பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு !

எதிர்வரும் 10 திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம் – பிரதமர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனவரல் வெய் ஃபெங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பானது இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக சீன பாதுகாப்பு அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும், உயர் மட்ட சீன தூதர்கள் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். எங்கள் வலுவான மற்றும் நட்பு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்கள் வருகை மற்றும் சந்திப்பை எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவிற்கும் அதன் அனைத்து சாதனைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அது உண்மையில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.

வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகளுக்கம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். சீன அரசாங்கம் கிட்டத்தட்ட 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது. மறுபுறம், வறுமையை ஒழிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை சீனா சந்திக்க முடிந்தது. இது ஒரு பெரிய சாதனை.

இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது இப்போது உலகம் முழுவதும் தெளிவாகியுள்ளது. கொவிட் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களுக்கும் சீனா தாராளமாக 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் நன்கொடை அளித்தமைக்கு நன்றி.

எனினும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.

கடந்த சில வாரங்களில் கொவிட்- 19 நோயாளர்களது எண்ணிக்கை நாட்டில் அதிகரித்த போதிலும், அதன் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தால் முழு நாட்டையும் முடக்க வேண்டாம் என்று ஒரு அரசாங்கமாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தொற்றுநோய்க்கு பிந்தைய நிலைமையை நிவர்த்தி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

தற்போது, உலகெங்கிலும் இருந்து இலங்கைக்கு முதலீட்டை ஈர்ப்பதே எங்கள் முன்னுரிமை. இலங்கையில் இதுபோன்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிக்க உங்களுடன் மற்றும் உங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும் எதிர்நோக்குகிறேன் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்பில் சீன தூதுக் குழுவினரும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, பஷில் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான பகுதிகள் – முழு விபரம்

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று அதிகரித்ததை அடுத்து இதுவரையில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் மாவட்டம்

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு மற்றும் நிராவிய கிராம சேவகர் பிரிவு.

வெல்லவ பொலிஸ் பிரிவில் நிகதலுபொத்த கிராம சேவகர் பிரிவு.

மேலும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு.

கம்பஹா மாவட்டம்

கொட்தெனியாவ பொலிஸ் பிரிவில் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு, ஹீரலுகெதர கிராம சேவகர் பிரிவு மற்றும் களுஅக்கல கிராம சேவகர் பிரிவு.

மினுவங்கொட பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை மாவட்டம்

மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் மிரிஸ்வத்த கிராம சேவகர் பிரிவு, பெலவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பொலிஸ் பிரிவில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு.

காலி மாவட்டம்

ரத்கம பொலிஸ் பிரிவில் இம்புலகொட கிராம சேவகர் பிரிவு மற்றும கடுதம்பே கிராம சேவகர் பிரிவு.

பொலன்னறுவை மாவட்டம்

ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவில் சிறிகெத கிராம சேவகர் பிரிவு.

மாத்தளை மாவட்டம்

உக்குவளை பொலிஸ் பிரிவில் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு.

நாஉல பொலிஸ் பிரிவில் அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு.

மொனராகல மாவட்டம்

வெல்லவாய பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர் கிராம சேவகர் பிரிவு, வெஹரயாய கிராம சேவகர் பிரிவு மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு

புத்தல பொலிஸ் பிரிவில் ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு.

அம்பாறை மாவட்டம்

உகன பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம சேவகர் பிரிவு.

இதேவேளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையமும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி – சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே கலந்துரையாடல்

நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (27) நாட்டை வந்தடைந்தார்.

Posted in Uncategorized

மே தினத்தை தனித்து நடத்தவே தீர்மானித்தோம்: கொவிட் வைரஸ் தடுத்து விட்டது – சுதந்திர கட்சி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் கட்சியின் தொழிற் சங்கத்துடன் கலந்துரையாடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலை திணைக்களத்திற்கான பயிற்சி ஆலோசகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரின் தலைமையில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சுதந்திரக் கட்சியின் மே தின பேரணி காலாகாலமாக தனித்தே நடத்தப்பட்டு வந்துள்ளது. அதற்கமைய இம்முறையும் அவ்வாறு நடத்தவே தீர்மானித்திருந்தோம். எனினும் வைரஸ் பரவல் காரணமாக மே தின பேரணிகளை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்நிலையில், கட்சியின் முன்னேற்றம் குறித்து கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டு வருகின்றது . தேர்தல் தொகுதி ஒன்றுக்கு மூன்று உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படுவது மற்றும் மேலதிக உறுப்புரிமை வழங்கல் போன்ற செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.

