உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை – நீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பின் பல ஏற்பாடுகளிற்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் இந்த பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றுள்ள தமிழர்களை அகதிகளாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகக் கருதி அடைத்து வைத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை – குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதே தமிழர் வாழ்வியல் மரபு என தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட தமிழக அரசு உறுதியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகள் முகாம் என்ற பெயரை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என மாற்றம் செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதாக சஜித், அநுர அறிவிப்பு

மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத்தில் அறிவித்தனர்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில்,

இந்நாட்டின் துன்பப்படும் மக்களின் அபிலாஷைகளையோ அல்லது இந்நாட்டின் பாரதூரமான வீழ்ச்சியைத் தடுக்கவோ, அல்லது இந்நாட்டை கட்டியெழுப்பவே எந்த திட்டமும் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (21) காலை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வரிசையில் நிற்கும் மக்கள் படும் துன்பகளை புரிந்து கொள்ளாத, பால் மா இன்றி தவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் துயரங்களை புரிந்து கொள்ளாத, திருடுவதற்கும் சுரண்டுவதற்கும் கை தூக்கும் பாராளுமன்றம் வெறும் கதையாடல் கடை மாத்திரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது.

இந்நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி 5 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது – அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைகின்றது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அரசியல் கைதி பார்த்திபனின் தயாரின் இறுதிச் சடங்கு நேற்று திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அங்கு அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்றும் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், போருக்குப் பின் 13 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை.
கடந்த 26 ஆண்டுகளாக பிள்ளையை அரசியல் கைதியாக பிரிந்து அந்தப் பிள்ளையின் விடுதலைக்காகப் போராடிய தாய் இன்று மரணித்துள்ளார்.

அதுபோன்று கடந்த வராம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் சகாதேவன் நிலக்சனின் தாயாரும் மரணமடைந்தார்.

இதுபோன்று 2000 நாட்களை அண்மித்து நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய் தந்தையரும் நீதி கிட்டாமலேயே போராட்டக்கொட்டில்களிலேயே மடிந்து போகும் அபாயத்தினை காண்கின்றோம்.

இந்த நிலைமை மோசமடைகின்றது. இந்தத் தாயின் மகன் பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக 26 ஆண்டுகளாக சிறையில் நீதியின்றி விடுதலைக்காக ஏங்குகின்றார்.

அவர் தண்டிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மனித உரிமைகளை நசுக்கும் காட்டுமிராண்டித்தனமான சட்டம் என உலகமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான அநீதியான சட்டங்கள் வாயிலாகவே அப்பாவிகள், அல்லது சிறு குற்றங்களுடன் தொடர்புபட்ட தமிழ் இளையோர் சிறைகளில் தசாப்தக்கணக்கில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

தசாப்சக்கணக்கில் நீதி கிட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் இருந்து விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாய்மார்களே நீக்காக விட்டுக்கொடுப்பின்றி போராடுகின்றனர். அவர்களே அரசுக்கு எதிரான சாட்சியமாகவும் காணப்படுகின்றனர். தசாப்சக்கணக்கில் நீதி கி;ட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சீன ஜனாதிபதியிடம் இருந்து விசேட தகவல்

சீன ஜனாதிபதி Xi Jinping அனுப்பிய விசேட தகவலை இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிக்கைகு சென்று அவர் அதனை கையளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

IMF பிரதிநிதிகள், பிரதமருக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவு!

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் நாட்களில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதிய பணிக்குழாமினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் : பிரதமர் நீதியமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.திருத்தச்சட்ட மூலவரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவையின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து திருத்த வரைபிற்கு அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டது.

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பித்தமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமான திருத்தச்சட்ட வரைபு தொடர்பில் சகல கட்சிகளுடன் விளக்கப்படுத்தல் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

திருத்தச்சட்டமூல வரைபினை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணர்ந்து அமைச்சரவை பச்சை கொடி காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது.21ஆவது திருத்தத்திற்கு அங்கிகாரம் வழங்கியமைக்கு நீதியமைச்சர் அமைச்சரவைக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் வர்த்தமானியில் வெளியிட்டு ,வரைபினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார்,வரைபினை வெகுவிரைவில் பாராளுமன்றில் சமர்ப்பித்து,விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21ஆவது சட்டமூல வரைபினை கடந்த மே மாதம் 23ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.குறித்த வரைபினை நிறைவேற்ற முன்னர் சகல கட்சிகளின் யோசனைகளை பெற்று திருத்தப்பட்ட வரைபினை கடந்த 6ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கடந்த ஒருமாத காலமாக சகல அரசியல் கட்சிகளினதும்,சிவில் அமைப்புக்களினதும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற கட்சிதலைவர் கூட்டத்தில் 4 பிரதான விடயங்களுக்கு சகல கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

இரட்டை குடியுரிமையுடைய நபர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும்இஜனாதிபதி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனையையும்,

அத்துடன் அமைச்சரவையின் விடயதானங்கள் வேறாக்கத்தின் போது ஜனாதிபதி பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் (தற்போதைய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும், 10ஆவது பாராளுமன்றில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும்),

தற்போதைய 9ஆவது பாராளுமன்றம் செயற்பாட்டில் உள்ள நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க முடியும், அடுத்த பாராளுமன்றம் அமுலில் உள்ள போது ஜனாதிபதி எந்த அமைச்சினையும் வகிக்க கூடாது என்ற யோசனைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட யோசனைகளுக்கமைய 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.குறித்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவரும் குறித்த சட்டமூல வரைபினை சவாலுக்குட்படுத்தி,7 நாட்களுக்குள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய முடியும்.

தம்மிக்க பெரேரா அளித்துள்ள வாக்குறுதி தீர்ப்பு கிடைக்கும் வரை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப் போவதில்லை

அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.

அவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கின்றமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 05 அடிப்படை உரிமை மனுக்களும் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, வர்த்தகரான தம்மிக்க பெரேரா சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்த்தன, யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அவுஸ்திரேலியாவிடம் இருந்து 50 மில்லியன் டொலர்கள்

இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

குறித்த நிதி உதவியில், 22 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் உலக உணவுத் திட்டத்திற்காகவும் மூன்று மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2022/23 க்குள் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மேலும் 23 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.