7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சித்திரை புத்தாண்டை தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

கொழும்பு – காலி முகத்திடலிலுள்ள ஆர்ப்பாட்ட பகுதியில் இன்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடினர்.

இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் இன்று காலை காலி முகத்திடலில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் .

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்காக இன்று காலை நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.

வலஸ்முல்ல பகுதியிலும் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து இன்று முற்பகல் முச்சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஹொரணை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வௌிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊழல் ஆட்சிக்கு எதிரான சுதந்திர இலங்கையர்களின் குரல் என்ற தொனிப்பொருளில் நேற்று இத்தாலியில் போராட்டம் ஒன்று வலுப்பெற்றது. ரோமில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊழல் மிகு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இத்தாலியில் வசிக்கின்ற இலங்கையர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இதேவேளை அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் கைதான பொலிஸ் அதிகாரியை பிணையில் விடுவிக்க ஆஜரான சட்டத்தரணிகள்

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து ‘ கோட்டா கோ கம ‘ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு சென்றதாக கூறி கைது செய்யப்பட்ட குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாசவை (30158) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (15) பிணையில் விடுவித்தது.

கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், நேற்று (14) பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரையும் ஈர்த்தது.

நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தன்னால் சகிக்க முடியாது எனவும், நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் தான் சுரங்கங்களில் பணியாற்றி ஏனும் வாழ்வதாக அந்த பொலிஸ் உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.

அத்துடன் தன்னை போலவே மனச் சாட்சியுடன் போராடும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இருப்பதாக தெரிவித்த அந்த உத்தியோகத்தர், அவர்களுக்கும் போராட்ட களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

‘ உங்கள் ஒவ்வொரு பெட்டன் பொல்லுத் தாக்குதலும், ஒவ்வொரு கண்ணீர்ப் புகைக் குண்டும் இந்த பிள்ளைகளைத் தாக்காது. அது உங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையுமே சென்றடையும்.’ என இதன்போது அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், தன் மனசாட்சியை திறந்து போராட்டத்துக்கு ஆதரவளித்த குறித்த பொலிஸ் சார்ஜன் அமரதாச, நேற்று ( 14)பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் இரவோடிரவாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவும் அறிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் அமரதாச, இன்று ( 15) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது குறித்த சார்ஜன்ட்டுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன தலைமையிலான 15 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.

பொலிசார், தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும் சந்தேக நபர் குற்றங்களை புரிந்துள்ளதாக மன்றில் கூறினர்.

அதாவது, அரச ஊழியரான குறித்த சந்தேக நபர், அரசுக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரியான அவர், சீருடையுடன் பொருத்தமற்ற இடமொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந் நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சந்தேக நபரான சார்ஜன்டை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணையாளர்கள் கோரினர்.

இதன்போது மன்றில் சந்தேக நபருக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன, சந்தேக நபர் எந்த குற்றமும் இழைக்கவில்லை எனவும், அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையையே அவர் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்துவது குற்றமாகாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அரசுக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக பொலிசார் குற்றம் சுமத்தியுள்ள போதும், அரசாங்கமே மக்களுக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் வாதிட்டார்.

இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா, 3 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் சந்தேக நபரான சார்ஜன்டை விடுவித்தார்.

இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

Posted in Uncategorized

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வீரம் உள்ள தோழர்களே!

வீழ்ந்து கிடப்பது தமிழ் அல்ல

மீண்டெழும் தமிழ் இனத்தின் தீரமான உங்கள் வலிமையும் வளமும் இம்மண் விழிமேல் காத்து நிற்கின்றது இப் புத்தாண்டு உங்களை வரவேற்கின்றது.

தமிழ்த் தாய் அழைக்கின்றேன் ஒற்றுமையுடன் வாருங்கள்.என் உயிர்க் குழந்தைகளே என் கையில் இடப்பட்டுள்ள அடிமை விலங்கை உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க இன்று நான் மெலிந்து போகவில்லை இன்றும் நிமிந்து நிற்கின்றேன் துணிந்து வாருங்கள் உன்
தாய் தன் தலைமேல் சுமந்து நிற்கும் பழுவை இறக்கி வைக்க புத்தாண்டு உங்கள் மனங்களில் புதுமைகள் படைக்கட்டும்.

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்பு

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்போன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime 2020) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் சிறு கைத்தொழில், நுகர்வோர் மற்றும் தொழிலாளர் சந்தைகளிற்கான அமைச்சரும், சட்டன் மற்றும் சீம் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய, மதிப்பிற்குரிய போல் ஸ்கலி உடனான உயர்மட்ட சந்திப்பு ஒன்று செவ்வாய் (12/04/2022) மதியம் 12 மணியளவில் மெய்நிகர்வழி (zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (British Tamil Conservatives – BTC) செயலாளர் கஜன் ராஜ், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர் அம்பிகை கே செல்வகுமார், The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரச்சார பணிப்பாளர் மெலிசா றிங் (Melissa Dring), மற்றும் அதன் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

கீத் குலசேகரம் தனது தலைமை உரையின் போது,

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 140,000 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருப்பதையும், அதுபோல் தற்போதும் தொடரும் கடத்தல்கள் சித்திரவதைகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களாக இலங்கையில் கடந்த இரு வருடங்களிற்குள் சித்திரவதைக்குள்ளாகிய 200 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலான அறிக்கையை (ICPPG) சமர்ப்பித்திருப்பதையும் குறிப்பிட்டு, இருந்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் விசனமடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கோரி வருவதாகவும் திரு கீத் குலசேகரம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, SLC அமைப்பின் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் உரையாற்றும் போது,

இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைக்கு சவேந்திர சில்வா மீதான தடை முழுமையான தீர்வாக அமையாது என்ற போதிலும், நீதி நடவடிக்கைக்கு ஆரம்ப கட்டமாக இருக்கும் என்றும் தொடரும் சித்திரவதைகளை தடுக்க வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் செயலாளர் கஜன் ராஜ் கருத்துத் தெரிவிக்கும் போது,

தாங்கள் பல தடவைகள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவினை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமென கோரியும் இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் தடைசெய்யும் நடவடிக்கை தாமதிப்பது ஏன் என FCDO இனை வினவுமாறும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இதனை செய்ய தவறும் பட்சத்தில், பிரித்தானியாவுக்கு ஐநா மனித உரிமை சபையில் தலைமை தாங்கும் அருகதை உள்ளதா என சந்தேகிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அம்பிகை கே செல்வகுமார்,

இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு இதுவரை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நாட்டப்படவில்லையெனவும் தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சாட்சிகளின் நேர்காணலில் அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அச்சமுற்ற நிலையில் இருப்பதனையும் இங்கு கூட சிலர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதனையும் அறியக்கூடியதாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2019 இலிந்து இன்றுவரை, ஊடகங்களால் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 800 மனித உரிமை மீறல் சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தி இருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 200 கடத்தல் மற்றும் சித்திரவதை இடம்பெற்றதுக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தாம் மீண்டும் மீண்டும் FCDO இனை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்காததினையும் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை வெளிவிவகார அமைச்சர் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும் அதற்குப்பின்னரும் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தையும், அமெரிக்கா சவேந்திர சில்வாவை தடை செய்தமையை போன்று பிரித்தானியாவும் தடை செய்யவேண்டும் என்று மெலிசா றிங் தனது உரையில் வலியுறுத்தினார்.

மேலும் கீத் குலசேகரம் தனது தொகுப்புரையின் போது,

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு (EDM 64) ஆதரவை வழங்குமாறும் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட ஆதாரங்கள் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மேல்முறையீடு (Appeal) அல்லது சட்டமீளாய்வு (Judicial Review) கோரி விண்ணப்பதற்கு குறித்த சட்டத்தில் இடம் உண்டா என்பதையும் தெளிவுபடுத்தும்படி வெளிவிவகார அமைச்சிடம் கேட்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான நிலக்ஜன் சிவலிங்கம் மற்றும் லக்ஸ்மன் திருஞானசம்பந்தர் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய அமைச்சர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணத்தை கேட்டு பதில் தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

ஒரே நோக்கத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக அணி திரண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியே இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, சிவராம், நிமலராஜன், கீத் நொயார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்திற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் புதிய சிந்தனைகளுடன் பிறிதொரு பரிமாணத்தைக் கண்டுவருகின்றது.

அந்தவகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்கின்றது.

Posted in Uncategorized

நம்பிக்கையில்லா பிரேரணை, குற்ற பிரேரணைகளில் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று(12) கையொப்பமிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் மக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஓன்றிணைந்து நிற்பதாகவும் பாராளுமன்றத்தில் சாத்தியமான அனைத்து ஜனநாயக வெற்றிகளையும் அடைவதற்காக பாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்கு மேலதிகமாக 20 ஆவது திருத்தம் தலைகீழாக மாற்றப்பட்டு 19 ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும் அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மஹிந்த நாட்டுக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தல்!

பிரதமர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட உரையை உண்மையில் அரசியல் தெரிந்தவர்களுக்கு என்றால் அந்த ஒரு கதையை விளங்கிக்கொள்ள முடியாமலில்லை. இன்று எங்களுடைய நாட்டில் இருக்கக்கூடிய இந்த நெருக்கடிக்கு முன்னால் ராஜபக்சக்களின் அடுத்த கட்ட ஏற்பாடு என்ன என்று மிகத் தெளிவாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ராஜபக்சக்களுக்கு இருக்கக்கூடிய வழி சூழ்ச்சி மற்றும் அழிவு தவிர வேறெதுவும் இல்லை என்பது அந்த கதை மூலம் மிகத் தெளிவாக இருக்கின்றது. அதனால் மஹிந்தவுக்கு ம முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிலை வழங்குவது ரட்டே ராலவின் பொறுப்பாகும்.

அடுத்ததாக மஹிந்தவின் அழுத்தத்துக்கு பயந்து கொள்ள வேண்டாம் என்று இந்த நாட்டு மக்களுக்கு குறிப்பிடுவதும் ரட்டே ராலவின் ஒரு பொறுப்பாகும்.விசேடமாக ஏப்ரல் 3ஆம் திகதி முதல் போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு. அதேபோன்று அதற்கு இருக்கக்கூடிய பதில் என்னவென்றும் சொல்ல வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் அந்த பதிலை குறிப்பிட்ட பின்னர் ரட்டே ராலவுக்கு வெலிகமவுக்கு போவதற்கு வேண்டி ஏற்படும். பரவாயில்லை அது தொடர்பில் இரண்டாவதாக நாங்கள் யோசிப்போம். உண்மையான கதை தற்பொழுது ராஜபக்சக்கள் தோல்வியுற்று விழுந்த கொக்கைப் போல் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி, சமல், நாமல்,பெசில் உள்ளிட்ட ராஜபக்சக்கள் இன்னும் இருப்பது ஒளிந்து கொண்டுதான். உண்மையில் மஹிந்தவும் ஒளிந்து கொண்டுதான் இருந்தார். கடந்த வாரம் மஹிந்த பதவி விலகுவதற்கு இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் பதவி விலகல் கடிதம் கூட தட்டச்சு செய்ய பொறிக்கப்பட்டிருந்தது. அவையாவும் நீங்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

அவ்வாறு ஒழிந்து கொண்டிருந்த மஹிந்தவுக்கு இவ்வாறான ஒரு தெம்பு வந்தது எவ்வாறு. மீளவுமல முன்னோக்கி வந்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு தைரியத்தை வழங்கியது யார் ?அந்த தைரியத்தை வழங்கியது இந்த நாட்டினுடைய எதிர்க்கட்சி.

அதேபோன்று சுயாதீனமாக செயற்படுவோம் என்று மக்கள் போராட்டத்தை தாரைவார்த்த சிறிய கட்சி கூட்டணி. அடுத்ததாக சுயாதீனமாக செயற்படும் என்று குறிப்பிட்ட மொட்டு அணியினர் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். உண்மையில் அவர்கள் தற்பொழுது மக்கள் போராட்டத்தை தாரைவார்த்து விட்டு விட்டார்கள்.

அவற்றை தாரை வார்ப்பு மேற்கொள்வதற்கு கடந்த சில தினங்களில் திரைக்குப்பின்னால் அதிகமான விடயங்கள் நடைபெற்றது. அந்த அனைத்து சம்பவங்களும் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் ரட்டே ரால ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொன்றாக அபாய எச்சரிக்கை விட்டுக்கொண்டிருந்தார்.

ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த நாளிலேயே ரட்டே ரால குறிப்பிட்டிருந்தார் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மக்கள் போராட்டம் மற்றும் பாராளுமன்ற போராட்டம் ஆகிய இ்ண்டும் ஒன்றாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று.

அந்த பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது. அதே போன்று மீண்டும் ஒரு தடவை இந்த பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய கடல் கன்னிகள் பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் இதனுள்ளே இருப்பதாக.

அமைச்சரவை அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களுக்கு விற்பனை செய்யக்கூடிய நிலவரம் நாளை தோன்றும் என்பதனை உங்களுக்கு அவதானிக்க முடியும். தேவை என்றால் நீங்கள் ஏப்ரல் மாத ரட்டே ரால ஆக்கங்கள் சிலவற்றை எடுத்து பாருங்கள்.

அவை அனைத்திலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்று. தற்போது உறுப்பினர் ஒருவர் ராஜபக்சக்கள் கட்சிக்கு சார்பாக அல்ல சுதந்திரமாக இருப்பதற்கு வழங்குகின்ற பணம் 5 கோடியை தாண்டியுள்ளது. அதனால் தற்போது ராஜபக்ஷக்களுக்கு தெரியும் 41ஆவது அணியையும வழி நடத்த முடியும் என்று.

ரட்டே ரால வரலாறு முழுவதும் இவ்வாறான போராட்டத்தை விமல் போன்றவர்கள் எவ்வாறு தாரை வார்த்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் சிறிய கட்சி கூட்டணி மேற்கொண்ட கலந்துரையாடல் பொய்யென்று தற்பொழுது தெளிவாக விளங்கி உள்ளது. அதை ராஜபக்சக்கள் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

இவர்கள் மேற்கொள்ள வேண்டியது ஜனாதிபதியும் பின்னால் சென்று விடுவது அல்ல. பாராளுமன்ற பெரும்பான்மையை ராஜபக்ஷவிற்கு எதிராக பெற்றுக்கொள்வதற்கு எதிர்க் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த வழிநடத்தலினை மேற்கொள்வதாகும்.

தற்போது அவர்கள் சென்றதன் பின்னர் மஹிந்த பிரதமராக பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய அடுத்த பதில் என்ன? அதுதான் ஒரே ஒரு பதிலாக இருப்பது இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் என்று சொல்வதாகும். அதுதான் ராஜபக்சக்களை விழச் செய்யவுள்ள ஒரே உறவு point ஆகும்.

அதனை செய்யாமல் இந்த மடத்தனமான படையணி வெளியில் வருகை தந்து நாமல நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப் பிரேரணைக்கு தாங்கள் இணக்கம் இல்லை என்று சொன்னார்கள்.அப்படியாயின் எந்த மடையனுக்கு தெரியாமல் இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மை இல்லையென. இதனை விட ஒரு தாரைவார்ப்பு இன்னும் இருக்கின்றதா? அந்த சந்தர்ப்பத்தை தான் மஹிந்த நேற்று மேற்கொண்டது. மஹிந்தவுக்கு தெரியும் மடையனாக வருகின்ற இடத்துக்கு மடத்தனமாக இருக்க.

செவிடனாக இருக்க கூடிய சந்தர்ப்பத்தில் செவிடனாக இருக்க. குருடனாக உள்ள இடத்தில் குருடனாக இருக்க வேண்டும் என்று.ரட்டே ரால குறிப்பிடுவதனை நேற்று மஹிந்த தன்னுடைய கதை மூலம் நிரூபித்தார். மஹிந்த நேற்று நடந்து கொண்டது ஒரு செவிடனைப்போல். இல்லை என்றால் எவ்வாறு.

இந்த நாட்டில் இருக்கக்கூடிய 95 வீதமானவர்கள் gota go home என்ற வசனம் கேட்காமல் 225 பேரும் வேண்டாது என்பது மாத்திரம் கேட்பது. மஹிந்த அந்த இடத்தில் சிறப்பான முறையில் ராஜபக்சக்களை பாதுகாத்து அதனை பொதுப் பிரச்சினையாக மாற்றினார்.

அடுத்ததாக மஹிந்த அவருடைய கதையில் முழுவதும் ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார். அது இந்த பூமியில் இருக்கக்கூடிய போராட்டத்தில் பங்குபெற்ற கூடிய இளைஞர் இவர்களுடைய போராட்டத்தை 88/89 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்தது.

அந்த போராட்டத்தை எல்டீடிஈ யோடு தொடர்புபடுத்தினர். இறுதியில் குறிப்பிட்டது அவ்வாறான ஒரு இரத்த ஆறு ஓடுகின்ற நிலைக்கு இந்த நாட்டை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டாம் என்று. உண்மையில் குறிப்பிட்டது பிள்ளைகளே சும்மா சாக வேண்டாம் என்று.

மஹிந்த போன்று அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்தவர்களின் சமிக்ஞை ஜேஆர் போன்ற கொடிய இராட்சதர்களின் அரசியல் சமிக்ஞை என்னவென்று ரட்டே ரால அன்றே இனங்கண்டார்.உண்மையில் மஹிந்த இதற்கு தயாரானது ஒரு வாரத்திற்கு முன்னரே.

அவர்கள் அதனை ஏற்புடையது ஆக்கிக் கொண்டது நேற்று முன்தினம். இருந்தும் அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு எதிராக தற்பொழுது குண்டர் அணியினரை இறக்கியுள்ளார்கள். அனுராதபுரம், சிலாபம் போன்ற இடங்களில் நேற்று அதனை நாங்கள் கண்டோம்.

உண்மையில் தற்பொழுது அவர்களுக்குத் தேவையாக இருப்பது இந்த பூமியில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துவதே. அதற்கு அவர்கள் ஏப்ரல் 3 மக்கள் போராட்டத்தின் உள்ளேயே உளவாளிகளை அனுப்பி முடிந்துவிட்டது. அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதனால் காலிமுகத்திடல் போராட்ட பூமியில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய அந்த பூமியில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுதல் வேண்டும். தற்போது ஓரளவுக்கு தெரிந்த அடிப்படையில் அந்த இடத்திற்கு தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான ஒரு கருத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

அதற்கு அவர்கள் பாலியல் தன்மையை கூட கையாளலாம். அந்த இடத்தில் இருக்கக் கூடிய இளைஞர் யுவதிகள் பாலியல் தேவைகளுக்காக ஒன்று கூடினார்கள் என்று உருவாக்கலாம். உண்மையில் சில முக்கியமான நபர்கள் என்ற அடிப்படையில் இவ்வளவு காலமும் முகமூடி அணிந்துகொண்டு இருந்த மனிதர்கள் இன்று சமூக ஊடகங்களில் மிருகங்கள் போன்று செயற்படுகின்றார்கள்.

சில அதிபர்கள் கூட அந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். உண்மையில் நாடு எவ்வளவோ அராஜகத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அராஜகத்திற்கு செல்லுகின்ற அவர்களுக்காக இவ்வாறு முன்நின்று செயற்படுகின்ற இலங்கையர் என்ற அடிப்படையில் சாதாரணமாக வெட்கப்படவேண்டிய தன்மைக்கு உட்பட வேண்டிய நிலை இருக்கின்றது.

எவ்வாறு இருப்பினும் ரட்டே ராலவை தைரிமற்றதாக்க ராஜபக்சக்கள் அனைவரும் ஒன்றாக வந்தாலும் அது முடியாது.அதனால் ரட்டே ரால போராட்டக்காரர்களிடம் வேண்டிக்கொள்வது அதனை சரியான முறையில் பேணுங்கள். ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள், பெயர் போனவர்கள் அதனுடைய அமைப்பாளர்களாக நியமியுங்கள். தற்பொழுது அந்த இடத்திற்கு தேவையாக இருப்பது அன்பான படைத்தலைவர்கள்.

உதாரணமாக யுவதியொருவரை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை உங்கள் மீது அவர்கள் ஏற்படுத்த முடியும். தேரர்களோடு உங்களை முரண்பாட்டிக்கு இழுக்கக் கூடியதாக அமையும்.ரட்டே ரால இந்த இடத்தில் குறிப்பிடுவது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வன்முறைகளுக்கு செல்ல வேண்டாம்.