இதேவேளை கட்சியின் முன்னேற்றத்திற்காக நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம் இந்நிலையில் கட்சிக்குள் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை சுமூகமாக தீர்க்க நடவடிக்கையை எடுப்போம். கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

கேள்வி : பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சித் தொடர்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து விட்டு , மறுநாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உங்களது கருத்து என்ன?

பதில்: பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார் என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. எனினும் 2 வருடங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் இங்கு சென்று வாக்குமூலம் வழங்குவதே சிறந்த செயற்பாடாகும்.

Posted in Uncategorized

சீனாவிற்கு அதிகாரம் வழங்க முடியுமாக இருந்தால், வடக்கு கிழக்கிற்கு ஏன் அதிகாரம் வழங்க முடியாது? – மட்டு. நிலவன்

இலங்கையில் உள்ள ஒருபகுதியை சீனாவுக்கு வழங்கி, அந்தப் பகுதியில் ஆட்சி செய்வதற்கு சீன அரசாங்கத்தினை இலங்கை சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை வழங்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த நாட்டின் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கடந்த எழுபது வருட காலமாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தங்களுக்கான அதிகாரங்களை கேட்டுப் போராடிய இந்த நாட்டின் பூர்வீக குடிகளான வடகிழக்கு தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று இந்த நாட்டை சீனா போன்ற அன்னிய நாடுகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டில் உரிமை உள்ள இரு இனங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு ஆயிரக்கணக்கான தங்களது உயிர்களை இழந்து இன்று உணர்வு ரீதியாக இந்த நாடு இரண்டாக பிளவுபட்டு நிற்கும் நிலையில்.

இந்த நாட்டை அன்னிய நாடுகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுப்பதை இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு இன மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

நீங்கள் இந்த நாட்டை சீனா போன்ற அன்னிய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதாக இருந்தால், முதலில் வடகிழக்கு தமிழர்களுக்கான தனியான அதிகாரத்தை தந்துவிட்டு நீங்கள் உங்களது பகுதிகளை அன்னிய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுங்கள்.

இந்த நாட்டில் உள்ள மக்கள் எதிர்வரும் காலங்களில் சீன ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படலாம். அன்று வடகிழக்கு தமிழ் மக்களின் உதவி சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கும்.

இலங்கையில் சீனாவின் காலனித்துவ நாடாக மாறும் போது தான் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் எவ்வாறு ஆளப்பட்டார்கள் என்பது தெரியவரும்.

கொழும்புத் துறைமுக நகரத்திற்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை வடகிழக்கு மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும்.

அத்துடன் 13+ குறித்து வாய்கிழிய கத்தும் இந்திய அரசை இன்று வரை பொருட்படுத்தாது வடகிழக்கு மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை தர மறுத்து வரும் இலங்கை அரசாங்கம் சீன அரசுக்கு தனி அதிகாரம் மிக்க கொழும்பு துறைமுக நகரையே கொடுத்துள்ளது.

இந்த செயற்பாட்டின் ஊடாக இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது இலங்கை. ஆசிய பிராந்திய நாடுகளை இராஜதந்திர ரீதியில் ஆக்கிரமித்து வரும் சீனா, தற்போது இந்து சமுத்திரத்தின் மத்தியில் கால்பதித்து நிற்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும். அதன் பின்னர் இந்து சமூத்திர கடல் பாதுகாப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். இதற்காகவே இலங்கையில் சீனா தனது முழு வளத்தையும் குவித்து வருகிறது. சீனாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறியுள்ளது.

