இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராகவும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்குரிய ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீமானிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

ரணிலுடன் இரகசிய பேச்சு நடத்திய அரசாங்க தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தரப்புடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சென்றுள்ளார்.

“ நீங்கள்தான் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்” என இந்த சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் எனவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான பின்னணியில், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணிலுடன் இணையலாம் என்ற வதந்தியை அரசாங்கத் தரப்பினரே சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க , ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதை நன்கு அறிவார்கள்.

ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்றாலும் அவரது பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட படையினர் வழங்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் காரணமாகவே இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 227,765 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 192,478 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கின் 04 மாவட்ட பொது வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிபோயின!

வடக்கு மாகாண நிர்வாக ஆளுகைக்குள் செயற்பட்டுவந்த மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட பொது வைத்திசாலைகள் உட்பட இலங்கையின் 09 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சேவை வழங்கலில் தரம், சமத்துவம், வினைத்திறன் போன்றவற்றை அதிகரிக்கவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த யோசனையை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பித்தாகவும் அதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய வடக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் மற்றும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவளை, கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினை இனிவரும் காலங்களில் மத்திய சுகாதார அமைச்சே நிர்வகிக்கும் என்று தெரியவருகிறது.

Posted in Uncategorized

இரத்தானது ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு “பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டு” இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்தே அவர் பேச்சை இப்போதைக்குத் தள்ளிப்போடும் முடிவை எடுத்திருக்கின்றார் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பேச்சுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகைய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் அதிகரிப்பு நாடு திரும்புகின்றார் பசில்

ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அமைச்சரை பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த அறிவிப்பு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் உதய கம்மன்பிலவும் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் கட்சியின் பொதுச் செயலாளருக்கு சவாலும் விடுத்திருந்தார்.

இதற்கிடையில் கருத்து வெளியிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, எரிபொருள் விலை விவகாரத்தில் தலையிட்டு பசில் ராஜபக்ஷ உயர்வைத் தடுத்திருப்பார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கம்மன்பிலக்கு பதிலளிப்பதற்காக ஊடக சந்திப்பு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தால் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் உயர்மட்டத்தின் அறிவுறுத்தலை அடுத்து இச்சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ‘சீனாவை நோக்கி நகர்கிறது’ இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய இந்தியா சிந்தனை- தி பிரின்ட்

கொழும்பு ‘சீனாவை நோக்கி நகர்கிறது’  இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை செய்து வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது.

ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின்றது என பல வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றம் சர்ச்சைக்குரிய கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு திட்டத்தை நிறைவேற்றியது.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும், கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குள் ஒரு சீன மாகாணமாக மாறலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியிலும் இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றியது.

உத்தேச புதிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு பரந்துபட்ட அதிகாரங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.மேலும் இலங்கையின் மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்டமூலங்கள் கொழும்பு துறைமுக நகரை கட்டுப்படுத்தாது.

இதன்காரணமாக இது ஜனநாயக ரீதியில் செயற்படாது என்ற கரிசனைகள் காணப்படுகின்றன.

கொழும்புதுறைமுகநகரம் காரணமாகவும்,- அம்பாந்தோட்டை துறைமுகநகரத்திற்கு என்ன நடந்தது என்பதன் காரணமாகவும்( கொழும்பு 99 வருட குத்தகையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது என்ற ஊகங்களிற்கு மத்தியில்)இலங்கை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என தெரிவித்த ஒரு வட்டாரம் இந்தியாவிற்கு இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம், இந்திய அரசாங்கங்களிற்கும் சவால்கள் ஏற்படலாம் என தெரிவித்தது.
இந்தியா இலங்கை உறவுகள் கடந்த பெப்ரவரியில் இலங்கை முத்தரப்பு கொழும்பு துறைமுக கிழக்குகொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.

அதற்கு பதில் இலங்கை இந்தியாவிற்கு மேற்குகொள்கலன் முனையத்தை வழங்கியது – அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்படிக்கை போலயில்லாமல் தனியார் உடன்பாடு போன்று இது வழங்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் ராஜபக்ச சகோதாரர்களிற்கும் இடையிலான ஆரம்ப காலநட்புறவு தற்போது மறையத்தொடங்கியுள்ளது என்பது தெளிவான விடயம் என தெரிவித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியாவிற்கு முதலிடம் என்ற இலங்கையின் கொள்கை வேகமாக காணாமல்போகின்றது என தெரிவித்தன.

இதுசீனா இலங்கையை இந்தியாவிலிருந்து விலக்கிகொண்டு சென்றுள்ளதால் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது பிரசன்னத்தை பேணலாம் என சீன கருதுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in Uncategorized

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்!

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (14) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடாம் இந்திய தாய் திரு நாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

-மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாத்திகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.