ஐ.நா மனித உரிமை ஆணையாளரை அழைக்கிறது அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக அவர்களை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது என கூறினார்.

அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுக்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்!

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள, பேரவை உறுப்பு நாடுகளின் தூதுவர்களிடம் அனுசரணை நாடுகளின் தூதுவர்கள் இருவர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான பிரிட்டிஷ்தூதுவர் சாரா ஹல்டன் தென்கொரிய தூதுவரையும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவையும் கடந்த இரண்டாம் திகதி சந்தித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் இலங்கைக்கான பங்களாதேஸ் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

பங்களாதேசும் தென்கொரியாவும் மனித உரிமை பேரவையின் இம்முறை அமர்வில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த பிரசினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று கறுப்பு ஞாயிறு : பலரும் ஆதரவு : முழு அறிக்கை கிடைக்கவில்லையென கர்தினால் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகிறது.

தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் தமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் , ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கறுப்பு நிற ஆடையணிந்து , கொடியேற்றி கறுப்பு ஞாயிறு தினத்தை அனுஷ்டிப்பதாக இலங்கை கத்தோலிக்க பேரவை அறிவித்துள்ளது.

இன்றிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிவழி கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு எதிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமயிலான தேசிய மக்கள் சக்தி என்;பன உள்ளிட்டவை ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவிக்கையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கோரி இன்றிலிருந்து எமது அமைதி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

எமது போராட்டம் இன்றுடன் நிறைவடையப் போவதில்லை. நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். கறுப்பு ஆடையணிந்து கறுப்பு கொடியேற்றி எமது போராட்டத்தை தொடருவோம்.

ஞாயிறு ஆராதனைகளின் பின்னர் , தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கோரி விஷேட ஆராதனைகளும் இடம்பெறும்.

இவை நிறைவடைந்ததன் பின்னர் தேவாலயத்திற்கு வெளியில் அமைதியான முறையில் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.

காலை 8.40 முதல் 8.45 மணி வரை தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

இதே போன்று ஒவ்வொரு ஞாயிறு ஆராதனைகளின் பின்னரும் இடம்பெறும். அத்தோடு காலை 8.45 மணி முதல் 9.20 வரை தேவாலய வளாகத்தில் அமைதிவழி போராட்டமும் முன்னெடுக்கப்படும் என்றார்.

Posted in Uncategorized

மன்னார் கோரைக் குளம் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “நீர்ப்பாசனச் செழிப்பு” எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக் கட்டுக்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறு சீரமைப்புச் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாராபுரம் கோரைக் குளம் புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை(06) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி- ஸ்டான்லி டிமேல் நெறிப்படுத்தலில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்ச்சித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேச செயலாளர் பிரதீப், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், மன்னார் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், மன்னார் மாவட்டச் சமூர்த்திப் பணிப்பாளர், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

மத நல்லிணக்கத்தை சிதைக்காதே – இரணைதீவில் அடக்கம் செய்வதை நிறுத்த வலியுறுத்தி யாழில் போராட்டம்

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

“கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோரின் சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.

மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.

“எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இதேபோன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.-

Posted in Uncategorized

மட்டக்களப்பில் 4வது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் ரெலோ எம்.பி ஜனா வருகை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தொடர்ந்து 4வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலய முன்றிலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

குறித் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 4வது நாளான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) வருகை தந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர் வலியுறுத்தினாலும் போர்க் குற்ற விசாரணையை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை குறித்து இந்தியா தற்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பொய்யான அறிக்கை என குறிப்பிட்ட சரத் வீரசேகர, இந்த அறிக்கையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாநகர சபையால் வாகனங்களை பராமரிக்க முடியாதா? ரெலோ எம்.பி ஜனா கேள்வி

ஒரு மனிதன் மனிதாபிமான ரீதியாக இலவச அமரர் ஊர்தி சேவையினை செய்துவருகின்றபோது அந்த வாகனத்தினை பாதுகாக்க முடியாத மாநகரசபை எதற்கு என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கடந்த நான்கு வருடங்ளாக ஜி.கே.ஃபவுன்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகின்றேன். உண்மையில் ஏழை மக்கள் இறந்த தங்கள் உறவுகளின் உடல்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான உதவியே அதுவாகும். இதுவரை 1200 உடல்களை நாங்கள் ஏற்றிக்கொண்டு கொடுத்திருக்கின்றோம்.

கட்சி பேதமின்றி அனைவருக்கும் உதவும் வகையில்தான் ஜி.கே.ஃபவுன்டேசன் இலவச அமரர் ஊர்தி சேவை இந்த மாவட்டத்தில் நடந்து வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றினால் இறந்த ஒருவரது உடல் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்த காரணத்தினால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணித்த மற்றைய நோயாளிகளின் உடல்கள் செங்கலடி, ஆரையம்பதி போன்ற மற்றைய வைத்தியசாலைகளில் தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அந்த உடல்களைக்கூட எங்களது ஜி.கே.ஃபவுன்டேசன் இலவச அமரர் ஊர்தி தான் ஏற்றிக்கொடுத்தது.

அந்த ஊர்தியினை நான் சிறிது காலம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் தான் நான் தரித்து வைத்திருந்தேன். ஏனென்றால் இந்த வாகனத்திற்கும் அறக்கட்டளைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற தனியார் அமரர் ஊர்தி சேவை மேற்கொள்வோரால் எதிர்ப்பு இருக்கின்றது.

ஆகவே எனது வாகனத்தை வீதியில் தரித்து நிற்கச் செய்ய முடியாது. இந்த சேவையை நான் வேறு எவரது உதவியுமின்றி எனது தனிப்பட்ட நிதியிலிருந்துதான் செய்து வருகின்றேன். எனது உழைப்பின் ஒரு பகுதியை இதற்காக செலவு செய்கின்றேன். மீண்டும் இன்னுமொரு வாகனத்தை கொள்வனவு செய்து இதற்காக முதலிடும் நிலையில் நான் இல்லை.

அந்த அடிப்படையில் இரவு வேளையில் பாதுகாப்பிற்காக பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலம் தரித்து நிற்கச் செய்திருந்தேன். அதற்குப் பின்னர் அங்கு தரிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் மாநகரசபையில் அனுமதி கேட்டு பிரேரணை ஒன்று சமர்ப்பித்து 38 உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த வாகனத்தை அங்கு தரித்து நிற்கச் செய்யலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி எனக்கு பிரதியும் தரப்பட்டுள்ளது.

இப்போது எனது வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் மாநகரசபை ஆணையாளருக்கும் மாநகரசபைக்கும் இடையில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட ஏதோவொரு பிரச்சினையாகும். மாநகரசபையின் 38 உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த வாகனத்தை இரவு வேளைகளில் மாத்திரம் அங்கே தரிக்கச் செய்வதற்கு அனுமதியை கொடுத்திருந்தும் ஆணையாளர் அந்த வாகனத்தை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றார்.

வெளியில் வீதியிலே நிற்கின்ற அந்த வாகனத்தை எவராவது தீப்பற்றவைத்தார்களானால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்களே ஆவர். எனக்கு இந்தப்பிரச்சினைக்கு இன்று ஒரு தீர்வு தராவிட்டால் இந்த சேவையை இன்றுடன் நான் நிறுத்தவுள்ளேன்.

மிகவும் கஷ்டப்பட்ட பிரதேச சபைகளான வாகரை,வவுனதீவு,போரதீவு போன்ற பிரதேச சபைகளே வண்டிகளை வைத்து இந்த வேலைகளை செய்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுகெலும்பாகவும் வருமானமுள்ளதுமான மாநகரசபையானது ஒரு வண்டியை வைத்து அமரர் ஊர்தி சேவையினை செய்ய முடியும்.

ஒரு மனிதன் மனிதாபிமான ரீதியாக இந்த இலவச அமரர் ஊர்தி சேவையினை செய்துவருகின்றபோது அந்த வாகனத்தினை பாதுகாக்க உங்களால் முடியாதா? அப்படியானதொரு மாநாகரசபை எதற்கு? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மாநகர ஆணையாளருடன் பேசி நல்ல தீர்மானத்தினை வழங்குவதாகவும் குறித்த சேவையினை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் பதிலளித்துள்ளார்.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஆரம்பம்: இந்திய பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக்ககட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர் செயற்படுவார்கள்.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகூடியதாக உள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. 0எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும். எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுவார்கள். இலங்கை பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கிய பணிகளாக தமிழ் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி அதற்கூடாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் 10ஆண்டு திட்டத்தை முன்னெடுத்தல்.

இதற்காக தமிழ் பேசும் கல்வி சமூகத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை கோருகிறோம். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுய வருமான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு உந்துதலை வழங்குதல்.

இதற்கான ஆலோசனைகளை தமிழ் பேசும் சமூகத்தின் பொருளியல் மற்றும் வர்த்தகத்துறையினரிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம். தமிழ் பேசும் மக்களின் விளையாட்டுத்துறை மற்றும் அழிந்துப்போகும் கலாசார விழுமியங்களை பாதுகாத்தல்.

இந்த விடயத்தில் தமிழர் மத்தியில் செயற்படும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

Posted in Uncategorized