சந்திர மண்டலத்தை இந்தியா தொடும் போது, நாம் தொல்பொருளை தேடுகிறோம்

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது.

இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகிறேன்.

ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை இந்தியா தொடும் போது, நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது,

இந்தியா தந்த 13A மாகாணசபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கிறது.

அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகிறது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்கு பதிலாக, எல்லா பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கிறோம்.

தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கபட்ட பிரதேசமாக இருக்க வேண்டும்.

அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்து கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை.

ஆகவே, ஒருநாள், மாலைத்தீவும் இப்படி “மூன்-ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம். என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரகலவை கட்டுப்படுத்திய ஐனாதிபதி இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்கியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஐனாபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க ஆனால் தற்போது ஒரு இனத்தை குறி வைத்து குறிப்பாக தமிழர்களை கொதிப்படைச் செய்யும் வகையில் இனவாதிகள் வெளியீடும் இனவாதக் கருத்துக்களை ஏன் கட்டுப்படுத்த வில்லை? என்ற சந்தேகம் தமிழர்களிடம் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது மாறாக மறைமுக சுதந்திரம் இனவாதிகளுக்கு ஐனாதிபதி வழங்கியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் மக்களையும் அவர்களது தொன்மையான தொல்லியல்களையும் தமிழ் அரசியல் பிரதி நிதிகளையும் தமிழ் நீதிபதியையும் குறி வைத்து மிகப் பாரதூரமான கருந்துக்களை மேர்வின் சில்வா, சரத் வீரசேகர, உதய கம்மன்பில, வீமல் வீரவன்ச,பொது வெளியிலும் பாராளுமன்றத்திலும் கூறிவருகின்றனர் இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு ஒப்புக்கு கூட எதிர்க்கவில்லை.

எனவே மீண்டும் தமிழர்களை அடக்கி அவர்களின் இருப்பை கபளீகரம் செய்ய முழு அரச இயந்திரமும் தயாரா? அத்துடன் இனவாதிகளின் கருத்துக்களுக்கு வெளிநாட்டுச் சக்திகளும் மறைமுக ஆதரவா? மீண்டும் ஒரு இனத்தை அழித்து தங்கள் பூகோள நலன்களை பெற முயச்சிக்கின்றார்களா? இப்படியான கேள்விகள் அச்சங்கள் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளன.

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிடுவது ஒரு புறம் இருக்க பொது வெளியில் தமிழர்களின் தலையை வெட்டி களணிக்கு கொண்டு வருவேன் என கூறிய மேர்வின் சில்வாவிற்கு ஏன் ஐனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் குமாரசாமி அவர்கள் – அஞ்சலி உரையில் நிரோஷ்

தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் மதிக்கப்படுகின்றார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது மற்றும் போரம்மா உள்ளிட்ட பல தாயக எழுச்சிப் பாடல்களை இசைத்தவரும் ஓய்வுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபருமான செ.குமாரசாமி அவர்களுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை தலைமையில் உடுப்பிட்டியில் நடைபெற்றது.

இதில் அஞ்சலியுரை ஆற்றுகையிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு எழுச்சிப் பாடல்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. ஒரு இனத்தின் அரசியல், விடுதலை, பொருளாதாரம், இனத்தின் அடையாளம்;, கலாசாரம், பண்பாடு என எதுவாக இருப்பினும் எதிர்காலத் தலைமுறைக்கு ஊடுகடத்துவதற்கு இசை முக்கிய மூலமாக அமைகின்றது.

இந் நிலையில் யதார்த்த பூர்வமாக தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் தேசிய பற்றுறுதியினை கட்டிக்காப்பதிலும் அமரர் குமாரசாமி அவர்களுடைய பங்களிப்பு அளவிடமுடியாதது. அவர் ஓர் அரச கல்விச் சேவையாளராக ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபராக பதவி வகித்ததுடன் மட்டும் பணியை மட்டுப்படுத்தி விடாது தயாக உணர்வாளனாகவும் எங்களது சமயத்தினையும் மொழியினையும் வளப்படுத்தும் நல்ல ஓர் கலைஞனாகவும் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.

இன்று அவர் மீளாத்துயில் கொள்கின்ற நிலையிலும் அவர் எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கல்வி அதிகாரி நடராஜா அனந்தராஜ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர்கள், அரச அதிகாரிகள், முன்னாள் போராளிகள், இசைத்துறை கலைஞர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலரும் இறுதி அஞ்சலியுரையமை குறிப்பிடத்தக்கது

இடைக்கால ஏற்பாடாக 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்கள் நகர்வே சரியானது’ அமெரிக்க தூதர்

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இதன் போது தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் கேட்டு அறிந்து கொண்டதுடன் தமிழ் மக்களின் அன்றாடம் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் அரசியல் தலைவர்களினால் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பௌத்தமயமாக்கல், காணிஅபகரிப்பு,அரசாங்கத்தின் பிழையான வரிக்கொள்கை மூலம் வைத்தியர்கள், புத்தியீவிகள் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் எனவும் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘இடைக்கால ஏற்பாடாக 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்கள் நகர்வே சரியானது’எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராட்டிய அமெரிக்க தூதர்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

குறித்த விஜயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மேலும், இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அவர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சரத் வீரசேகர முழுமையான மனநோயாளி – ரெலோ கோவிந்தன் கருணாகரம் கடும் காட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர் ஒரு கூட்டணியாக இணைந்து இனவாதத்தை பரப்பி இந்த நாட்டை மீண்டும் இனவாதத்திற்குள் தள்ள முயற்சிக்கிறார்கள். சரத் வீரசேகர ஒரு முழுமையான மனநோயாளி இவர் பாராளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலில் இருந்தும் முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புற முதுகில் குத்தும் பழக்கம் சிங்களவர்களுக்கு இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார். அவருக்கு பல விடயங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தமிழர்கள் நன்றி மறந்தவர்களும் அல்ல துரோகமிழைத்தவர்களுமில்லை.

காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற தமிழர்களின் தேவை அத்தியாவசியமானதாக காணப்பட்டது. சேர் .பொன் இராமநாதன், சேர்.அருணாச்சலம் ஆகியோர் நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னிலை வகித்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

சுதந்திரத்துக்கு தமிழர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் பல அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தி இந்த நாட்டை பாரிய இன வன்முறைக்குள் தள்ளியது சிங்கள அரச தலைவர்கள் என்பதை எவரும் மறக்க முடியாது.

தனி சிங்கள சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக தந்தை செல்வாவுடன் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கொழும்பில் இருந்து கண்டிக்கு பௌத்த தேரர்களுடன் எதிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். சொந்த நாட்டில் தமிழர்களை படுகொலை செய்து அவர்களை அகதிகளாக்கிய பெருமை சிங்கள பெரும்பான்மை அரச தலைவர்களையே சாரும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

தமிழர்கள் ஒருபோதும் ஆயுத போராட்டத்தை விரும்பவில்லை. அஹிம்சை வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போராடினார்கள். அரச தலைவர்களுடன் போராடினார்கள். ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார்கள்.ஆனால் அஹிம்சை வழி போராட்டத்தை சிங்கள தலைவர்களே ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்தார்கள். இதன் காரணமாகவே ஆயுத போராட்டம் தலைத்தூக்கியது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து பிறிதொரு நிகழ்ச்சி நிரல் ஊடாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றீர்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்த மயமாக்களுக்கான நடவடிக்கைகள் பலவந்தமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகிறது, அதன் மீது விகாரைகள் அமைக்கப்படுகிறது.

குருந்தூர் மலையில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தெற்கில் இருந்துக் கொண்டு குருந்தூர் மலை பௌத்தர்களுடையது என்று குறிப்பிடுகின்றீர்கள். விடுதலை புலிகள் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து பௌத்த விகாரைகள் அழிக்கப்படவில்லை, பாதுகாக்கப்பட்டது.

தெற்கில் இனவாதத்தை பரப்பி விடுகின்றீர்கள். கொழும்பில் வாழும் தமிழ் எம்.பி.க்களின் வீடுகளை முற்றுகையிடுவதாக குறிப்பிட்டு இனவாதத்தை தோற்றுவிக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் ஒரு கூட்டணியாக இணைந்து இனவாதத்தை பரப்பி இந்த நாட்டை இனவாத தீக்குள் தள்ளுகிறார்கள்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை மனநோயாளி என்று சரத் வீரசேகர குறிப்பிடுகிறார். உண்மையில் இவர் தான் ஒட்டுமொத்த மனநோயாளி இவரை போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலை விவகாரம்: அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில், நட்புறவு கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில், இரு நாடுகளின் விமானப் படைகளும் இணைந்து இலங்கை கடற்பகுதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உத்தேச விமான சேவைகளை அதிகரிப்பதும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கான படகு சேவைகளை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார சுற்றுலாவை மேம்படுத்தும் என இந்திய விமானப்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

Posted in Uncategorized

யாழில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் முன்றலில் இன்றையதினம்(03.05.2023) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளரின் கருத்து

இந்த போராட்டத்தின்போது மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்த எமக்கு ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசாங்கம் தயங்குகின்றது.

பயங்கவாத சட்டம் என்பது மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இங்கே இருந்தது. இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

எமக்கும் உரிமை இருக்கிறது

ஆனால் இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம். இந்த நாட்டில் இருக்க எமக்கு உரிமை இருக்கிறது.நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.

இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம். நாங்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை .எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

நீதி வேண்டும்

சுடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும் நீதி வேண்டும் சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும். உலகில் சின்ன நிலபரப்பாக இருக்கும் இங்கு இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.

விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன. இந்த மக்கள் சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிகாட்டிகொண்டே இருப்போம்.

எங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் குற்றப்பத்திரத்தை திருத்த அனுமதி

2019ஆம் ஆண்டு வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கனியா பனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலேல்ல சட்டமா அதிபருக்கு, புதன்கிழமை (03) அனுமதி வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அண்மித்த காலப்பகுதியில் கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் வைத்து வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர், தன்னைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல மணிநேரம் தடுத்து வைத்ததாக கறுவாத் தோட்டம் பொலிஸில் முறைப்பாடு கனியா பனிஸ்டர் பதிவு செய்தார்.

எனினும், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை சோடனை செய்ததாக கனியா பனிஸ்டர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் குறித்த விடயத்தில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைது செய்ய முயற்சி!

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்தும், சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் அப்பகுதி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தில் உள்நுழைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதிச் செல்லும் வீதிகளை மூடி அங்கிருப்பவர்களை கைது செய்ய முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.