ரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு

ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளும்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ரிஷாட்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொத்தலாவல சட்டமூலம்: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்தங்கள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழு தமது நிலைப்பாட்டை கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

அந்த சட்டமூலத்தில் நான்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாகும்.

அந்த திருத்தங்களாவன…

1. கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வாகத்திலிருந்து விடுபடக்கூடாது

2. பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் அல்லாத பட்டத்திற்கான விண்ணப்பதாரர்களை இணைத்துக்கொள்ளும் போது வௌிப்படைத்தன்மையுடனான Z புள்ளியை அடிப்படையாகக் கொண்ட நீதியான முறைமை தொடர்பில் சட்டமூலத்தில் தௌிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்

3. தொழில் மேற்கொண்டு ஈட்டும் வருமானத்தில், மீள செலுத்துவதை அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கப்படல் வேண்டும்

4. நிர்வாக சபையில் சிவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாகக் காணப்படல் வேண்டும்

Posted in Uncategorized

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா கொடிசீலை வடிவமைப்பாளர்களிடம் காமாட்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் எம்.பிக்களை அரச தரப்பு சபையில் இழிவுபடுத்தும் போது சபாநாயகர் சிரிப்பதா ? – ரோஹிணி குமாரி ஆவேசம்

பெண் எம்.பி.க்களை அமைச்சர்கள், அரச தரப்பு எம்.பி. க்கள் இழிவுபடுத்தும்போது சபாநாயகர் சிரித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட எம்.பி ரோஹிணி குமாரி விஜேரத்ன, சபாநாயகருக்கும் மனைவி, பிள்ளைகள் இருப்பதனை மறந்து விடக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த ரோஹிணி குமாரி விஜேரத்ன எம்.பி.மேலும் கூறுகையில்,

கடந்த பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது தலதா அத்துகோரல எம்.பி. உரையாற்றியபோது அவரை அமைச்சர்கள் சிலரும் அரச தரப்பு எம்.பி.க்கள் சிலரும் மிக மோசமாக இழிவு படுத்தினர். அருவருக்கத்தக்க கருத்துக்களை முன் வைத்தனர். இது பாராளுமன்றம். பெண்களை கேவலப்படுத்துவதற்கான இடமல்ல. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே பெண்களாகவுள்ள நிலையில் அவர்களினால் தமது கருத்துக்களைக்கூட சுதந்திரமாக முன் வைக்க முடியாத நிலையுள்ளது.

பெண் எம்.பி.க்களை அமைச்சர்கள், அரச தரப்பு எம்.பி. க்கள் இழிவுபடுத்தும்போது சபாநாயகராகிய நீங்கள் சிரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கும் மனைவி,பிள்ளைகள் இருப்பதனை மறந்து விடக்கூடாது என்றார்.

இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில், அந்த விடயம் தொடர்பில் நான் தேடிப்பார்க்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 25 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று கும்புறுமூலை இராணுவ முகாமில் நடைபெற்றது.இதில் 7 ஏக்கர் அரச காணியும் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன,வீரசூரிய,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை,கிரான் பிரதேச செயலாளர்களான கோ.தனபாலசுந்தரம்,எஸ்.ராஜ்பாவு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த யுத்த காலத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இவ் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 1980 காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்த காணியின் ஒரு பகுதியில் அரச அச்சக கூட்டுத்தாபனம் அமைந்திருந்தபோதிலும் அது செயல்படாத பட்சத்தில் விசேட அதிரடிப் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்தது.அக்காணியானது தற்போது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டாலும் அப்பகுதியில் வழமைபோல் செயல்பட்டு வரும் வீதி சோதனைச் சாவடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Posted in Uncategorized

எங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை- உறவுகள் கோரிக்கை

அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தங்களுக்கு தேவையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் எந்த நிறுவனங்களையும் நாங்கள் நம்பவில்லை. மனித உரிமை உயர்ஸ்தானிகர் மிசால் பேச்லெட்டை மத்தியஸ்தராக்க விரும்புகிறோம்.

இதனை இலங்கை மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டால், அவர்களின் கோரிக்கையை பற்றி யோசிக்கலாம்.

மேலும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

இந்த ஆணைக்குழு, அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாத்து, சிறந்த மனித உரிமை கலாசாரத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கே உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்கள், ஒருபோதும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை.

இதேவேளை மே 2009 இல் 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு எங்கே இருந்தார்கள்?

எனவே அரசியல் தீர்வு, மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தற்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு தேவை” என குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

‘என் சாவுக்கு காரணம்’ எனும் தமிழ் வாக்கியம் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பிலான நிழற்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பயன்படுத்திய அறையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே, உயிரிழந்த சிறுமி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய புத்தகங்களை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம், உயிரிழந்த சிறுமியினால் எழுதப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

என் தங்கைக்கு ஆங்கிலம் தெரியாது ; அண்ணன்

எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என, மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த ஹிஷாலினி ஜூட், அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளது, இதுதொடர்பில் கேட்டபோதே ஹிஷாலினியின் சகோதரன் திருபிரசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது. ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை.

Posted in Uncategorized

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ராகேஷ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சில காலம் அவர் கண்டியில் இந்திய துணைத் தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான தீர்மானம் – ஐ.நா நிதி ஒதுக்கீடு

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு அமைக்கப்படவுள்ள நிபுணர்கள் கொண்ட குழுவுக்கு 2.8 மில்லியன் டொலர்கள் தேவை என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில் 2021 ஆம் ஆண்டுக்கான 0.74 மில்லியன் டொலர்களையும், 2022 ஆம் ஆண்டுக்கான 2.1 மில்லியன் டொலர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ஐ.நாவின் பொதுச்சபை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இதன் மூலம் 13 அங்கத்தவர்களைக் கொண்ட தனியான செயலணி ஒன்று உருவாக்கப் படவுள்ளது. அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் அனுபவம் கொண்ட ஒருவர் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளதுடன், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப் படுகின்றது. அவருக்கு உதவியாக மேலும் இரு சட்டவலுநர்கள் பணியாற்றுவார்கள்.

அரசாங்கம் தற்போது பயணிப்பதைப் போன்று தொடர்ந்து பயணிக்குமானால்‘ ஐ.தே.கவின் நிலையே ஏற்படும்’

அரசாங்கம் தற்போது பயணிப்பதைப் போன்று தொடர்ந்து பயணிக்குமானால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும் ஏற்படுமென தெரிவித்த தேசிய பாரம்பரியம் மற்றும் கிராமிய கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மக்கள் எப்போதும் பொறுமையுடன் இருக்கமாட்டார்கள். நேரம் வரும் போது மக்கள் தீர்மானங்களை எடுப்பர் என்றார்.

எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் “ஒரே நாடு -ஒரே சட்டம்” என்பதுக்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என தெரிவித்த அவர், ஆனால், இப்போது நாம் சிறிய சந்தேகத்தை உணர்கின்றோம். பிணைமுறி விவகார கொள்ளையர்களைப் பிடித்தார்களா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைப்
பிடித்தார்களா? என வினவினார்.

போகம்பறை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று முன்தினம் (31) மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து திரும்பியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சேதனைப் பசளை என்பது சிறந்த எண்ணக்கரு தான். ஆனால் துரதிஷ்வசமாக ஒரே நேரத்தில் அதனை செய்ய முடியாது. அதற்கென கால எல்லை அவசியம்.மண் மற்றும் கன்றுகள் உயிருள்ளவை. அதனால் தான் அதற்காக விசேட கவனம் செலுத்தப்படுகின்றது” என்றார்.

இலங்கையின் மண்ணும் கன்றுகளும் 40 வருடாக இரசாயன உரத்துக்கு பழகிவிட்டன எனத் தெரிவித்த அவர், எனவே, அது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை ஒரு இரவில் செய்து விடமுடியாது. அதை செய்வதற்கு முறையொன்று உள்ளது என்றார்.

Posted in Uncategorized