இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா

சீனா இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் நிதி, கடன் வசதி திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளது.

3 ஆவது நாளாக தொடரும் இரணை தீவு மக்களின் போராட்டம்

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணை தீவு பிரதான இறங்கு துறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்களுக்கு இரணைதீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படவில்லை என இரணை தீவு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சர்வதேசத்துக்கு காட்டும் வகையிலும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவுமே கொரோனா உடல்களை அடக்க அனுமதி

கொரோனாவினால் மரணிப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வது சாத்தியப்படாது எனத் தெரிந்துகொண்டே அரசாங்கம் இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கையை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கி இருக்கும் அனுமதி முஸ்லிம் நாடுகளை ஏமாற்றி ஜெனீவாவில் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொரோனாவினால் மரணிப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

கொரோனாவால் மரணிப்பவர்களை உலகம் பூராகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அடக்கம் செய்யும் நிலையில் இலங்கை மாத்திரம் அதற்கு அனுமதி வழங்காமல் முஸ்லிம்களைப் பழிவாங்கும் நோக்கில் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. தற்போது ஜெனிவா மனித உரிமை மாநாடு ஆரம்பித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கையின் பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. அதேநேரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விஜயமும் இடம்பெற்ற நிலையில், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது.

சர்வதேச நாடுகளின் அழுத்தம் மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அடக்கம் செய்ய அனுமதி வழங்கிவிட்டு, அடக்கம் செய்ய இரணை தீவை தெரிவு செய்திருக்கின்றது. கொழும்பில் இருந்து இரணை தீவுக்கு போய் வருவதற்கு 600 கிலோ மீற்றர் தூரம். சடலம் ஒன்றை எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் செல்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்ததாக கொரோனா வைரஸ் நீரில் கலக்கும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்தே அரசாங்கத்தின் தொழில்நுட்பக் குழு அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது அடக்கம் செய்ய அனுமதி அளித்திருக்கும் இரணைதீவு நிலத்தடி நீருக்கு மிகவும் நெருக்கமான பூமிப் பிரதேசமாகும்.

அப்படியானால் இதுவரை காலமும் அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தது, வெறும் அரசியல் அடிப்படையில் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கில் என்பது தெளிவாகின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் நீரில் கலந்து பரவுவதில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தெளிவாகத் தெரிவித்திருந்தார். அதேபோன்று கொரோனா மரணம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேராவின் குழுவின் அறிக்கையில், கொரோனாவால் மரணிப்பவர்களை பொது மயானங்களில் அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு காட்டும் வகையிலும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே கொரோனா வால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருப்பது தெளிவா கின்றது. அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த ஏமாற்று நாடகத்தை மேற்கொள்ளாமல் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் முறையில் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இரணைதீவில் ஜனாஸாவை அடக்க அதிருப்தி, சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள் இது குறித்து சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதங்களை அனுப்பவுள்ளன.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இது குறித்த கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய நிலையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது

உடல்களை அடக்கம் செய்வதற்கு கௌரவமான இடமொன்றை ஒதுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என இஸ்லாமிய நிலையம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.

உலக முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினரான இஸ்லாமிய நிலையம் உலக அமைப்புகளிற்கு இந்த விவகாரம் குறித்த தனது கரிசனையை முன்வைக்கவுள்ளதுடன் ஜெனீவாவில் உள்ள உலக முஸ்லீம் காங்கிரசின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவு குறித்துகடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வேறு பகுதிகளில் பொருத்தமான இடங்களை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

Posted in Uncategorized

இராணுவச் சோதனைச் சாவடியால் மக்களுக்கு அசௌகரியம்- ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரெலோ தலைவர்செல்வம் எடுத்துரைப்பு!

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் நடைக்கலநாதன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேலின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.திலீபன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாதுக்காப்புப் படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, குடி நீர், விவசாயம், கடற்தொழில், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதேவேளை, மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியினால் மக்கள், அரச பணியாளர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரியப்படுத்தினார்.

அதாவது, “சோதனைச் சாவடிகள் உள்ளமை தொடர்பாக எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. ஆனால், குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதியே ஒரு பிரச்சினையாக உள்ளது. மக்களின் பொழுது போக்கு இடமாகக் காணப்பட்ட குறித்த இடத்தில் இராணுவச் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இதானால், மக்கள் அவ்விடத்திற்குச் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது.

மேலும், அரச கடமைகளுக்காகச் செல்லும் பணியாளர்கள் குறித்த சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகின்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் கழற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதனால், அவர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தினூடாக ஒரு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளும் அப்பிரதேச சபையின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும்.

எனினும், மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற சில அபிவிருத்திச் செயற்பாடுகள் எமது அனுமதியின்றியும், எமது கவனத்திற்குக் கொண்டுவராமலும் இடம்பெறுகின்றன. எனவே, இனிவரும் காலங்களில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று உரியமுறையில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாகிர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதன்படி, ஐ.நா. வெளியிட்டுள்ள பதிலில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபு குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது.

நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறை மேற்பார்வைக் குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் இந்த நேரத்தில் அத்தகைய சட்டம் தேவையற்றது.

எவ்வாறாயினும், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றத்திற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.

இந்தச் செயற்பாட்டின் மூலம், பிற அதிகார வரம்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு உதவுவதாக அரசாங்கம் கூறியது.

அத்துடன், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டமா அதிபர் மறுஆய்வு செய்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்தும் அரசாங்கம் தனது பதிலில் கூறியது.

இதேவேளை, ஒட்டுமொத்தமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தவறான அல்லது ஆதாரமற்ற அல்லது புறம்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என இலங்கை கூறியது.

