பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை இனங்கண்டு, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த குழு பல மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு ஏற்கனவே அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்கமுடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர். அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.

இந்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.

ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழி. இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

குருந்தூர் மலை விவகாரம் காலிமுகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ?ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கேள்வி

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப் படுகின்ற போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுடைய நியாயப் பாட்டினை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் எங்கு சென்றார்கள்?

குருந்தூர் மலை விவகாரம் மதப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. பௌத்த மதத்தின் பெயரால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் அதனூடாக எங்கள் குடிப்பரம்பலை சிதைப்பதற்கும் முயல்வது இனவழிப்பு நடவடிக்கையாகவே கருதப் பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக காலிமுகத்திடலில் இருக்கும் போராளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதையும் தாண்டி தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் தாங்கள் இணைந்து போராடிய பெரும்பான்மையின சகோதரர்களிடம் குருந்தூர் மலையில் பெளத்த சின்னங்களை நிறுவ முயல்வதற்கு எதிராக குரல் கொடுக்க கோரவில்லையா?

காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் என்று மூர்க்கமாக குரல் கொடுத்தவர்கள் சிலர் குருந்தூர் மலை விவகாரத்தில் கள்ள மவுனம் காப்பது ஏன்?

கைதட்டல் கிடைக்காது என்பதற்காகவா அல்லது காலிமுகத்திடலில் போராடும் பெரும்பான்மை இனத்தின் மனம் நோகக்கூடாது என்பதா?
எதற்காக மௌனம் காக்கிறார்கள்?

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ளாத எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இணைந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுபவர்கள் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் சென்று சத்தமெழுப்புவதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயல்வது கேலிக் கூத்தாகும். அது இன்று நிரூபணமாகியுள்ளது.

ஆகவே தென்னிலங்கையில் நடக்கின்ற அரசியல் அதிகார சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்த இடமளித்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து , நல்லாட்சி காலம் உட்பட நாம் பாடம் கற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழர் தரப்பாக பேரம் பேசுவதே தேவையானது.

தமிழ் மக்களுக்கு பயன் தரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றியே நமது தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான நிரோஷிற்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(15.06.2022) மல்லாகம் நீதவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கையினை சமர்ப்பித்ததுடன் சட்டமா அதிபரின் ஆலோனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மன்றில் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை : ரெலோ யாழ் மாவட்ட தலைவரை மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமத்திற்குத் தடை ஏற்படுத்தியதாக மேலும் சிலரை இணைக்கவுள்ளதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம், தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் இவ் வழக்கை சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் பொலிஸார் தாக்கல் செய்திருக்கவேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருத முடியாது.

நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் என மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதேவேளை தனியாராக இருந்தாலென்ன அரச ஸ்தாபனமாக இருந்தாலென்ன பிரதேசசபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

அவ் வழக்கினை கடந்த வருடம் விசாரித்த நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பிரதேசசபைத் தவிசாளர் இவ்வழக்கில் மேலதிக விசாரணைகள் தேவைப்படின் தவிசாளர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மீளவும் இவ் வழக்கிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை முதலாவது சந்தேக நபராக அடையாளப்படுத்தி மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட சிங்கள பெண்கள்! சிவில் உடையில் இராணுவம்-ரெலோ வினோ

சிவில் உடை அணிந்திருந்த பெருமளவிலான இராணுவத்தினர் பௌத்த மதத்தினை தழுவும் பெருமளவிலான பெண்களை காரணமே தெரியாமல் முல்லைத்தீவிற்கு அழைத்து வந்துள்ளதாக ரெலோ தலைமை குழு உறுப்பினரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

Posted in Uncategorized

சமூகப் பாதுகாப்புக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் – மிச்செல் பச்லெட்!

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சில உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகள் காரணமாக மனித உரிமைகள் மீதான கவலைக்குரிய விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி உதவி செய்யுமாறும், மீள்எழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும் அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதியை முன்னெடுப்பதற்கும் ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோடியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி பதவி விலகல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தொடர்பாக கருத்து வெளியிட்டு பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்த எம்சிசி பெர்டினன்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, சமீபத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஆனால் மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் எம்சிசி பெர்டினன்டோ தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது, வல்லரசுகளின் ஆதரவு வேண்டும் – பிரதமர்

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிலும் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபை கூறியது போல, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆகவே உலக வல்லரசுகளின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதோடு நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற்ற, நிதி நிலைமையை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்தோடு பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை ஸ்திரப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் விசேட உரை

வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இன்று(13) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட உரை ஆற்றவுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றும் வகையில் வௌிவிவகார அமைச்சரின் உரை அமையவுள்ளது.

இன்று(13) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரில் பங்குபற்றும் இலங்கை தூதுக்குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.

Posted in Uncategorized