ஒரு வசனத்தைக் கூட அவ்வாறு பயன்படுத்த வேண்டாம். இவர்களுக்கு தேவையாக இருப்பது அந்த இடத்துக்கு போராட்டத்தைக் கொண்டு சென்றால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிகமான நபர்களை அந்த இடத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

விஷேடமாக இரவு நேரங்களில். அதேபோன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். உயர்ந்த பட்சம் சமூக வலையமைப்புக்களை பயன்படுத்துங்கள். அவற்றில் உண்மையான விடயங்களை நீங்கள் கதையுங்கள். ரட்டே ராலவினல முன்னய ஆக்கத்தை வாசித்திருப்பீர்கள்.அதில் தற்போது உங்களுடைய நிழல் கூட உங்களுக்கு எதிரியாக நீங்கள் நினைத்துக் கொண்டு வேலை செய்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டதனை.

அவதானம் என்பது பயப்பட வேண்டாம் என்ற விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.மக்களுடைய ஒத்துழைப்பு இருக்கும் வரை இந்த போராட்டத்தை அவர்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதனை பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு ஆகும். அதே போன்று ரட்டே ரால இந்த நாட்டு மக்களிடம் வேண்டிக் கொள்வது மஹிந்தவின் அந்த கதையை மீண்டும் கேளுங்கள்.

அதன் உள்ளே இருக்கின்ற அச்சுறுத்தலை விளங்கிக்கொள்ள. அச்சுறுத்தலானது யாருக்கும் அல்ல நல்ல ஒரு சமூகத்தைப் பற்றி போராடுகின்ற அந்த இளைஞர்களின் எழுச்சிக்கு எதிரானதே. ராஜபக்சக்கள் அதிகாரத்தை பாதுகாப்பதற்கு அந்த வேலையை செய்தால் அதற்கு தயாராக வேண்டும் பதில் வழங்குவதற்கு. அதனை மேற்கொள்வது கூடியதாக இருப்பது சிவில் சமூகத்தின் உடைய போராட்டத்தினால் மாத்திரம் தான்.

முழு நாடுமே வீதிக்கு இறங்க வேண்டும். அதே போன்று இந்த நாட்டினுடைய விவசாய மக்கள் மக்கள் ஒழிப்புக்கு எதிராக ஒட்டுமொத்த பாரிய வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனால் ராஜபக்சக்கள் போன்று அதற்கு எதிராக இருக்க கூடியவர்களுக்கு பதில் ஒன்று இருப்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

அந்த போராட்டத்திற்கு மக்கள் வருவார்களாக இருந்தால் அந்த போராட்டத்தின் முன்னிலையில் வருவதற்கு ரட்டே ரால தயாராக இருக்கின்றார்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை

வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

Posted in Uncategorized

புதிய பிரதமரின் தலைமையிலேயே இடைக்கால அரசாங்கம் : இல்லையேல் போராட்டம் என்கிறார் வாசுதேவ

புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவி நீக்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாகும்.ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் புறக்கணிக்கிறார்கள்.

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.

சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி வகிக்க முடியாது.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரச நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்காமல் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சினை மீண்டும் ஸ்தாபிக்கும் முயற்சிகளை ஒருதரப்பினர் தற்போது முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.

நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அரச தலைவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஆதரிக்கலாமா? Elanadu Editorial

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி
மீதான நம்பிக்கையில்லா பிரேரனையொன்றை கொண்டுவருவதற்கான

முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஆதரிக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து
கட்சிகள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க
வேண்டுமென்று கோரியிருக்கின்றன. இது தொடர்பில் அவர்கள் ஒரு அறிக்
கையை வெளியிட்டிருக்கின்றனர். வழமைபோல் தமிழரசுக் கட்சி வெளியில்
நிற்கின்றது.

சஜித் பிரேமதாஸவினால் முன்னெடுக்கப்படும் நம்பிக்கையில்லா
பிரேரணை முயற்சி வெற்றியளிக்குமா என்பதில் கேள்விகள் உண்டு.

ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ளவர்கள் அனைவரும்
இதற்கு ஆதரவளிப்பார்களா- என்பது கேள்விக்குறியாகும். ஏனெனில்
அவர்களில் அநேகர், பஸில் ராஜபக்ஷவுடன் முரண்பாடுள்ளவர்களேயன்றி,
மொட்டு தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் அவர்களுக்குள் பெரிய சிக்கல்கள் இல்லை. அதேவேளை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான
அணியுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புக்கள்
இருந்தால் மட்டும்தான், அவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க
லாம்? ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியே,
மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 69
லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் கோட்டபாயவுக்கு வாக்களித்திருந்
தனர். ஆனால் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் அவரை பெருவாரியாக
நிராகரித்திருந்தனர்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், தன்னையொரு
சிங்கள பௌத்த தலைவராகவே காட்சிப்படுத்தியிருந்தார். அனுராதபுரத்தில்,
தனது பதவிப் பிரமாணத்தை செய்ததன் மூலம், தனது வழி சிங்களபௌத்தம் என்பதை மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பிரகடனப்படுத்திருந்தார்.

இந்த நிலையில், அவரைப் பதவி விலகுமாறு கூறும் கோரிக்கையை தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறும் சஜித் தரப்பு, இதுவரையில்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை தொடர்பில் எவ்விதமான நிலைப்
பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஆகக் குறைந்தது கோட்டபாய ராஜ
பக்ஷவின், தமிழர் பிரச்னை தொடர்பான நிலைப்பாட்டை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக்கூட, சஜித் பிரேமதாஸ தெளிவுபடுத்தவில்லை.
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே அவரது செயற்பாடுகள்
அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் சஜித் பிரேமதாஸவின் நம்பிக்
கையில்லா பிரேரணையை ஆதரிப்பது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு
முறை தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்தித்து செயற்படவேண்டும்.

ஜனநாயக்ததை உறுதிப்படுத்துதல் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக்
கொண்டு, விடயங்களை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. 2015 ஆட்சி
மாற்றமும் அப்படியானதொரு கணிப்பின் அடிப்படையில்தான் தமிழர்களால்
ஆதரிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ரணில்-மைத்திரி
ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த
முடிந்ததா?

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மிகவும் கவனமான அணுகு
முறை அவசியம். ஒருவேளை, கூட்டமைப்பின் ஆதரவுடன், பிரேமதாஸ
வின், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையுமானால் – அதன்
பின்னர் கோட்டபாய ராஜபக்ஷவுடன் எந்தவொரு விடயம் தொடர்பிலும்
கூட்டமைப்பினரால் பேச முடியாமல் போகும். ரணில்-மைத்திரி முரண்
பாட்டின்போது, கூட்டமைப்பு ரணில் சார்பில் செயற்பட்டது. முக்கியமாக
சம்பந்தனும் சுமந்திரனும், அப்போதும் ஜனநாயகக் கதைகளையே கூறியிருந்தனர்.

இறுதியில் மைத்திரியின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட
கூட்டமைப்பால், அதன் பின்னர் அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தை
களையும் முன்னெடுக்க முடியவில்லை. இந்த அனுபவங்களிலிருந்துதான்
கூட்டமைப்பு அதன் முடிவுகளை பரிசீலிக்கவேண்டும். ஆதரிப்பது அல்லது
எதிர்ப்பது என்பதல்ல இங்கு விடயம். ஆனால், ஒரு முடிவால் வரப்போகும்
சாதக பாதங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வதே முக்கியமானது.
ஓவ்வொரு முடிவும் இறுதியில் தமிழர்களுக்கு என்ன நன்மையை கொண்டு
வருமென்பதுதான் முக்கியமானது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியது அரசாங்கம்

வௌிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டியை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கலந்துரையாடல் மூலம் கடன் மறுசீரமைப்பிற்கு செல்லவுள்ளதாகவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கூறினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மத்திய வங்கி புதிய ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், கடனை மீள செலுத்துவதை விட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.

எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஏற்றுமதி வருமானத்தை வர்த்தக வங்கிகளினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு கட்டாயமாக மாற்றுவதை 50 வீதத்திலிருந்து 25 வீதமாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மீதமுள்ள 25 வீத வௌிநாட்டு கையிருப்பு, அத்தியாவசிய இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ தளங்களினூடாக இலங்கைக்கு பணத்தை அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கடனை மீள செலுத்துவதற்காக அநாவசியமாக பணம் செலவிடப்பட மாட்டாது எனவும், நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized