பிரித்தானியா தொடர்பில் சீனா கொண்டுவந்த அறிக்கை! இலங்கையும் கையெழுத்து

பிரித்தானியாவின் மனித உரிமை நிலைமை குறித்து கவலைகளை எழுப்பி, சீனாவால் கொண்டுவரப்பட்ட கூட்டு அறிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் போது இந்த கூட்டு அறிக்கை கொண்டுவரப்பட்டது.

“ஒரு குழு நாடுகளின் சார்பாக பேச எமக்கு மரியாதை உண்டு. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை நிலைமை குறித்த எங்கள் ஆழ்ந்த கவலைகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

கடுமையான இனவெறி, இன பாகுபாடு, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறை ஆகியவை ஐக்கிய இராச்சியத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது” என ஜெனீவாவில் உள்ள சீன தூதுக்குழு அறிக்கையை வழங்கிய பின்னர் தெரிவித்துள்ளது.

“இங்கிலாந்தில் குடியேறிகளின் தடுப்பு மையங்கள் மோசமான நிலைமைகளின் கீழ் இயங்குகின்றன. அத்துடன், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன.

மேலும் மனித உரிமைகளை மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட பிரித்தானியா ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தியுள்ளதாகவும், சீன தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

“மேற்கில் மனித உரிமைகள்: சர்வதேச கண்காணிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்காமை” என்ற கருப்பொருளிலான இணைய வழி கலந்துரையாடலை சீனா, பெலாரஸ், ரஷ்யா மற்றும் வெனிசுலா இணைந்து ஏற்பாடு செய்தன.

40 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

பெலாரஸ், ரஷ்யா, வெனிசுலா, ஈரான், வட கொரியா, இலங்கை உள்ளிட்ட பல, இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவசக் கல்விக்கு பேரழிவை ஏற்படுத்தும்: சஜித் பிரேமதாச ​

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலங்கையின் இலவசக் கல்விக்கு பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது தேசிய ரீதியிலான தேவையாக இருந்தாலும், அந்த அடிப்படை தேவைக்கு அப்பாற்சென்று இலவசக் கல்வியை அழிப்பதற்கு உயர் கல்வி கட்டமைப்பிற்கு அப்பால் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் இந்த செயற்பாடு மூலம் உயர் கல்வியின் பண்புகள், தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செல்வாக்கு முற்றாக இரத்தாகும் எனவும் அது இலவசக் கல்வியை பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வட, தென் மற்றும் ஊவா மாகாண ஆளுநர்கள் திடீர் மாற்றம் – தேர்தலுக்கு தயாராகும் பஸில்!

வடமாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட உள்ளனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவின் சகோதரரும், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பியமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மாகாண ஆளுநர் விலி கமகே ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதுதவிர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொடவுக்கு வடமாகாண ஆளுநர் பதவி வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனை அவர் நிராகரித்திருக்கின்றார்.

பின்னர் அவருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவிக்கு யோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனையும் அவர் நிராகரித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேபோல வடமாகாண ஆளுநர் பதவிக்கு சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரது பெயரும் முன்மொழியப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் சில அமைச்சர்களின் ஆசனங்கள் வழமைக்கு மாறாக மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இலங்கை அமைச்சரவை சம்பிரதாயத்திற்கமைய, ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்த ஆசனத்தில் சிரேஸ்ட அமைச்சர்கள் அமரும் இடத்தில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமர்ந்ததாக சொல்லப்படுகின்றது.

அந்த இடத்தில் முதல் ஆசனத்தில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வளவு நாட்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றங்கள் அனைத்தையும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்தே மேற்கொள்கின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தைத் தாபிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மீளாய்வு குழு பரிந்துரை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்யும்போது தற்போது பின்பற்றப்படும் 60, 40 கலப்பு விகிதாரசார முறையை எதிர்வரும் காலத்தில் 70, 30 என்ற வீதத்தில் மாற்றியமைக்குமாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை மீளாய்வு குழு தனது அறிக்கையில் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கின்றது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய குழு நியமனம் | Virakesari.lk

அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும்போது நூற்றுக்கு 60 தொகுதி அடிப்படையிலும் ஏனைய 40வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுகின்றது.

அதனை நூற்றுக்கு 70 தொகுதி அடிப்படையிலும் நூற்றுக்கு 30 விகிதாசார முறையின் கீழ் என்ற அடிப்படையில் மாற்றயமைக்குமாறு குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

நிலையற்ற உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பொன்று ஏற்படுவதற்கு இருக்கும் வாய்ப்பை குறைப்பதே இதன் நோக்கமாகும் எனவும் குழு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது இருக்கும் 8 ஆயிரம் பேர் வரையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் தேர்தலின்போது 6 ஆயிரத்து 500வரை குறையவேண்டும் எனவும் பரிந்துரை செய்திருக்கின்றது.

தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தொகையில் தேவையற்ற அதிகரிப்பு இடம்பெற்றிருக்கின்றது. அது ஆயிரத்து 500வரை குறையவேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை தொடர்பாக மீளாய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கையளித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கோரி தீர்மானம் – அமைச்சர் மஸ்தான்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்ததாவது,

‘ தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில், 106 முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற்றார்களா..? என அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5.42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில்,’ இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்’ என கூறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் முகாமை விட்டு வெளியே சென்று வீடு திரும்புவதற்காக உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்றார்.

Posted in Uncategorized

வட்டுவாகல் காணிகளின் சுவீகரிப்புடன் மக்களின் வாழ்வாதாரமும் பறிபோகிறது ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உள்ளடங்கலான 617 ஏக்கர் கோட்டாபய கடற்படை தளத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் 29/07/2021 சுவீகரிக்க நில அளவைத் திணைக்களம் மக்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றினைய வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 , 2018 ஆம் ஆண்டுகளில் அபகரிக்கும் முயற்சி நடைபெற்றது ஆனால் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக தடைப்பட்டது ஆனால் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு நீதி மன்ற வழக்கு தொடர்கிறது.

2017/08/04 திகதியிடப்பட்ட 2030/44 வர்த்தமானியில் 271,6249 ஹொக்டெயர் நிலத்தை வட்டுவாகல் பிரதேசத்தில் சுவீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பகுதியில் அபகரிக்க முயற்சிக்கும் காணிகளுக்கு அப்பால் அந்த மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடற்தொழில் , விவசாயம் போன்றனவும் பாரிய அளவில் அபகரிப்படவுள்ளன. யுத்தத்தால் பாரிய அழிவை சந்தித்த மக்களின் மீள் வாழ்வை வளம்படுத்துவதை விட்டு இருப்பதையும் பறிக்கும் செயல் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கை. எதிர்காலத்தில் பாரிய சிங்கள கடற்படைக் குடியிருப்பு உருவாக்கப்படுவதற்கான இராணுவத் திட்டம் என்பது மறுப்பதற்கில்லை.

Posted in Uncategorized

அடுத்த மாதம் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை! ஜி.எல். பீரிஸ்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கை காரணமாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர் என்றும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், சில ஆசிரியர்கள் மட்டுமே இன்று கற்பிப்பிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இருப்பினும், ஒன்லைன் கல்வியைத் தொடர வேண்டும் என்றாலும் அது நிரந்தர தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வா பிரதமரை சந்தித்தார்!

அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து துமிந்த சில்வா தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடந்த ஜூன் 24ம் திகதி சிறப்பு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்றவருக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவை ஐ.நா மற்றும் மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன, இது சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக எச்சரித்தது.

அரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, துமிந்த சில்வாவை விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் டொலர் நிதியுதவி: அஜித் நிவார்ட் கப்ரால்

நாட்டின் பொருளாதார இயலுமையை வலுப்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கிடைக்கப் பெறவுள்ளதாக நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு 650 பில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடை அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கும் அந்நிவாரண நிதி கிடைக்கப்பெறவுள்ளது.

உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சர்வதே நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு இவ்வாறு நிவாரண அடிப்படையில் நிதி வழங்குவது வழமையானது. இதனடிப்படையில் 510 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிதியை நாட்டின் பொருளாதார இயலுமையை மேம்படுத்துவதற்காகவும், தற்போதைய நெருக்கடி நிலையினை வெற்றிக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இருந்து நேற்று வரையில் சர்வதேச சந்தையில் ஒரு எரிபொருள் தாங்கியின் விலை 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எரிபொருளில் விலையை குறைப்பதென்பது சிக்கலானது.

தேசிய பொருளாதாரத்தில் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருளின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட காலத்திலும் கடந்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டு மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்பின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டது என்றார்.

Posted in Uncategorized