பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 கட்சிகள் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படும்

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன.

ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ரணிலின் அரசாங்கத்தில் பங்குதாரராக தயாரில்லை: சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் பங்குதாரராக தாம் தயாரில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியோ அல்லது வேறு எந்த பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணமில்லை என கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய அமைச்சுகளுடன் இணைந்து, அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்தும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அது தொடர்பில் கட்சியினருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய அரசாங்கத்தில் எவ்வகையிலும் பங்குதாரர் ஆவதில்லை கலந்துரையாடலின் போது தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

11 கட்சி உறுப்பினர்களும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தமது நிலைபாட்டை தெளிவுபடுத்தினர்.

இதன்போது கருத்து வௌயிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,

ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த திடீர் பதவி கிடைத்தமைக்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் தற்போதைய நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை எமக்கில்லை. பசில் ராஜபக்ஸ என்பவர் சால்வை அணியும் ரணில் விக்ரமசிங்க, ரணில் விக்ரமசிங்க என்பவர் Tie-Coat அணியும் பசில் ராஜபக்ஸ என்பதே எனது நிலைப்பாடு

என தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தலைவர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோரி வரும் நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை நாட்டிற்கு பாதகமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் விசேட உரை

பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும், அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.

அதேபோல் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

நாடு தொடர்ந்து வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.தேசிய பாதுகாப்பையும்,அரசியல் ஸ்தீரத்தன்மையை பேண்வதற்கும் பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளேன்.பொது மக்கள் அமைதியான முறையிலும்,சிறந்த சிந்தனையுடனும் செயற்பட வேண்டும் என்பதை பொறுப்புடன் வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வரலாற்று என்றுமில்லாத வகையில் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடியினயால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளதார ஸ்தீரத்தன்மையற்ற நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்;ந்து வலியுறுத்தினார்கள்.குறித்த யோசனைகளுக்கு அமைய கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பல தீர்மானங்களை முன்னெடுத்தேன்.

; அதற்கமைய கடந்த மாதம் ராஜபக்ஷர்கள் இல்லாத இளைஞர்களை உள்ளடக்கிய தற்காலிக அமைச்சரவையை ஸ்தாபித்தேன் அத்துடன் பிரதமரை நீக்கி புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க இணக்கம் தெரிவித்தேன்.

இவ்வாறான பின்னணியில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராத அசம்பாவிதம் இடம்பெற்றதை தொடர்ந்து நாடுதழுவிய ரீதியின் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதால் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

குறுகிய நேரத்திற்குள் பலர் உயிரிழக்கும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையானது.

இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி பேதமற்ற வகையில் கண்டனம் வெளியிட்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தேன்.

இச்சம்பவத்தினை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சமூக கட்டமைப்பில் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் முப்படைகளின் தளபதிகளின் ஒத்துழைப்புடன் நாட்டின் அமைதியை பேண தீர்மானித்துள்ளேன்.நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானங்களை செயற்படுத்துமாறு முப்படையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆகவே பொது மக்கள் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது.

நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்,போராட்டங்களை தூண்டிவிடும் தரப்பினருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.இதுவரையில் பதிவான விளைவுகள் மற்றும் இழப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன்,அரசியல் ஸ்தீரத்தன்மையினை தொடர்ந்து பேணுவதற்கு சகல கட்சிகளை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளேன்.

நடைமுறையில் காணப்படும் நிலைமையை கட்டுப்படுத்தவும்,நாடு ஸ்தீரத்தன்மையற்ற நிலைமையில் இருந்து மீள்வதற்கும்,அரச கட்டமைப்பை முன்கொண்டு செல்வதற்கும் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளேன்.

பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும்,அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.

அதேபோல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய செயற்திட்டத்தை வழங்கி நாட்டை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன்.

அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு நாடு ஸ்தீரமான நிலைமையினை அடைந்ததை தொடந்து அதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பேன்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை தொடர்ந்து வீழ்ச்சிக்கு கொண்டு செல்லாமல் நாட்டு மக்களினதும்,அவர்களின் உடமைகளையும் பாதுகாத்து பொதுத்தன்மையுடன் செயற்படுமாறு அரச செயலொழுங்கின் சகல துறையினரிடனும் வலியுறுத்துகிறேன்.அதேபோல் அமைதியானவும்,சிறந்த சிந்தனையுடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பிரதமர் பதவிக்கு மூவரை பரிந்துரைக்க சுயாதீன உறுப்பினர்கள் குழு தீர்மானம்

பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளது.

11 கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கொழும்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதற்கமைய, முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ ஆகியோரது பெயர்களை பிரதமர் பதவிக்காக முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபய – ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வரகதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை சஜித் ஏற்க தயார் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் மாத்திரமே, பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியா சென்றனரா ? – மறுக்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம் !

எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ இந்தியாவிற்கு தப்பிச் செல்லவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளனர்.

சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை

நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலகும் செய்தியை விரைவாக அறிவிக்கும்வரை மக்களின் போராட்டம் தொடரும் நிலையே இருந்து வருகின்றது என புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தற்போதைய நிலைதொடர்பாக நேற்று புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் சூம் தொழிநுட்ப வசதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிடுகையில்,

நாட்டில் வன்முறை இடம்பெற்று பாரிய சேதங்கள் இடம்பெற்றமைக்கான பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியவர் மஹிந்த ராஜபகஷவாகும். அதேபோன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வும் தனது தம்பியின் பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. அவரும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ எந்தளவு முட்டாள் தனமான, மோசமானவர் என்பது நேற்றைய (நேற்று முன்தினம்) சம்பவத்துடனே விளங்கிக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது. அதிகார பேராசையே இதற்கு காரணமாகும்.

காலி முகத்திடலில் மக்கள் அமைதியான போராட்டத்தையே மேற்கொண்டுவந்தனர். அதனையே மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆதரவாளர்கள் வன்முறைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

எனவே நாட்டில் இடம்பெற்ற மிகமோசமான இந்த சம்பவங்களுக்கு பிரதானமாக மஹிந்த ராஜபக்ஷ் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.

பேராசிரியர் அனுர உதுவன்கே தெரிவிக்கையில், நாட்டில் இந்தளவு பாரிய வன்முறை இடம்பெற்றுள்ள நிலையிலும், ஜனாதிபதி உண்மையான மக்கள் தலைவர் என்றால், அவர் மக்களிடம் மன்னி்ப்பு கோரி, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதை அறிவிக்கவேண்டும்.

அதேபோன்று நாட்டின் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, பொறுத்தமான ஆட்சியொன்றை அமைப்பதற்கு அவர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதை உடனடியாக அறிவிக்கவேண்டும். அதுவரை இந்த போராட்டத்தை மக்கள் முன்னுக்கு கொண்டுசெல்வார்கள் என்றே நான் நம்புகின்றேன் என்றார்.

சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் பிரிவு பீடாதிபதி விசாக்கா சூரியபண்டார தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையில் இடைக்கால ஆட்சி முறைக்கு செல்லவேண்டும். அந்த அடைக்கால ஆட்சியின் பிரதமரால்தான் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.

அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி ஓரளவு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் பச்சை விளக்கை ஒளிக்கவிட்டிருக்கின்றார். அந்த பச்சை விளக்கு முழுமையாக ஒளிரவேண்டும் என்றால், போராட்டக்காரர்களின் அமைதியான போராட்டம் தொடரவேண்டும். ஆனால் அமைதிப்போராட்டம் வேறுவிதமாக மாறினால் நிலைமையும் வேறு விதமாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது என்றார்.

நசீர் அஹமதின் அலுவலகம் எரியூட்டல்

ஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.