கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? – நிலாந்தன்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந்து போராடுவது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

சிங்கள மக்கள் போராடுவது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக.ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 2015 இல் நடந்ததுதான் திரும்பவும் நடக்கும்.ஏனென்றால் ஆட்சி மாற்றம் எனப்படுவது,இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தைத்தான் மாற்றும். மாறாக அரசுக் கட்டமைப்பை மாற்றாது. தமிழ் மக்கள் கேட்பது அரசுக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்று.ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றி இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு சமஸ்டி கட்டமைப்பைத்தான் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் ஆட்சி மாற்றத்துக்கு உரியவை அல்ல.அவை அரசுக் கட்டமைப்பில் மாற்றத்தை கேட்பவை.

ஏற்கனவே 2015இல் ஒரு ஆட்சி மாற்றத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ்மக்கள். அந்த ஆட்சிமாற்றத்தின் எதிர்மறை விளைவுதான் மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை நோக்கி ராஜபக்சக்கள் உழைக்கக் காரணம். தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை ஆட்சிமாற்றத்தின் அப்பாவிப் பங்காளிகளாக மாறி ஏமாற்றம் அடைய முடியாது.எனவே சிங்களமக்கள் இப்பொழுது தென்னிலங்கையில் நடத்தும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

தென்னிலங்கையில் நடக்கும் போராட்டங்கள் ஒரு பகுதி தன்னியல்பானவை. இன்னொரு பகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுவன. தென்னிலங்கையில் உள்ள நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வீதியில் இறங்கியிருக்கிறது.ஏனென்றால் மின்சாரம் இல்லை,எரிவாயு இல்லை, அத்தியாவசிய பொருட்கள் இல்லை.மின்சாரம் இல்லையென்றால் விசிறி இல்லை,குளிரூட்டி இல்லை.காலமோ கோடை.அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்படியிருப்பது? கிராமத்தில் கல்லை வைத்து விறகில் சமைக்கலாம்.ஆனால் அடுக்குமாடியில் என்ன செய்வது?பிரச்சினை நடுத்தர வர்க்கத்தை தாக்கிவிட்டது.அவர்கள் தெருவில் இறங்கினார்கள்.கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை உருவாக்கினார்கள்.அந்த கோஷத்துக்கு உயிர் கொடுத்தார்கள்.ஜனாதிபதியின் மாளிகையை முற்றுகையிட்டார்கள்.

சிங்கள மக்கள் முன்வைக்கும் கோஷங்களில் பெரும்பாலானவை ஆளும் அரசாங்கத்துக்கு எதிரானவைதான்.சிங்களபவுத்த அரசுக் கட்டமைப்புக் எதிரானவை அல்ல என்பதனை தமிழ்மக்கள் கவனிக்கவேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களில் மிகச்சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் ஆட்சிமாற்றத்தைத்தான் கேட்கிறார்கள்.மிகச்சிலர்தான் தமிழ்மக்களுக்கு நீதி வேண்டும்,போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கிறார்கள்.அவர்கள் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையினர்.அவர்களால் பெரும்பான்மை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.ஆனால் தமிழ்மக்களின் உண்மையான நண்பர்கள் அவர்கள்தான். அவர்களை எப்பொழுதும் தமிழ் மக்கள் மதித்து நடக்க வேண்டும்.

அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரை தமிழ்மக்கள் தமது கோரிக்கைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு, இனப்படுகொலைக்கு நீதி போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் தமிழ்மக்கள் அவர்களோடு இணைந்து போராடலாம்.12 ஆண்டுகளுக்கு முன் யுத்த வெற்றியை பால்சோறு பொங்கி கொண்டாடிய ஒரு மக்கள் இப்பொழுது அதே யுத்த வெற்றி நாயகரை கீழ்தரமான வார்த்தைகளால் நிந்தித்து வீட்டுக்குப் போ என்று கேட்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு பழி வாங்கியவருக்கு உண்டாகும் திருப்தியை கொடுக்கலாம். ஆனால் பிரச்சினை அதைவிட ஆழமானது.

