நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு!

நாளை (13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனை தெரிவிததார்.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொர்ந்தும் இடம்பெறும் என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று (12) தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மண்ணில் தமிழர்களுக்கு ஒருநீதியும்,சிங்களவர்களுக்கு ஒரு நீதியும்-ரெலோ விஜிந்தன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என இராணுவத்தளபதியிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் ஊடகங்கள் ஊடாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் இன்று (11.05.21) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இராணுவத்தளபதியால் ஒரு அறிக்கை விடப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கு பற்றினால் சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது நல்லவிடையம் நேற்று(10) இரவு எங்கள் முல்லைத்தீவு பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் 30 மேற்பட்ட புத்த பிக்குகளும் இராணுவத்தளபதிகள் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பிரித் ஓதுதல் என்ற சமைய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நாங்கள் இராணுவத்தளபதியிடம் கேட்கின்ற விடையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது?

குருந்தூர் மலையில் இராணுவப் பாதுகாப்புடன் பௌத்த மயமாக்கல் செயற்பாடு தீவிரம்!

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

காவல்துறையினருக்கோ, மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ, சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர், தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி, அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொவிட் நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும்

குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

2009 இல் நடந்தது இனப்படுகொலையே: ரெலோ மதுசுதன் கடும் காட்டம்

உலகம் முழுவதும் இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டில் இனப்படுகொலை புரிந்தது என்பதை வெளிப்படையாக கூறுவதற்குத் தயங்குகின்ற காலத்தில் தமிழினப் படுகொலையே நடந்தது என்பதைப் பல இடங்களிலும் அங்கீகரித்து வருகிறார்கள் என ரெலோ நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(11) சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே-18 அண்மித்துவிட்டது. எங்கள் உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நாள். இன்று மே-11. இந்தநாட்களில் முள்ளிவாய்க்காலிலும், வன்னிப் பெருநிலப்பரப்பிலும் எங்கள் உறவுகள் வகை தொகையாக கொன்றொழிக்கப்பட்டார்கள். இந்த மாதத்தில் நாங்கள் வழமையாக ஒன்றுகூடி நினைவு கூருவதுண்டு.

எனவே, மே-18 அன்று நல்லூர் பிரதேச சபையின் விசேட கூட்டத்தைக் கூட்டி நினைவஞ்சலியை நிகழ்த்துவதற்கு நான் பரிந்துரைக்கின்றேன்.

1915 ஆம் ஆண்டில் ஆர்மேனியப் படுகொலை இனப் படுகொலை என உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலைக்குப் பின்னர் இந்திராகாந்தி அம்மையால் இந்தியப் பாராளுமன்றத்தில் இனப் படுகொலை எனக் கூறப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டு சட்டசபையில் 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். வடமாகாண சபையிலும் இது இனப்படுகொலை தான் என்பதை அங்கீகரித்துள்ளனர். அதேபோன்று கனடா நாட்டின் ஒரு உள்ளுராட்சி மன்றத்திலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை அங்கீகரித்துள்ளனர்.

எங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி அமைதியான முறையில் எங்கள் சபையில் மே-18 நாளை நாங்கள் நினைவு கூர வேண்டும் என்பதை இந்தச் சபையின் தாழ்மையான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். எனவே, மே-18 அன்று எங்கள் இனம் சார்பான கோரிக்கையாக விசேட கூட்டத்தை நினைவு அஞ்சலிக் கூட்டமாக கூட்ட வேண்டும் என அன்புடன் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவிக்கையில், மதுசுதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுத்த பின்னர் பதில் வழங்குகின்றேன் எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை – நாமல்

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை (digital vaccine identity card) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டை தடுப்பூசி திட்டத்தை சீராக செயற்படுத்த உறுதி செய்யும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடையாள அட்டையில் தடுப்பூசி பெற்ற நபரின் விபரங்கள், தடுப்பூசியின் வகை, பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியின் விபரங்கள், வழங்கப்பட்ட திகதி மற்றும் இரண்டாவது ஜப் வரவிருக்கும் திகதி மற்றும் தடுப்பூசி செயன்முறை தொடர்பான ஏனைய தகவல்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை இன்று நள்ளிரவு தொடக்கம் இடைநிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார்.

எனினும், ஒரு மாகாணத்திலிருந்து மற்றுமொரு மாகாணத்திற்கு அரச சேவைக்காக பயணிக்கும் ஊழியர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து சேவையும் இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.

ரயில்வே பொது முகாமையாளரின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேல் மாகாணத்திற்குள் அலுவலக ரயில்கள் மாத்திரம் இன்று சேவையில் ஈடுபடும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸ, கொச்சிக்கடை, அலுத்கம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவுக்கு பின்னர் அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் 48 ரயில்களும் இன்று நள்ளிரவின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டாது எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இன்று நள்ளிரவின் பின்னர் மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இது தடையாக இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த கட்டுப்பாடுகளின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பராமரித்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் ஒன்று கூடும் வகையில் இடம்பெறும் விருந்துபசாரங்களை ரத்துச் செய்வதற்கும், வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் மற்றும் அங்கு இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகளவில் கண்டு பிடிக்கப்படுகின்ற பகுதிகளை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத்தடை விதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவினக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பாதுகாப்பு பிரிவினக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடினால் கைது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றுகூடாது வீடுகளில் நினைவேந்தல் செய்யலாம்- இராணுவதளபதி.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள்​ மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைதுசெய்யப்படுவார்கள்.

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்துள்ளார்.