அத்துடன், பொதுச்சபைத் தீர்மானம் (GA) 60/251இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உலகளாவிய பக்கச்சார்பற்ற தன்மை, புறநிலை மற்றும் தெரிவு செய்யப்படாத கொள்கைகளை மனித உரிமைகள் பேரவை மீறுவதாகவும் இலங்கை கூறுகிறது.

மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான முன்மொழிவு உட்பட, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

இலங்கைக்கு எதிராக இத்தகைய ஏற்றத்தாழ்வான மற்றும் தேவையற்ற நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு சில காரணிகள் இடைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்நிலையில், அரசியல் மயமாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மனித உரிமைகள் பேரவை தன்னை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை வருத்தம் தெரிவிக்கிறது.

மேலும், சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விருப்பமும், இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டிற்கு ஒப்பாகும் என்று இலங்கை எச்சரிக்கிறது.

அத்துடன், தனிநபர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணத் தடைகளுக்கு அழைப்பு விடுப்பதானது, நீதிமன்றம் அல்லது அமைப்பு ரீதியான ஆதாரம் இல்லாத நிலையிலான முன்மொழிவாகும். இது அவர்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறுதலாகும்.

இதேபோல், ஐ.நா. அமைதி காக்கும் படையில், இலங்கை இராணுவத்தின் ஈடுபாட்டை மறுஆய்வு செய்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைாளரின் பரிந்துரையையும் இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாஸாக்களை எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் – கல்முனை மாநகர முதல்வர்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் ஜனாசா விடயம் தொடர்பாக (புதன்கிழமை) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”20ஆவது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில் ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும்,

உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் சொந்த ஏனைய விடயங்களுடன் போலியான வதந்திகளை பரப்புகின்றனர்.

நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு ஆதரவு இருப்பதனால் அரசாங்கத்தில் ஜனநாயகமாக எதுவும் நடைபெறாமல் ,

முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இப்போது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனை சிலர் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு இந்த அரசாங்கம் கொடுத்த பரிசு போல பேசுகிறார்கள். இந்த விடயம் அவரின் வருகைக்கு முன்னரே நடந்து முடிந்து வர்த்தமானி அறிவிப்புக்கான இறுதித் தருவாயில் இருந்தது.

ஆளும் தரப்பு எதிர்தரப்பு நாடாளுமன்ற அழுத்தம், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உடன்பாடுகள்,

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 18 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, என்பன பலதும் சேர்ந்து அவ்விடயங்களில் ஒன்றாகவே பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் அமைந்திருந்தது.

இப்படி பலவிடயங்களும் ஒன்றிணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக சாதகமாக அமைந்தது. 20க்கு ஆதரளவிக்கும் விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற குழுவுக்கே கட்சி உயர்பீடம் வழங்கியது.

அதனடிப்படையிலையே அவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராகவே வாக்களித்தார்.

நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது. எங்களின் சமூகத்திற்கு உரிமைகள், தொழில்வாய்ப்பு, அபிவிருத்திகள் என பல தேவைகள் இருக்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கோஷம் எழுப்பினர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது.

இது தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற அமைச்சர் சமல் ராஜபக்ச ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

அந்த குழு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை.

இலங்கையில் அதிக முஸ்லிங்களின் அபிமானத்தை பெற்ற நாங்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் கரிசனை செலுத்துவோம்.

அப்போது இணங்கிச்சென்றும், அல்லது எதிர்த்தும் போராடி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்போம். அதற்காக எங்களின் எம்.பிக்கள் பணம் பெற்றார்கள் என்பது நம்பமுடியாத கட்டுக்கதைகள்.

ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். அரசிடம் நாங்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை எங்களின் கொரோனா தொற்று ஜனாஸாக்களை இரணைமடு தீவில் அடக்காமல் எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் என்பதே. அதன் மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் வந்தால் அதை நாங்களே பொறுப்பெடுப்போம்” என்றார்.

Posted in Uncategorized

புதிய அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் விரைவில் பட்டியலிடப்படும்

நாட்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக இதுவரை 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விண்ணப்பங்கள் விரைவில் பட்டியலிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்கள் முன்னெடுக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கட்சிகளை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் – ரெலோ பந்தல் வசதிகள் அமைத்து கொடுத்தது

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நல்லூரில் சூழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளும் மக்களுக்கு மேலும் ஆறுதல் கொடுக்கும் வகையில் ரெலோ யாழ் மாவட்ட துணைப் பொறுப்பாளரும் மாநகர பிரதிமேயருமான ஈசன் அவர்கள் தலைமையில் பந்தல் வசதிகள் அமைக்கப்பட்டள்ளது (03/03/2021).அவர்களுக்கு தேவையான பாய்,தலைஉறை போன்ற பொருட்கள் ரெலோ வின் யாழ் மாவட்ட அணியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது, ரெலோ உறுப்பினர்களும் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களுடன் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினார்கள்.

போராட்டத்தின் கோரிக்கைகளாவன

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைது குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்( ரெலோ)
யாழ் மாவட்டம்

‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள கருப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளை வெளிப்படுத்தவும் தவறு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவும் அரசாங்கத்தையும் சட்ட அமுலாக்க அதிகாரிகளையும் கேட்டுக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி கிறிஸ்தவ மக்களால் கருப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது எனக்கூறி கறுப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்கும் தெரிவிப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி பூஜைக்கு வருகைத்தரும் அனைவரையும் கருப்பு நிறத்திலான ஆடை அணிந்து வருமாறு மறைமாவட்டத்தின் பேராயர்கள் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized