தேசிய சபை சாத்தியப்படுமா: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரனும் நேற்று (23) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தேசிய சபையில் இணைந்துகொள்ளுமாறு இதன்போது பிரதமர் தமக்கு அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஏதாவது இரண்டை முதலில் நிறைவேற்றுமாறும் அதன் பின்னர் தேசிய சபையில் இணைவது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை, தேசிய சபையில் இணைவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கூடி முடிவெடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

தேசிய சபையில் பங்கேற்றாலும் நடைமுறையில் அதனை எவ்வாறு செயற்படுத்தப்போகிறார்கள் என்பதனை பார்த்தே அடுத்த கட்ட தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உண்மையான நோக்கத்தில் அதனை செயற்படுத்தினால், அதில் பங்குபற்ற முடியும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால், அதில் பங்கேற்க முடியாது எனவும் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் கட்சியிலும் எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய சபையில் தனது பெயர் இருப்பது ஊடகங்களில் தகவல் வௌியாகும் வரை தனக்கு தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் அதிருப்தியை அளிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது முந்தைய அறிக்கையில் பரிந்துரைத்ததை இந்த வரைவுத் தீர்மானமும் இன்னமும் உள்ளடக்கவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதே பரிந்துரையையே அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும் ஒன்பது இலங்கைக்கு வருகை தந்த முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் முன்வைத்துள்ளனர்.

மூத்த ஐ.நா அதிகாரிகளின் இந்த கூட்டு பரிந்துரையை முன்னிறுத்தி, நாங்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகியோர் மைய குழு நாடுகளுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தோம். அக்கடிதத்தில் அவர்களின் தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தோம்.

இலங்கை மீதான ஐ.நா தீர்மான செயல்முறையின் முக்கியமான இந்த தருணத்தில், இத் தீர்மானத்திலாவது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையையும் ஐ.நா.வின் மூத்த அதிகாரிகளின் கோரிக்கையையும் புறக்கணிக்காது சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமை மன்ற உறுப்பினர்களை குறிப்பாக இந்தியாவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இலங்கை உள்ளது – ஜனாதிபதி

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர்.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன.

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை.

தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் ரெலோ பேச்சளா் சுரேந்திரன்

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் வலியுறுத்தல்

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த உப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுத்து வருவதாக சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்தார்.

Posted in Uncategorized

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் நாளை இங்கிலாந்து பயணம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை இங்கிலாந்து செல்லவுள்ளார்.

நாளை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்.

இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் உயிரிழந்தார்.

மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் USAID

USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை

இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை எனவும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவே அதிகளவில் நிதியுதவி வழங்கியது

இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நாடு என்ற வகையில் இப்படியான உதவியை தொடர்ந்தும் வழங்க முடியாது என இந்திய அரசின் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியிலேயே தங்கியுள்ளது எனவும் அந்த சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவின் முடிவு ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல

எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த தீர்மானம் ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல. இதற்கு முன்னர் இந்தியா தொடர்பான சமிக்ஞை ஒன்றை வழங்கி இருந்தது என இலங்கை அரசின் தகவல்கள் கூறியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிய கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியவசிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.

இதனையடுத்து இந்தியா, அத்தியவசியமாக தேவைப்படும் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்கியது.

Posted in Uncategorized

நினைவேந்தல் நிகழ்வுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- மாவீரர்களின் பெற்றோர் கோரிக்கை!

நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமான வேளை அங்கு வந்திருந்த அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் பிற கட்சியினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முகமாக செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருத்தவர்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

அந்நிலையில் அது தொடர்பாக அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தியாக திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்.

இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது.

நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொது நிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.

அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்று நடந்து கொண்டார்.
ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளை தாக்கும் களமாக பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை கடைபிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்.

எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது மிகவும் வேதனைப்பட்டேன்.

அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன்.

எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும். அதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான் பதவியேற்றபோது தாங்கள் அங்கு இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்கின்ற சூழலிலே நானும் அங்கு சென்றிருந்தேன். பொருளாதார அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அதில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே பதவி ஏற்றிருக்கின்றார். இதிலே குறிப்பாக கூற வேண்டிய விடயம் என்னவெனில் எங்களுடைய கிராம புறங்கள் இதனூடாக வலுப்பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது.நிச்சயமாக தட்டி கேட்போம். வன்னி பிரதேசத்தில் ஒரு அமைச்சு பதவி கிடைத்திருக்கின்றது என்ற காரணத்திற்காக நாங்கள் சென்றிருக்கின்றோம்.

ஜனாதிபதியை நாங்கள் சந்தித்த போதும் இவ்வாறு விமர்சனங்கள் வந்தது. மக்களுடைய நலன் கருதி அபிவிருத்தி சம்பந்தமாக இருக்கின்ற விடயங்களிலே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய மக்களும் பட்டினியை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான விடயங்களை பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் வன்னி பிரதேச பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவி கிடைத்த காரணத்தினால் வாழ்த்த சென்றிருந்தேன் அவ்வளவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள அமெரிக்க செனட்டர்கள்

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர்.

ராஜபக்ஸவின் ஆட்சி மிகவும் ஊழலான குடும்ப ஆட்சி என்பதுடன், வெளிப்படைத்தன்மையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த ஆட்சியில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் தமது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் விவசாயம் தொடர்பான தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை, நீடித்து நிலைக்க முடியாத மாபெரும் திட்டங்களுக்காக சீனாவிடம் பில்லியன் கணக்கான டொலர்களை கடனாகப் பெற்றமை, பொது வளங்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான வெளிப்படையான, பொறுப்பான விசாரணைகளை நடத்துவது உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் பரிசீலிக்கத் தவறிவிட்டதாக நான்கு அமெரிக்க செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க செனட் சபையிடம் செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized