பொதுஜன பெரமுனவின் 2 ஆவது கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல மு‍டிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அவர் பொது அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயத்துறையில் எடுத்த தீர்மானம் பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்ததாகவும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை எனவும் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை. 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நாவலப்பிட்டி நகரில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டம்

அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இன்று கூட்டாக தீர்மானித்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் – காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள்

இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கிருஸ்ணமூர்த்தி ஹாங்ஜோன்சன் உட்பட 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்

குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து ம் அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

குறிப்பிட்ட கடிதத்தில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தனது 77 அமர்விற்காக கூடுகின்ற இந்த தருணத்தில் இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர்உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆiணாயாளருடன்இணைந்து செயற்படுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்கள் எனகுற்றம்சாட்டப்படுபவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கு தடைகள் உட்பட இராஜதந்திர சாதனங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

தசாப்தகாலயுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களால்பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் பரிகாரம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாத்திரம் இலங்கை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காணமுடியும்.

2009 இல் முடிவடைந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் புலிகளிற்கும் எதிரான 27 வருட கால போரில்ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்;டனர் காணாமல்போயினர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

13 வருடங்களிற்கு பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என சமீபத்தைய செப்டம்பர் 22 – ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவிக்கின்றது.

2020 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல கடந்த கால குற்றங்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு இலங்கை இன்னமும் தீர்வை காணவில்லை என்றஅடிப்படை பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்இஅனைத்து சமூகத்தினரும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியற்று காணப்படுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் கடந்த கால யுத்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுப்பதில் அமெரிக்கா முக்கியமான நாடாக காணப்படுகின்றதுஇ2015 இல் இலங்கை இணை அனுசரணை வழங்கிய தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா முன்னிலையில் காணப்பட்டது.

2021 இல் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பது நீதியை கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்குவது ஆகியவற்றை கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பை வழங்கியது.

எனினும் 2019 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் உறுதிமொழிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்வாங்கினார்.

அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைமாற்று நீதி செயற்பாட்டை முன்வைக்கவில்லை.

குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும்.

இலங்கையின் மூன்று அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக நான் உங்களை பாராட்டுகின்றேன்.என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் .

இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து கலந்துரையாடியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவை அவர் சந்திக்க உள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கைக்கு கடன் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம்: IMF

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

பலதரப்பு கடன் வழங்குநர்களின் காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளதாகவும், அது எப்போது கிடைக்கும் என்பது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தங்கியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடனான கலந்துரையாடலின் பின்னரே அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தலைவர் Peter Breuer மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் Masahiro Nozaki ஆகியோர் ஜப்பானின் Nikkei Asia இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், கடனை விடுவிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அனுமதி தேவைப்படுகிறது.

அதற்காக, இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான சான்றிதழை சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இந்த வேலைத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு செலவாகும் காலம், கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான காலத்தை உறுதியாகக் கூற முடியாது என Peter Breuer, Masahiro Nozaki ஆகியோர் கூறியுள்ளனர்.

Posted in Uncategorized

கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக ஜனாதிபதி பிலிப்பைன்ஸில் தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபையின் 55 ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இன்று நடைபெற்றது.

கொரோனா தொற்று நிலைமைக்கு பின்னரான உலகின் காலநிலை மாற்றத்திற்கு அமைய, பசுமையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.

மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், வங்கியின் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்வதற்கு இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் குழுவின் வர்த்தக அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு இலங்கையின் கடன் வழங்குநர்களும் கடன் பங்குதாரர்களும் ஆதரவளிப்பார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Ferdinand R. Marcos-ஐ மணிலாவில் சந்தித்தார்.

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை முன் நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

Posted in Uncategorized

22 ஆவது அரசியலமைப்பு மீதான விவாத்திற்கான நாள் குறிப்பு

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவர் நிரோஷிற்கு எதிரான மாவீரர் தின நினைவேந்தல் வழக்கு முடிவுறுத்தப்பட்டது

கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.

மல்லாகம் நீதிமன்றில் கடந்த ஆண்டு மாவீரர் தினம் அனுஷ்டிப்புத் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 28 ஆம் திகதி புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளபட்டது.

அவ் வழக்கில, அச்சுவேலி பொலிசாரின் மேலதிக அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்களில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சட்டம் ஒழுங்கை மீறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மல்லாகம் நீதிமன்றம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை விடுவித்தது.

கடந்த (2021) மாவீரர் தினத்திற்கு முன்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக அவர் உள்ளிட்டவர்கள் குற்றவியல் சட்டக் கோவை சரத்து 106 , பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் கொவிட் தொற்று சட்ட ஏற்பாடுகளையும் அறிவுறுத்தல்களையும் மீறி மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் எனத் தெரிவித்து, அதற்குத் தடை விதிக்குமாறு (வழக்கு இல AR 1577/21) மன்றில் விண்ணப்பித்திருந்தனர்.

அதனை ஆட்சேபித்து கடந்த ஆண்டு சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் சட்டத்தரணி திருக்குமரன் உள்ளிட்ட குழாம் எதிர்த்து வாதிட்டிருந்தது.

அவ் வழக்கில், (கடந்த ஆண்டு) குற்றவியல் சட்டக்கோவையின் மேற்படி சரத்தின் பிரகாரம் குற்றம் இழைப்பதற்கான வலுவான சாட்சியங்கள் இணைக்கப்படவில்லை என்றும் அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவு கூர்வதற்கான உரிமையினை மறுக்க முடியாது எனவும் ஏற்கனவே வலுவில் உள்ள சட்ட ஏற்பாடுகளையும் வர்த்தமானி அறிவுறுத்தல்களையும் சகலரும் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் எனவும் தெரிவித்திக்கப்பட்டிருந்தது.

மேலும், எவராவது சட்டத்தை மீறினால் பொலிசார் கைது செய்ய முடியும் எனவும் பொலிசாருக்கு மன்று தெரிவித்திருந்தது. அவ்வாறு நீதிமன்று தெரிவித்திருந்த நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு கடந்த 14 ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 14 திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கில் நிரோஷ் சட்டம் ஒழுங்கை மீறியுள்ளாரா என பொலிசாரிடம் நீதிபதியினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந் நிலையில் அடுத்த தவணையான நேற்று புதன் கிழமை வழக்கு அழைக்கப்பட்ட போது மேலதிக அறிக்கையினை அச்சுவேலி பொலிசார் தாக்கல் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கு இனி அழைக்கப்படமாட்டாது எனத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களும்

அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில் ஜனாதிபதியினால் கொழும்பில் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எவை?

1 – பாராளுமன்ற தொகுதி

பொல்துவ முற்சந்தியில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம், கும்புக்கஹதுவ வீதி, ரஜமல்வத்த வீதி, பாராளுமன்ற மைதானத்தின் கிம்புலாவல சந்தி வரையான பகுதி, மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டடத் தொகுதி, பின்னியர சந்தி முதல் பெத்தகான சந்தி வரையான பகுதி, தியவன்னா நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன.

2 – உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி , மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதி, கொழும்பு நீதவான் நீதிமன்ற தொகுதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்

டாம் வீதி , அளுத்கடை வீதி, சாஞ்சி ஆராச்சிவத்த வீதி,பார்சல் சுற்றுவட்டம், புனித செபஸ்டியன் வீதி மற்றும் மிஹிந்து மாவத்தை வரையான பகுதி இதில் உள்ளடங்குகின்றது.

3 – ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம்

இந்த அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் சைத்திய வீதியில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரையான பகுதி மற்றும் பேரவாவி, மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, சாரணர் மாவத்தை, கடற்கரை பகுதி உள்ளிட்ட காலி முகத்திடல் வரையான பகுதி

4 – அக்குறுகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம்

பாதுகாப்பு அமைச்சு மாவத்தை , தியவன்ன பூங்கா மாவத்தை, பாடசாலை மாவத்தை , D.G.விஜேசிங்க மாவத்தை வரையான பகுதி அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ளடங்குகின்றது.

5 – விமானப்படை தலைமையகம்

பேர வாவி, சித்தம்பலம் A கார்டினார் வீதி , மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை வரையான பகுதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

6 – பிரதமர் செயலக அலுவலகம்

பிளவர் வீதி, பிளவர் வீதியின் உட்பகுதி , 5 ஆவது ஒழுங்கை , 27 ஆவது ஒழுங்கை வரையான பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்குகின்றன.

7 – அலரி மாளிகை

காலி வீதியின் ரொடுண்டா சந்தியில் இருந்து பெரஹர மாவத்தை அல்விஸ் சந்தியில் இருந்து தர்மபால மாவத்தை வரையான பகுதி, கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தின் கடற்கரை பகுதி, லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி வீதியின் ஒரு பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான பகுதி

8 – பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம்

பௌத்தாலோக மாவத்தை, தும்முல்லை சந்தி, ஶ்ரீசம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை வரையான பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன.

குறித்த பகுதிகளில் காணப்படும் தூதரகங்களுக்கு சொந்தமான இடங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள் என்ன?

பொலிஸ்மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ கடிதம் இன்றி இந்த பகுதிகளில் பெரஹர, கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க முடியாது என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தமிழர் நலன்காக்க தி‌மு.க. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி

இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11.90 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, அண்ணா அறிவாலயத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் துணை மேயர் மு. மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து, இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் சார்பில் முதற்கட்டமாக 11 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாமன்ற நிலைக்குழு தலைவர் என். சிற்றரசு, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந. இராமலிங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.