இலங்கைக்கான அமெரிக – சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் சீனத் தூதுவர் Qi Zhenhong க்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த சிநேகபூர்வமான சந்திப்பில் வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலிலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தப்பட்டது

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

அத்துடன், இராணுவத்தினர் பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் ஆர்ப்பாட்டம்

எனினும் குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலைஒன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின்மூலம் தடுக்கப்பட்டது.

இராணுவத்தினரின் நடவடிக்கை

குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும் இன்றையதினம் முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறாக வழிபாட்டு முயற்சிகள் இடம்பெறுவதற்கு அப்பகுதித் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.

 

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் விஜயம்

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலையையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டுமானங்களை கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பௌத்த துறவிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

 

இருப்பினும் அவர் தெரிவித்த கருத்திற்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர்மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை இதன்போது குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை பிரதிஷ்டை : எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகும் தமிழர்கள்

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நாளையை நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும் குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்த நிகழ்வில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பௌத்த பிக்குகள் , தென்பகுதி மக்கள் இராணுவம் பொலிஸ் விமானப்படை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது .

Posted in Uncategorized

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டார்.

இந்நிலையில் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ​​விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

Posted in Uncategorized

இராணுவத்தின் ஒத்துழைப்பில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுவந்தது.

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் முப்படையினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவருவதாகவும் இதற்க்கு இடைக்கால தடைகோரியும் தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி சட்டதரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் ஸ்ரீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்த இறுமாப்பில் எடுத்த முடிவுகளால் இன்று மக்களே அல்லற்படுகின்றனர் – ஜனா

தனக்கு அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்தது என்ற இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையே நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையான விவசாயம் அதள பாதாளத்துக்குள் வீழ்ந்ததன் ஒரே காரணமாகும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் இன்று அல்லற்படுவது நம் நாட்டு மக்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய குடும்பத்திற்கு இன்று உணவு கிடைக்குமா என்றே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழும்பஸ்தரும் சிந்திக்கின்ற நிலைமை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தவறான தீர்மானங்களால் உருவாகியிருக்கின்ற இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இன்றைய நிலையில் அவசியமாகும்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகமுடியாது. தனக்கு 5 வருடங்களுக்கு மக்கள் ஆணை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டபாய தெரிவிக்கிறார். கால வரையறையை அவர் எந்தவகையில் நிர்ணயிக்கிறார் என்பது தெரியவில்லை. மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்தவரை வேண்டாமென்று சொல்லும் மக்களிடம் அவர் கூறும் பதில் இதுதானா? அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வெளியேறுமாறு இளைஞர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இப்படியான ஒரு கருத்தை ஜனாதிபதியால் எவ்வாறு கூறமுடிகிறது?

நாட்டில் நடைபெற்ற யுத்தம், அதனால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குள் நாடு இருக்கையில் உலகளவில் ஏற்பட்ட கொவிட் தொற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரீட்சையாகும். அந்தப் பரீட்சையில் அவர் தோல்வியடைந்தார். அதனால் ஏற்படுத்தப்பட்ட விலை அதிகரிப்பும், கட்டுப்பாட்டு விலை அகற்றலும் நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு. இந்த விலை அதிகரிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது அடிப்படை வாழ்வாதாரத்துக்காக அன்றாடம் சிரமப்படும் அடிமட்ட மக்களாகும்.

விவசாயம் நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையாகும். அது இன்று அதள பாதாளத்துக்குள் வீழ்ந்து விட்டது. அதற்குக் காரணம் ஜனாதிபதி தனக்கு கிடைத்த 69 இலட்சம் மக்களின் வாக்கு காரணமாக ஏற்பட்ட இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையாகும். ஒரு கொள்கைளை நடைமுறைப்படுத்த முனையும் போது அது தொடர்பில் நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற சூழலை அறிந்து கொள்ளவேண்டும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் அல்லற்படுவது நாட்டு மக்களே.

கடந்த வருடத்தில் உரம் இன்மையால் நாட்டில் அரிசி விலை அதிகரித்துவிட்டது. அது தவிரவும் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன. இப்போது தொடங்கியிருக்கின்ற வேளாண்மைச் செய்கையாயினும் விளைச்சலைத் தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க வேண்டிய நிலையிலேயே விவசாயிகள் இருக்கின்றனர்.

காரணம் இம்முறையேனும் நேர காலத்துக்கு இரசாயன உரம் கிடைக்குமா என்பதிலேயே மக்கள் தங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் விவசாய அமைச்சர் இந்திய உதவித்திட்டத்திலே அறுபத்தையாயிரம் மெக்றித் தொன் உரம் ஒரு மாதத்துக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார். நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

உரத்தினை மானிய அடிப்படையில் நீங்கள் வழங்காவிட்டாலும், சாதாரண விலையிலாவது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நாற்பது, நாற்பத்தையாயிரம் ரூபாவுக்கு ஒரு அந்தர் யூரியாவை எடுத்து சிறு விவசாயிகள், வேளாண்மை செய்வோர், மரக்கறி செய்வோர், மலையகத் தொழிலாளர்கள் எப்படி அவர்களது விவசாயத்தை முன்னெடுப்பது?

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்கின்றோம். உள்ளுர் உற்பத்தியை விளைவிக்கக் கூடிய அளவிற்கு இரசாயன உரமின்றி எப்படி அந்த விளைச்சல் உருவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று நாங்கள் எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், வரிசையில் நின்று கொண்டிருக்கின்றோம். ஓரளவுக்கு எரிபொருளும், எரிவாயுவும் கிடைக்கின்றது. ஆனாலும் வரிசைகள் மாத்திரம் குறையவில்லை. பெற்றோலுக்கும், டீசலுக்கும் மக்கள் பெரும் ஏக்கத்தில் இருக்கின்றார்கள். எரிவாயு மேல்மாகாணத்தில் கொடுக்கப்படுகின்றது. மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மண்ணெண்ணை கூட தட்டுப்பாடாக இருக்கின்றது.

இன்று மண்ணெண்ணை இல்லாமல் சிறு விவசாயிகள் மரக்கறித் தோட்டம் செய்பவர்கள் தங்களது நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்க முடியாமல் இருக்கின்றார்கள். கடலுக்குச் செல்பவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமலிருக்கின்றார்கள். இன்று நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் இருக்கின்ற நிலையில், கட்டுப்பாடற்ற விலைகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிறு வியாபாரிகள் கூட நினைத்தபடி பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில், அரசாங்க உத்தியோகத்தர்கள், மாதாந்த வருமானம் பெறுபவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள்.

இவ்வாறான நேரத்தில் கமம் செய்பவர்கள், கடலுக்குச் செல்பவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் தங்களது தொழிலைக் கூட செய்ய முடியாமலிருக்கின்றார்கள். எனவே பெற்றோலிய அமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களுக்கு மண்ணெண்ணையையாவது கொடுக்க வேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோளாக இருக்கின்றது. எரிவாயுவைப் பெறமுடியாவிட்டால் மண்ணெண்ணையிலாவது தங்களது அடுப்புக்கள் எரியவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடற்ற விலையைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் முதலாளிகள் முதல் சிறுவியாபாரிகள் வரை தாங்கள் நினைத்தபடி விலைகளைத் தீர்மானிக்கின்றார்கள். இதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை – ஐநா வேண்டுகோள்

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்படப்போகின்ற 1.7 மில்லியன் பேருக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு 47.2 மில்லியன் டொலர் தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய நெருக்கடி காரணமாக எழுந்துள்ள அவசர தேவைகளைபூர்த்தி செய்வதற்கு ஐக்கியநாடுகளின் உதவியுடனான பல்துறை சர்வதேச உதவி தேவை என இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை தொடர்ந்தே ஐநா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள மனிதாபிமான அபிவிருத்தி சகாக்கள் 5.7 மில்லியன் மக்களிற்கு உடனடி உயிர்காக்கும் உதவி தேவைப்படுகின்றது என மதிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் உணவுப்பாதுகாப்பிற்கு பல விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனநாங்கள் தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் பல குடும்பங்களால் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் என இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்கு அவசரநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அபிவிருத்தி மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மிகவும் வலுவானதாக காணப்பட்ட இலங்கையின் சுகாதார துறை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுஇமோசமாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிற்கான தனது ஆதரவை சர்வதேச சமூகம் வெளிப்படுத்தவேண்டிய தருணம் இது என ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி தெரிவித்துள்ளார்.