கோட்டாபய ஒரு கருவிதான்.மஹிந்தவும் ஒரு கருவிதான். சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அரசின் கருவிகளே அவர்கள்.இன ஒடுக்குமுறையை அவர்கள் உச்சத்துக்குக் கொண்டு போனார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.இன ஒடுக்குமுறையானது மகிந்தவுக்கும் முன்னரும் இருந்தது.தமிழ்மக்கள் போராட வேண்டியது இனஒடுக்குமுறைக்கு எதிராகத்தான். இனஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கும் அரசுக் கட்டமைப்பு எதிராகத்தான்.ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான போராட்டம் என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான பெரும் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதுவே முழுப் போராட்டம் ஆக முடியாது. ஒரு குடும்பத்தை மட்டும் எதிராக பார்த்து அந்தக் குடும்பத்தை அகற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்புவது ஆட்சி மாற்றத்தில்தான் முடியும். இதுதான் 2015 ஆம் ஆண்டு நடந்தது.

எனவே தமிழ் மக்கள் இப்பொழுது மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டம் முற்போக்கானதே. அதே சமயம் சிங்கள மக்களோடு இணைந்து போராட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கோட்டாவை ஆட்சியில் இருந்து அகற்றத் துடிக்கும் எந்த ஒரு எதிர்க்கட்சியும் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளவில்லை.13ஆவது திருத்தத்தை தாண்டிப் போகத் தயாராகவும் இல்லை.இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை கேட்கவும் முடியாது, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வும் முடியாது. ஏனென்றால் எனது கடந்த வாரத்துக்கு முதல் வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தேசிய அரசாங்கம் என்பது சிங்கள பௌத்த தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால் அதில் தமிழ்மக்கள் இணைவதில் எந்த பயனும் கிடையாது. அது ஒரு பல்லித்தன்மை மிக்க தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால்,தமிழ் பிரதிநிதிகள் அதைக்குறித்து தீவிரமாக யோசிக்கலாம்.

எனவே தென்னிலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைக் கண்டு தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.கிருணிகாவுக்கு ரசிகர் மன்றத்தை கட்டியெழுப்பவும் தேவையில்லை.இப்பொழுது சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதி முறையை அகற்ற வேண்டும் என்று.ஆனால் அவரும் இதற்கு முன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்.மட்டுமல்ல சந்திரிகாவும் அவ்வாறு போட்டியிட்டவர்தான்.போட்டியிடுவதற்கு முன்பு ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்பார்கள்.ஆனால் தேர்தலில் வென்றதும் அதை மறந்து விடுவார்கள்.நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை என்பது இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை பலவீனப்படுத்தும் பல அம்சங்களில் ஒன்றுதான்.ஆனால் அதைவிட ஆழமான அம்சங்கள் உண்டு.சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்புதான் இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை தொடக்கத்திலிருந்தே பலவீனப்படுத்தியது.இச்சிறிய தீவின் பல்லினத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமைதான் எல்லாவற்றுக்கும் மூல காரணம். எனவே இங்கு தேவையாக இருப்பது யாப்பு மாற்றம். அந்த யாப்பு மாற்றத்துக்குள் ஜனாதிபதி முறைமையும் அடங்கும்.இந்த அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்குமாறு தமிழ் தரப்பு எதிர்க்கட்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.அவ்வாறு ஊக்குவித்து இது விடயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஓர் அரசியல் உடன்படிக்கையை உருவாக்க வேண்டும்.இது எரிகிற வீட்டில் லாபம் பிடுங்கும் அரசியல்தான்.ஆனால் அது தவிர்க்க முடியாதது.கடந்த சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் வீடுகளை எரித்த அரசியல் அது.எனவே அப்படியோர் உடன்படிக்கையைச் செய்ய முடிந்தால் அடுத்த கட்டமாக சிங்கள மக்களோடு இணைந்து தெருவில் இறங்கலாம்.

தென்னிலங்கையில் நடப்பவைகளோடு ஒப்பிடுகையில் தமிழ்மக்கள் அந்த அளவுக்கு கடந்த 12 ஆண்டுகளில் போராடவில்லை என்பது உண்மைதான். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தம்மை நோக்கி வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டைத் திரும்பவும் போலீசாரை நோக்கி வீசுகிறார்கள். போலீசாரின் தற்காலிகத் தடுப்புகள் உருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள்.அதிரடிப் படையோடு நெற்றிக்கு நேரே வாக்குவாதப்படுகிறார்கள்.எல்லாம் சரிதான்,ஆனால் அவர்கள் அவ்வாறு எதிர்த்துப் போராடுவதால் அவர்களை யாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதில்லை. இதையே தமிழ் மக்கள் செய்தால் நிலைமை என்னவாகும்? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப் போட்டுவிடுவார்கள். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் சட்டமறுப்பு போராட்டங்கள் பெருமெடுப்பில் தொடர்ச்சியாக நடக்காமைக்கு அதுவும் ஒரு காரணம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலிமையாக கேட்பதற்கு இது ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். கோட்டாவை வீட்டுக்கு அனுப்பத்துடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைப்பார்களா? பயங்கரவாத தடைச்சட்டம் இல்லையென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட ஆக்ரோஷமாக போராட முன் வருவார்கள். ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்தான் தமிழ் அம்மாக்கள் காணாமல் போன தமது உறவுகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கத்தக்கதாகவே கேப்பாபிலவில் பெண்கள் காணிக்காகப் போராடினார்கள்.இரணைதீவுப் பெண்கள் தமது வீடுகளை மீட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்கள் அதிரடிப்படையின் துப்பாக்கி வாய்க்கு நேரே நின்று நியாயம் கேட்கிறார்கள். ஆனால் இவையாவும் சிறிய மற்றும் தெட்டம் தெட்டமான போராட்டங்கள்தான். தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பது போன்று பெருமெடுப்பிலான தொடர்ச்சியான போராட்டங்கள் அல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் இல்லை என்று சொன்னால் தமிழ் அம்மாக்கள் இதைவிட ஆக்ரோஷமாக போராடுவார்கள். அதை அரசாங்கம் தாங்காது.

கடந்த வாரம் கிருனிக்கா யாழ் பேருந்து நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்களின் விளைவாக யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு சிறு ஆதரவு அலை ஏற்பட்டது. ஆனால் இதே கிருனிக்கா கடந்த 12 ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்காகப் போராடும் அம்மாக்களோடு சேர்ந்து போராடினவரா?கேப்பாபிலவில்,இரணைதீவில் தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து போராடினவரா?இல்லையே.இதுதான் தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இடம்.

எனவே தென்னிலங்கையில் நடப்பவை ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி என்ற அடிப்படையில் அதன் முற்போக்கான அம்சத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் அந்த போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்து நிபந்தனையின்றி ஆதரிக்கவும் தேவையில்லை. இதை இந்த கட்டுரை சொல்லித்தான் தமிழ்மக்கள் செய்ய வேண்டும் என்றும் இல்லை.ஏனென்றால்,ஏற்கனவே தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மக்களோடு பெருமெடுப்பில் இணையவில்லை. தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி நிலமை அப்படித்தான் இருக்கிறது. கிளிநொச்சி வளாகத்தில் உள்ள சிங்கள மாணவர்கள் போராடியபோது தமிழ் மாணவர்கள் அதில் பெரிய அளவில் இணையவில்லை. அப்படித்தான் யாழ் பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்கள் போராடிய பொழுது ஒப்பீட்டளவில் குறைந்தளவு எண்ணிக்கையான தமிழ் மாணவர்கள்தான் அதில் இணைந்தார்கள். இவ்வாறாக கடந்த வாரம் முழுவதும் நாடுபூராகவும் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கும் யதார்த்தம் எதுவென்றால் நாடு இவ்வாறான போராட்டங்களின் போதும் பெருமளவுக்கு இனரீதியாக பிளவுபட்டு நிற்கிறது என்பதே.

தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுக்கும் ஊடக அறிக்கை

இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாதாரணப் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் தாமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான தீர்வு கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசாங்கமும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாண்டு, அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில் முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக் கூடிய மாபெரும் ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தீ பரவுவதற்கு முன்னர் அதனைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைப்பதற்கான நடவடிக்கைகளே இப்பொழுது உடனடியான தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த நெருக்கடி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அடிப்படையான காரணம் தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளது.

