இம்ரானுடனான ஹக்கீம், றிசாத்தின் சந்திப்பு ரத்து – பாதுகாப்புத்தான் காரணமாம், அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லையாம் – அமைச்சர் கெஹெலிய

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ரவூப்ஹக்கீம் ரிசாத் பதியுதீன் உடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களிற்காகவே இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான முடிவுகளை இருநாடுகளையும் சேர்ந்த அரசியல்குழுவொன்றே எடுக்கின்றது அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் சந்திப்பு இடம்பெறும் பகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு கரிசனைகளை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

USA: இலங்கையின் முகவராக செயற்பட்ட நபருக்கு சிறை

2014ம் ஆண்டு, இலங்கை தொடர்பாக நிலவிய கருத்துக்களை மாற்றியமைக்கும் நிமித்தம் அமெரிக்காவில் பாரிய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முகவராக நியமிக்கப்பட்டிருந்த நபருக்கு 15 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இமாத் சுபேரி என அறியப்படும் குறித்த நபர் மீது வரி மோசடி மற்றும் வெளிநாட்டு முகவராக செயற்பட்டு அமெரிக்க அரசியலுக்குள் கருத்துக்களை விதைத்தல் மற்றும் வெளிநாடுகளின் பணத்தை அரசியலில் முதலிட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வழக்கில், இலங்கை தொடர்பில் நல்லெண்ணத்தை உருவாக்க இமாத் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருந்தமையும் இலங்கையிடமிருந்து குறித்த நபர் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம்

இலங்கை தொடர்பாக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம்திங்கள் பெப்ரவரி 22, 2021

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் கவனத்தை செலுத்துவதற்காக பிரிட்டன் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப அமர்விற்கான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையையும் சிரியாவையும் பிரிட்டிஸ் அரசாங்கம் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ள டொமனிக் ரப் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவனத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்காக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம் எனவும் அவர்n தெரிவித்துள்ளார்.

மனிதஉரிமைகளை திட்டமிட்ட அடிப்படையில் மீறுபவர்களை பொறுப்புக்கூறச்செய்யும் வலுவான சர்வசே அமைப்பினை நாங்கள் விரும்புகின்றோம் மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்யவேண்டும் அல்லது அதன் நற்பெயர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரேரணை பற்றி பிரித்தானியாவுக்கு ரெலோ கடும் விசனம் தெரிவிப்பு

எதிர்வரும் மாசி 22 ல் ஆரம்பிக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட  இருக்கும் பிரேரணையின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை பிரித்தானியாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்குமுகமாக காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை  என்பதில் ரெலோ கடும் விசனத்தை பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்திற்கு தனது இங்கிலாந்து கிளையின் ஊடாக நேற்று முன் தினம் அனுப்பி வைத்துள்ளது.

அந்தச் செய்தியில்,  தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட மாதிரி பிரேரணை கிடைக்கப்பெற்றது.  உங்கள் முயற்சிக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரேரணையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் பிபி7 ஓபி 6 சரத்துக்களை பாராட்டும் அதேவேளையில்  மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட 12-01-2021 திகதியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும்,  இங்கு இணைக்கப்பட்டுள்ள நாம் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்து கைச்சாத்திடப்பட்டு தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலும், ஆக்கபூர்வமானதும் முடிவானதுமான  சரத்துக்களை உள்ளடக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2009இல் நடந்துமுடிந்த யுத்தத்தில் எமது மக்கள் முகம் கொடுத்த சர்வதேச ரீதியாக அட்டூழிய குற்றங்கள் என்று கருதப்படும் இனப்படுகொலை உட்பட யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமது இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள  முறைகளை கோரி நாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம் என்பதை  நன்கு அறிவீர்கள்.

பொறுப்புக்கூறலும்  இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான சர்வதேச பொறிமுறை  அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ அதற்கொப்பான பொறிமுறை அல்லது  விசேட தீர்ப்பாயத்திற்கு பாரப்படுத்துதல்

சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை  ஒன்று உருவாக்கப்பட்டு மேற்படி நீதி வழங்கலுக்கு உதவியாக ஆதாரங்கள் திரட்டப் படல்

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப் பிரதிநிதிகள் இலங்கையில் அமர்த்தப்பட்டு இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்கள் அறிக்கையிடப்படல்

எமது மக்களிளுடைய  அபிலாசைகளை உள்ளடக்கும் வகையிலான நமது சுயநிர்ணய உரிமையைமையையும் வடக்கு கிழக்கு பூர்விக தாயகத்தையும் அங்கீகரிக்கும் நீண்டகால கோரிக்கையான அரசியல் தீர்வினை சர்வதேச மத்தியஸ்த தோடு நிறைவேற்றுதல் என்பனவாகும்

மனித உரிமை ஆணையாளருடைய அறிக்கையில் பெரும் நம்பிக்கையோடு இருந்த எமக்கு இந்த மாதிரி வரைவு வலிமையிழந்த நிலையிலே இருப்பதையும்  அறிக்கையில் இடப்பட்ட விடயங்களிலிருந்து அதிக தூரம் விலகி செல்வதோடு கடந்தகால பிரேரணைகளான 30/1, 34/1, 40/1  ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு இருப்பதையும் அவதானிக்கிறோம்.

எங்களுடைய நீதிக்கான கோரிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளமையையம்  மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உறுப்புரிமை நாடுகளின் மீதான எம்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக இருப்பதையும் உணர்வதால்,  சமர்ப்பிக்கப் பட இருக்கின்ற பிரேரணையை,  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் முகமாக அமைய வேண்டுமே தவிர குற்றவாளிகளை தப்பிக்க இடமளிப்பதாக  இருக்கக் கூடாது   என்பதை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக திருத்தி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Posted in Uncategorized

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் உத்தியோகபூர்வ ‘So Sri Lanka’ என்ற சுற்றுலா குறிச்சொல் வரியை கேலி செய்து, ‘I’m Sri Lanka, I’m So Genocide, என்று பலூன்களில் அச்சிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Posted in Uncategorized

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களின் கொள்கையின் அடிப்படையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என நம்பகத் தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை.

இலங்கைப் படையினரைத் தற்போதைய எதிர்கால அச்சுறுதல்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாற்றுவதில் இலங்கைக்கு உதவுவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதன்மூலம் பிராந்தியத்தினதும் உலகினதும் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் அது விளங்குவதை உறுதி செய்ய விரும்புகின்றது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது தொடர்ந்தும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தும். இது எங்கள் பயிற்சி உதவி மற்றும் ஈடுபாடுகள் தொடர்பில் அடிப்படையான விடயம்.

இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்வோம். படையினர் கொள்கைகள், இராணுவக் கலாசாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாக ஆராய்வோம் .

அத்துடன் மனித உரிமைகளை நிலைநாட்டுவது, நம்பகத் தன்மை மிக்க பொறுப்புக் கூறல் மற்றும் நீதி நடைமுறைகளுக்கான இராணுவத்தின அர்ப்பணிப்பையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும்.

தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் இலங்கையில் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இந்த கடப்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன,2019 இல் கோத்தபாயராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது.

பெப்ரவரி 22 ம் ஆரம்பமாகவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பது சர்வதேச சட்டத்தை உறுதி செய்வது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் முக்கிய சோதனையை எதிர்கொள்கின்றது.

மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும்.

2005 முதல் 2015 வரை அவரது சகோதாரர் அரசாங்கத்திற்கு தலைமை வகித்தவேளை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டார்.இந்த காலப்பகுதி மோசமான மனித உரிமை மீறல்கள் நிறைந்ததாக காணப்பட்டது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கொல்லப்பட்டனர் சித்திரவதை செய்யப்பட்டனர் பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டனர்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பும் பல யுத்த குற்றங்களிற்கு காரணம். யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கைபடையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணைதாக்குதல்களை மேற்கொண்டனர்,விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகப்படுபவர்களை கொலை செய்தனர்.

புதுப்பிக்கப்பட்டுள்ள அச்சங்கள்

2015 இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தவேளை புதிய நம்பிக்கைகள் காணப்பட்டன,அதிகளவு கருத்துச்சுதந்திரம் காணப்பட்டது,தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் காணப்பட்ட ஒடுக்குமுறை மிகுந்த இராணுவமயப்படுத்தபட்ட சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

அவ்வேளை புதிய அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியது,
ஆனால் மீண்டும் அச்சம் திரும்பியுள்ளது,வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தினர் அதிகரிக்கும்

துஸ்பிரயோகங்களை சந்தித்துள்ளனர்,கடந்த வருடம் முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசியகீதம் பாடப்படுவது கைவிடப்பட்டுள்ளது.

சிறுபான்மை தமிழர்களின் மத உரிமைகள் தாக்குதலிற்கு உட்பட்டுள்ளன,இந்து ஆலயங்கள் தலையீடுகளை சந்திக்கின்றன.

2015 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை 2020 இல் ராஜபக்ச அரசாங்கம் கைவிட்டது.

2015 தீர்மானத்திற்கு ஆதரவளித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களை அது அச்சுறுத்துகின்றது.

முன்னைய அரசாங்கத்தின் அரசியல்பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மனித உரிமைதுஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளது.
யுத்த குற்றங்களுடன் தொடர்புபட்ட பலர் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கம் பொறுப்புக்கூறல் குறித்த முழுமையான வெறுப்பை வெளியிட்டுள்ளது,கடந்த செப்டம்பரில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிரான மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் அற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை – அவைநீதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காணப்படுகின்றன என்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும்.

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கு புதிய தீர்மானம் அவசியம், மிகமோசமான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கவேண்டும்.

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்துக்களை குறைப்பதற்காக இந்தியா ஐக்கியநாடுகளின் ஏனைய உறுப்புநாடுகளுடன் இணைந்து புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகங்களை இல்லாது செய்ய வேண்டுமாக இருந்தால் அது குறித்த இறுதியறிக்கை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஆயர்கள் சங்கத் தலைவரும், பதுளை மறை மாவட்ட ஆயருமான விண்ஸ்டன் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆயர் இதனை கூறியுள்ளார்.

´தற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் தடம்புரண்டுள்ளது. 2 குழுக்களை அமைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் மொத்தமாக உயயிரிழந்தனர். இந்த இனப்படுகொலையின் மூலம் பலர் காயமடைந்தது மாத்திரம் அல்லாமல் 500 க்கும் அதிகமானவர்கள் அங்கவீனம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் விசாரணைகள் மூலம் நியாயம் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதாவது நீதிபதி மலல்கொடவின் அறிக்கை அதனையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு பின்னர் ஜனாதிபதி ஆணைணக்குழுவின் பின்னர் சிறப்பான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தாக்குதல் தொடர்பான இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சட்டமா அதிபரிடம் அந்த அறிக்கை கையளிக்கப்பட வேண்டும்.

அவரே பொருத்தமான நடவக்கைகளை எடுக்க வேண்டும். இறுதியாக அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். அதனூடாக நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் தற்போது விசாரணைகள் தடம்புரண்டுள்ளன. இரண்டு குழுக்கழை அமைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த நடவடிக்கை பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றோம்.

எனவே கத்தோலிக்க மக்களிடத்தில் காணப்படும் சந்தேகங்களை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த அறிக்கை கர்தினாலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் எமக்கும் சில விடயங்களை தெரிவிக்க முடியும். விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் அந்த அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆகவே இதனை பேராயரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியிடம் மிக தேவையோடு கேட்டுக் கொள்கின்றேன்.´ என்றார்.

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் – வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம்

குருந்தலூரில் ( குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்ற மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது

இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு இருந்துள்ளது. ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த குருந்தலூர் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்த்தை சூலவம்சமும்,இராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது. இந்த இடத்தில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில் தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது அங்கே பௌத்த கட்டிட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1870 போல் என்பவர் தான் இந்த இடத்துக்கு சென்ற பொழுது பௌத்த கட்டிட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.

அதில் அண்மையிலுள்ள பெரியகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் தமிழ் வணிகனான விசாகன் பௌத்த துறவிகளுக்கு புகை கற்படுக்கைகள் கொடுத்தது பற்றி கூறுகின்றது வன்னிப் பிரதேசத்தில் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முப்பத்தொன்பது கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிராகிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் வரிவடிவம் தமிழ் மொழிக்கு என்று தனித்துமான வரி வடிவம் தமிழ் பெயர்கள் தமிழ் உறவுமுறைகள் ராஜா என்ற அரச பட்டத்தை சமமான வேள் என்றபட்டம் கொண்ட பெயர்கள் தமிழ் இடப்பெயர்கள் காணப்படுகின்றன

எனவே இந்த குருந்தலூரில் (குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கட்சிகள் இணைவில் உருவாகிறது ‘தமிழ் தேசியப் பேரவை’!

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அதேவேளை, கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை.

இன்றைய கூட்டம் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், “தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முதலாவது வரைபு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல விடயங்களை ஆராய்ந்துள்ளோம்.

இந்தக் கூட்டத்தில், முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவுள்ளோம்.

அதில், முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.வின் முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கப்படவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற விடயமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே, வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள்.

ஆனால், அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை. எனவே, வரும் 26ஆம் திகதி அடுத்தக்கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடிப் பேசவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல் தீர்வு என்பது முக்கியமானது என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இது சர்வதேச அரசியலுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள், பொறுப்புக்கூறல் போன்றவற்றை சர்வதேச சமூகம் உண்மையாக உணர்ந்து அந்த அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

அடுத்தக் கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழர் தரப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகள்கூட இணையலாம்.

நாங்கள் இந்த பத்துக் கட்சிகளையும் மிகவிரைவாக, ஒரு தமிழ் தேசியப் பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்பொழுதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்துக் கட்சியினராலும் பேசப்பட்டது.

எனவே, இவ்விடயம் குறித்து பேசப்படவுள்ளதுடன், வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி தமிழ் தேசியப் பேரவை உருவாக்குவது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஆகவே, வரும் 28ஆம் திகதி, ‘தமிழ் தேசியப் பேரவை’ உருவாக்கப்படுவதுடன், அந்தப் பேரவையானது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்காகச் செயற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.