ஐநாஇ மற்றும் மனிதாபிமான சகாக்கள்இ உதவி வழங்கும் சமூகத்தினர் தனியார் துறையினர் இதனிநபர்கள் இலங்கையில் நெருக்கடியால் அதிகளவு பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் ஆண்களிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் உயர் நடுத்தர வருமான நாடாக காணப்பட்ட இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கி;ன்றது மே மாதம் பணவீக்கம் 57.4 வீதமாக காணப்பட்டது,அதேவேளை முக்கிய உணவு பொருட்கள் சமைப்பதற்கான எரிபொருள் போக்குவரத்து தொழில்துறை போள்றவற்றில் பரந்துபட்ட தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன,நாளாந்த மின்துண்டிப்பும் காணப்படுகின்றது.

உற்பத்தி;க்கான அடிப்படை உள்ளீடுகள் கிடைக்காமை,நாணயத்தின் 80 வீத தேய்மானம்,அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை,மற்றும் நாடு அதன் கடன்களை செலுத்த தவறியமை காரணமாக பொருளாதாரம் கடும் மந்தநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

உணவு நெருக்கடி குறிப்பாக உணவுப்பாதுகாப்பு விவசாயம் வாழ்வாதாரம் சுகாதார சேவைகளை பெறுதல் ஆகியவற்றை பாதித்துள்ளது. இறுதி அறுவடையில் உணவு உற்பத்தி கடந்த வருடத்தை விட 40 முதல் 50 வீதம் குறைவாக காணப்பட்டது,தற்போதைய விவசாயபருவகாலம் ஆபத்தில் சிக்குண்டுள்ளது,விதைகள் உரங்கள் எரிபொருள் கடன் தட்டுப்பாடே இதற்கு காரணம்.

இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் ஐந்து மில்லியன் மக்கள் உணவு உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

சமீபத்தைய ஆய்வுகள் 86 வீதமான வீடுகள் உணவுண்பதை குறைப்பது போன்றவற்றை பின்பற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டு பங்காளிகளின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் அதன் உள்நாட்டு சந்தையின் நிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் இலங்கைக்கு சீனா அழைப்பு விடுக்கிறது என அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில் இருந்து அதே கவனத்தைப் பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஜாவோ, ஒரு நல்ல அண்டை நாடு என்ற வகையில், சீனா இலங்கை மக்களுக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.9 மில்லியன் டாலர்) மனிதாபிமான உதவி உட்பட பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளுடனும் நல்ல அண்டை நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்பதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியின் நேர்மறையான போக்கைப் பேணவும் மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன.

13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தில், 10 மெகாவாட்டிற்கும் அதிக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது விலைமனு கோரப்பட வேண்டும் என எதிர்கட்சி முன்வைத்த கோரிக்கை, குழுநிலை விவாதத்தின் போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் அளிக்கப்பட்டமையால், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இந்நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் போது, எவ்வித திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் மூன்று தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதன்போது பெரும்பான்மை வாக்குகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பாரியளவிலான மின் உற்பத்தி திட்டங்களுக்கான அனுமதி, போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் காரணமாக மின்சக்தி சட்டத்தின் திருத்தம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மின்சார பொறியியலாளர்கள் பணி பகிஷ்கரிப்பொன்றையும் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் நிறைவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குழுநிலை சந்தர்ப்பத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சட்டமூலத்திற்கான திருத்தங்களை முன்வைத்தார்.

இதன் பிரகாரம், எதிர்க்கட்சியினர் முன்வைத்த திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சியின் திருத்தம் 58 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது, திருத்தத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் கிடைத்தன.

தமது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அது தொடர்பிலான சரத்து மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, சட்டமூலத்தின் குறித்த சரத்திற்கு ஆதரவாக 116 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 46 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

இதற்கமைய, இலங்கை மின்சக்தி திருத்த சட்டமூலம் திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பூநகரியிலும் மன்னாரிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறைந்தபட்ச செலவீனங்கள் தொடர்பிலான கொள்கையை மீறும் வகையில், இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதால், பல்வேறு சிக்கல்கள் உருவாவதாக அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

Posted in Uncategorized