சீன வங்கிகள் உட்பட சீன நாட்டில் சீன மக்கள் பயன்படுத்தும் அத்தனை வகையான பொருட்கள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள், ஆளணி வளங்கள் என அனைத்தும் இலங்கையில் குவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் சீனர்கள் நிரந்தரமாக இருப்பதாகவும், ஆறு இலட்சம் சீனர்கள் வருடம் ஒன்றிற்கு இலங்கைக்கு வந்து போவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் கைது குறித்து அவர்களது மனைவிமார்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி முறைப்பட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில், அன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் தனது கணவர் வெள்ளவத்தை, பெட்ரிகா வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ரியாஜ் பதியுதீனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அவ்விருவரின் மனைவிமார், ரிஷாத் மற்றும் ரியாஜ்ஜின் கைதும், தடுத்து வைத்தலும் சட்ட விரோதமனது என குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல், மதம் மற்றும் இன ரீதியிலான கைது நடவடிக்கையாகவே, குறித்த இருவரின் கைதும் உள்ளதாக அவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ரிஷாத் பதியுதீன், தற்கொலை குண்டுதாரி ஒருவரின் குலோசஸ் எனும் செப்புத் தொழிற்சாலைக்கு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அதிக செப்பினை விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் அது அடிப்படையற்றது என முறைப்பாட்டாளர் ஆவணங்களையும் இணைத்து கூறியுள்ளார்.

குறிப்பாக செப்பு விநியோகம், தனது கணவர் அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சின் கீழ் இடம்பெற்றாலும் அதில் அமைச்சருக்கு தலையீடு செய்ய முடியாது என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் ஊடாக குளோசஸ் நிறுவனத்துக்கு செப்பு வழங்க முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரை தொடர்பிலும் முறைப்படடாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரியாஜ் பதியுதீன் சார்பிலான முறைப்பாட்டில், அவர் ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் சாட்சியங்கள் இல்லை என விடுவிக்கப்பட்டதாகவும் தற்போது மீளவும் அதே விடயங்களை கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவ்விருவரின் கைதும் அரசியல், மத, மற்றும் இன ரீதியிலானது எனவும் அதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன, விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசேகர உள்ளிட்டோர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், வட பகுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது கொண்டிருந்த அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரத்தை கொழும்பு துறைமுக நகரம் கொண்டிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாடு ஒரு சட்டம் எனப் பேசிய அதே ஆட்கள் இப்போது ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதற்கு இணங்கிவந்திருப்பதையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் குறிப்பிட்டிக்கின்றார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனியாகிவிடும் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

“இந்தப் பகுதி சினாவின் காலனியாகிவிடும் எனக்கூறப்படுவதையிட்டு நான் அறிந்திருக்கின்றேன். ஆனால், போர்க் காலத்தில் பிரபாகரன் கைப்பற்றிவைத்திருந்த பகுதிகளில் அவரிடம் காணப்பட்ட அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரங்களைக் கொண்டதாக இந்த துறைமுக அதிகார சபை விளங்கும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார்.

“ஒரு நாடு ஒரு சட்டம் எனக் கூறிவந்தவர்களே, ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களைக் கொண்டிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

“கொழும்புத் துறைமுகத்தை சட்டவிரோதமன முறையில் கண்காணிப்பதற்கு கொழும்பு துறைமுக நகர் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை பல நாடுகள் 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் தான் பிரதமராக இருந்தபோது தெரிவித்திருந்தன” எனக்குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு துறைமுக நகரிலிருந்து வெளியாட்கள் துறைமுகத்தை கண்காணிப்பதை அப்போதைய தமது அரசு விரும்பவில்லை” எனவும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் சீனாவுக்கு தமது அரசாங்கம் கரிசனையை வெளியிட்டதுடன், அதற்கான தீர்வு ஒன்றை நோக்கியும் செயற்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முகத்தை மறைக்கக்கூடிய ஆடைகளை அணிவதனை தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை மேற்படி அனுமதியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மிக மோசமான ஜனநாயக அடக்கு முறைக்குள் இலங்கை: சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பில் சஜித்..!

நாட்டு மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்திற்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் சகல மக்களுக்கும் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க சர்வதேச நாடுகளின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வருகைதந்த அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வௌிநாட்டு கொள்கை வகுப்பாளர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான கலாநிதி ரொஹான் பல்லேவத்த, கலாநிதி கிஹான் குணதிலக்க, ஹரீம் பீரிஸ் ஆகியோரும் வௌிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுடனான இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 04 நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனிஸ் சைபீயின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இன்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.

Posted in Uncategorized