சமூகப் பாதுகாப்புக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் – மிச்செல் பச்லெட்!

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சில உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகள் காரணமாக மனித உரிமைகள் மீதான கவலைக்குரிய விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி உதவி செய்யுமாறும், மீள்எழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும் அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதியை முன்னெடுப்பதற்கும் ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோடியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி பதவி விலகல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தொடர்பாக கருத்து வெளியிட்டு பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்த எம்சிசி பெர்டினன்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, சமீபத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஆனால் மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் எம்சிசி பெர்டினன்டோ தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது, வல்லரசுகளின் ஆதரவு வேண்டும் – பிரதமர்

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிலும் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபை கூறியது போல, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆகவே உலக வல்லரசுகளின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதோடு நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற்ற, நிதி நிலைமையை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்தோடு பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை ஸ்திரப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் விசேட உரை

வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இன்று(13) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட உரை ஆற்றவுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றும் வகையில் வௌிவிவகார அமைச்சரின் உரை அமையவுள்ளது.

இன்று(13) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரில் பங்குபற்றும் இலங்கை தூதுக்குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.

இலங்கைக்கான அமெரிக – சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் சீனத் தூதுவர் Qi Zhenhong க்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த சிநேகபூர்வமான சந்திப்பில் வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Posted in Uncategorized

வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலிலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தப்பட்டது

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

அத்துடன், இராணுவத்தினர் பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் ஆர்ப்பாட்டம்

எனினும் குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலைஒன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின்மூலம் தடுக்கப்பட்டது.

இராணுவத்தினரின் நடவடிக்கை

குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும் இன்றையதினம் முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறாக வழிபாட்டு முயற்சிகள் இடம்பெறுவதற்கு அப்பகுதித் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.

 

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் விஜயம்

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலையையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டுமானங்களை கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பௌத்த துறவிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

 

இருப்பினும் அவர் தெரிவித்த கருத்திற்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர்மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை இதன்போது குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை பிரதிஷ்டை : எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகும் தமிழர்கள்

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நாளையை நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும் குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்த நிகழ்வில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பௌத்த பிக்குகள் , தென்பகுதி மக்கள் இராணுவம் பொலிஸ் விமானப்படை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது .

Posted in Uncategorized

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டார்.

இந்நிலையில் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ​​விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

இராணுவத்தின் ஒத்துழைப்பில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுவந்தது.

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் முப்படையினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவருவதாகவும் இதற்க்கு இடைக்கால தடைகோரியும் தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி சட்டதரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் ஸ்ரீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.