முக்கிய வீடியோவை வௌியிடப்போகும் Channel 4

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை நாளை ஒளிபரப்ப பிரித்தானியாவின் channel 4 ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘த டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Channel 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், “இலங்கையின் கொலைக்களம்” (Sri Lanka’s Killing Fields) என்ற சர்ச்சைக்குரிய வீடியோவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கலை Channel 4 தொடர்ச்சியாக ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் Channel 4.

தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ஒருவரே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதிகார மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்படும் நபர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் தொடர்பான ஒத்திவைப்பானது அசாதாரணமான திட்டமிடலை வெளிப்படுத்தியுள்ளது.

சீனா ஆய்வுக்கப்பலின் வருகையும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகையும் அண்மைக்காலங்களில் உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியிருந்தன.

எனினும் இந்தியா இன்று பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் வெளிப்படுத்திய விடயம், இலங்கை மீதான இந்தியாவின் நகர்வுகள், திட்டமிடல்கள் தொடர்பில் அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

எனினும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்திய இராணுவ கப்பல் இன்னும் இலங்கையிலேயே தரித்து நிற்கிறது.

மேலும், சீன மற்றும் இந்தியாவின் இலங்கை மீதான நோட்டமிடல்கள் அதிகரிக்கும் நேரத்தில் இலங்கையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் போது அவருக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறவுள்ளதான செய்திகள் சிலவும் வெளிவந்திருந்தன.

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது என அறிவிப்பு

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, தலைமை நீதிபதி இதனை அறிவித்து வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

1974-இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வாக 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

எனினும், கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது அதிகாரத்தை மீறினாரா?

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி புவியியல் மற்றும் சுரங்கப்

பணியகத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வௌியிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கையைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மனுதாரரான புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கனிமச் சுரங்கம், அது தொடர்பான அனுமதிகள் வழங்குதல், அவற்றின் நிர்வாகம் போன்றவற்றின் முழு அதிகாரமும் தங்கள் பணியகத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திருகோணமலையில் 13 கிலோமீற்றர் பரப்பளவில் தாது மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு தமது பணியகம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான அனுமதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட நிலத்தில் தேவையான அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள, “மிட் வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்து, அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, அதன்படி, அகழாய்வு பணியை, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்பித்ததாக, மனுவில் கூறப்பட்டுள்ளது. .

இருந்த போதிலும், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், கிழக்கு மாகாண செயலாளர் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி, தேவையான அனுமதி பெற வேண்டும் என்றும், அதுவரை திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.

புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தனது மனுவில், கனிம வளங்கள் மற்றும் அவற்றின் சுரங்கம் தொடர்பான உரிமங்களை வழங்குவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தமது நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனிம வளங்கள் தொடர்பான செயற்பாடுகள் மாகாண சபையின் எல்லைக்கு தொடர்பில்லாதது எனவும், கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முற்றாக மீறுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மீறி, கிழக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட கடிதம் செல்லுபடியாகாது என ரிட் ஆணையை பிறப்பிக்குமாறும், அந்த கடிதத்தின் அடிப்படையில் மேலதி நடவடிக்கை எடுப்பதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சீனரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர்களது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து, நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவரும் Singapore Cancer Registry-இன் நிறுவனருமான பேராசிரியர் K.சண்முகரத்தினத்தின் மகனாவார். பேராசிரியர் K.சண்முகரத்தினம் “சிங்கப்பூரில் நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

15% மற்றும் 14% வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை சீன சமூகத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு வேட்பாளர்களையும் தர்மன் சண்முகரத்தினம் எளிதாக தோற்கடித்துள்ளார்.

மிகவும் மதிக்கப்படும், புகழ்பெற்ற அரசியல் தலைவரான அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கப்பூரை ஆண்ட People’s Action Party (PAP) கட்சியில் இருந்து வௌியேறி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார நிபுணரான அவர், 2003 முதல் இரண்டு தசாப்தங்களாக கேபினட் அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் (2007-15) துணைப் பிரதமராகவும் (2011-19) பணியாற்றியுள்ளார்.

பலர் இவரை தற்போதைய பிரதமர் Lee Hsien Loong-இன் அரசியல் வாரிசாகக் கருதினர்.

சிங்கப்பூரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றது.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி Halimah Yacob-இன் 6 ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

Posted in Uncategorized

தமிழ் ஈழ தேசபிதா தங்கதுரை அவர்களின் 75 வது அகவை தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஸ்தாபகர் தங்கத்துரை அவர்களின் 75 ஆவது அகவை தினம் இன்று 25.08.2023 ஆகும்.

நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று சிறிலங்கா நீதிமன்றத்தில் அரசியல் தீர்க்கதரிசனம் ஆன உரையை நிகழ்த்தினார்.

தலைவர்களை அழிப்பதன் மூலம் அவர்கள் விட்டு சென்ற இலட்சியத்தையோ அந்த அமைப்பையே அழித்து விடமுடியாது,நினைவு கூறும் தினத்தில் அவர்கள் விட்டு சென்ற இலட்சிய கனவுகளோடு ஒரு அர்த்தம் உள்ள அரசியல் தீர்வை நோக்கி ரெலோ பயணிக்கும்.

1969 களில் தங்கதுரை மற்றும் குட்டிமணி மற்றும் சில நண்பர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி தமிழ் ஈழ இயக்கம் (TLO) என்று பெயரிட விரும்பி ஒரு குழுவை உருவாக்கினர். யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையில் உள்ள ஒரு கல்லூரிப் பேராசிரியரின் வீடு இந்தக் குழுவின் வழக்கமான சந்திப்பாக இருந்தது. இதில் பெரிய (பெரிய) சோதி, சின்ன (சிறிய) சோதி, செட்டி, கண்ணாடி (ரேடியோ மெக்கானிக்), ஸ்ரீ சபாரத்தினம் ஆகியோர் அடங்குவர். பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) ஆனது.

1981 ஆம் ஆண்டில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்படப் பலர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவு

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வடமாகாணத்தில் தற்போது தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விளக்கியிருந்தார்.

Posted in Uncategorized

இந்திய அரசின் உதவியுடன் திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி!

1980 களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் மகாவலி காணிகளை முகாமைத் துவம் செய்வது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், 2019-2023 காலப்பகுதியில் அந்தக் காணிகளை வழங்குதல் குறித்து அறிக்கையொன்றை தமக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அபிவிருத்திச் செயன்முறையில் காணிகள் முதன்மையான காரணியாகும் எனவும், அதில் சரியான முகாமைத்துவத்துடன் பேணப்படாவிட்டால், எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறும், எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, ஆளுனர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இன்று இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. தற்போது திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை சர்பானா ஜூரோன் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்தத் திட்டத்தினை அடிப்படையாகக்கொண்டு திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அந்த அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் வெருகல் முதல் பானம, குமன கடற்கரையை அபிவிருத்தி செய்வதற்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கடற்கரையை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் எதிபார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தப் பகுதியில் நவீன விவசாயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் மகாவலி அதிகாரசபை மற்றும் காணித் திணைக்களத்தையும் இதற்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தின் கடற்றொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஏற்படும் இந்த புதிய முன்னேற்றத்துடன் திருகோணமலை நகரத்தை ஒரு முக்கிய வர்த்தக நகரமாக மாற்ற வேண்டும். திருகோணமலைக்குப் பின்னர் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இந்த அபிவிருத்தியைக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.

குறிப்பாக காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து நாம் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன்போது, மகாவலி காணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, அவற்றை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது குறித்தும் கண்டறியப்பட வேண்டும்.

அத்துடன் திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின் அமுலாக்கத்தில், மகாவலி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 1985 திட்டத்தின் பிரகாரம் இருக்கக்கூடிய காணிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் சில காணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அதிகளவான காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எனவே, போட்டி போட்டுக் கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். அதன்போது மாகாணத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி சரியான முடிவை எட்டுவது மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.

1985 ஆம் ஆண்டு, மகாவலி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, எடின்பரோ பிரபு இங்கு வருகை தந்து வழங்கிய காணிகள், தற்போது வன ஜீவராசிகள் அமைச்சினால் காடுகளாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் வனப்பரப்பு 32 வீதமாக பேணப்பட வேண்டும். அந்த நிலையில் ஏனைய காணிகள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.இன்று சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அதிகளவு காணிகளைப் பயன்படுத்தியுள்ளன.

அண்மையில் நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது அந்நாட்டு அரசாங்கம் இலங்கையிடம் அரிசியைக் கோரியது. கடந்த ஆண்டு நாம் அவர்களிடம் அரிசியைக் கேட்டதுபோன்று, இந்த ஆண்டு எங்களிடம் அவர்கள் அரிசி கேட்கிறார்கள். எனவே, நாட்டில் நவீன விவசாயத்தை உருவாக்கி, விவசாய உற்பத்திகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை வெல்வதற்கு நாம் செயற்பட வேண்டும்.

திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு நாம் முயற்சிப்போம். அதற்கு அரச அதிகாரிகள் உட்பட அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விமானப்படை தளபதி வைஸ் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் மாகாண அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வரவுள்ளார்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, திருகோணமலைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்யவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணத்தையும் அவர் பார்வையிடவுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது, எண்ணெய்க் குழாய் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பாலம் அமைப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டிருந்தது.

சீன ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது

இந்தியாவின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடலில் சுமார் 17 நாட்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (25) மாலை தெற்கு சீனாவில் உள்ள சுஜியாங் கடற்பரப்பில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது.