாகும் என உணர்ந்த படையினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் வரை ஓடிச்சென்ற படையினர் அங்கு தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக நள்ளிரவு 11.55 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும் பின்னர் 119 இற்கு அறிவித்தமையால் அதிகாலை 2.00 மணிக்கு வந்து விசாரணை நடத்தினர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ தினம் பிற்பகல் வேளை பொன்னாலை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பொன்னாலை மற்றும் கோட்டைக்காடு இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர் எனவும் இச்சம்பவத்தின் தொடர்ச்சியாகவே படையினர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதுக்குடியிருப்பு சந்தை சுகாதார விதிமுறைகளின் திறக்க ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் சந்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இன்னிலையில் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய வெத்திலை கடை நடத்தும் இருவர் மற்றும் சீட்டு பிடிக்கும் ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்னிலையில் சந்தையினை மீள திறப்பதற்கு வணிகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் நிலமைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது இதன்போது படைத்தரப்பு,சுகாதாரதுறையினர் பொலீஸ் அதிகாரி,பிரதேச செலயல அதிகாரிகள் வணிகர்கள் சார்பானவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் நாளை செவ்வாய்கிழமை சந்தையினை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6000-ஐ கடந்துள்ளது.

மேலும் 161 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டதையடுத்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6096 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று (15) 3,435 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,54,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 2,387 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,09,732 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம்

இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத தெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: சுகாதார அமைச்சராக ஹெகலிய, கல்வி அமைச்சராக தினேஸ்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று திங்கட்கிழமை(16.08.2021) அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புக்களில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்வி அமைச்சராகப் பதவி வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த பவித்ரா வன்னியாரச்சி போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ச இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தி இணைப்புப் பணிகள் கண்காணிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராகவும், டளஸ் அலகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு அமைச்சர்களும் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் மாத்திரம் இவ்வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு

இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை நாளையதினம் மாத்திரம் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை நாளையதினம் (17) மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய நாளை (17) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவிருப்பதுடன், முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 03 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அதியாயம் 235) தீர்மானங்கள் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

அத்துடன், பல்வேறு காரணங்களால் இதுவரை கேட்கப்படாதுள்ள வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமையை ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய அன்றையதினத்தில் பாராளுமன்றத்தை அடுத்ததாகக் கூட்டுவதற்கும் இங்கு முடிவானது.