இன்று கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் தேவைப்படுவதெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்வதே ஆகும்.

எனவேதான், இந்த முடிவு இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப் படுவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இன்றைய நிலையில் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சகல அரசியல் தரப்புக்களும் செயற்பட்டு, இந்த முடிவுக்கு வந்து, அதனை நடைமுறைப் படுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதே நாடு எதிர்நோக்கி நிற்கும் மிகப்பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு, சரியான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடியாக இருக்கும் என்பதையும் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.

மாவை சேனாதிராஜா தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி
(த.தே.கூ)
நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் – பா. உ. தலைவர் – தமிழ் மக்கள் கூட்டணி
(த. ம. தே.கூ)
அ.அடைக்கலநாதன்- பா.உ தலைவர்- தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(த.தே.கூ)
தர்மலிங்கம் சித்தர்த்தன் – பா.உ தலைவர்- ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி (த.தே.கூ)
க.பிரேமச்சந்திரன் தலைவர்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணி ( த.ம.தே.கூ)
ந. சிறீகாந்தா தலைவர்- தமிழ் தேசியக் கட்சி (த.ம.தே.கூ)

ஜனாதிபதி செயலகம் முற்றுகை ! பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அமைதிவழிப் போராட்டம் ! காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம் !

கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.

பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின.

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதனால் அன்றாடம் இவ்வாறான பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பெறுமை இழந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

Posted in Uncategorized

சதித்திட்டம் தீட்டி ஆட்சியை கைப்பற்ற முடியும், பாதுகாக்க முடியாது: கொழும்பு பேராயர் தெரிவிப்பு

சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு ஆட்சியை பாதுகாக்க முடியாமற்போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு – கிரீன்ஸ் விதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இணைந்து கொண்டிருந்தார்.

அருட்தந்தையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது,

இலங்கையில், மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற தாக்குதலை எம்மால் மறக்க முடியாது. இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும் போது, தாக்குதல் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. இந்த பேரழிவிற்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது. சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தௌிவாகின்றது. அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும், ஆனால் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது. கடவுளின் சாபம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆட்சியை கைப்பற்றினால் மாத்திரம் போதுமானதல்ல, அரசாங்கத்தை சரியாக நிர்வகித்து அதனை பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்தாது, முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி , தாக்குதலின் பின்னால் இருந்த அனைத்து சக்திகளையும் மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கிடைத்த சாபமே தற்போதைய நிலைமையாகும். சட்டமா அதிபர் இந்த திட்டங்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இந்நாட்டில் சட்டத்தை, நியாயத்தை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

என பேராயர் தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் சிவில் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி பேரணி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமானது.

குறித்த பேரணி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு – நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்!

அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 10 சுயாதினமாக செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் நடைபெற்றது.

10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திரன் அலஸ் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டில் நிலவும் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடனடி அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக உள்ளக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சமகி ஜன பலவேகய கட்சி கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மீண்டும் முன்னோக்கிச் செல்லும் வகையில் அனைவரும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர்.

இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிடவுள்ள கூட்டறிக்கையில் மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கைக்கு உதவி வழங்குவதை ஆராயும் கூட்டத்தை ஒத்திவைத்தது ஐஎம்எவ்

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமென தெரியவருகிறது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து , ஐக்கிய இராச்சியம் என்பவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒன்று கூடும் சுதந்திரமும் , கருத்து சுதந்திரமும் அமைதியாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் , அவை எந்தவொரு ஜனநாயக சமூகத்தினதும் தூண்களாகும்.

எனவே அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர்மையான முன்னெடுப்பாகக் கருதுகின்றோம்.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாய வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன், உரிய அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத்தன்மையை நாம் வலியுறுத்துகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அமைச்சர்கள் இராஜினாமா ஒரு அரசியல் நாடகம் – அதிகார போராட்டத்தில் பசில்

இலங்கையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளமை சந்தேகத்திற்குரியது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த போதிலும், பசில் ராஜபக்ஷவே அரசாங்கத்தின் நிதிகளை நிர்வகித்து வருகிறார். நிதியமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட பொது நிதிக்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் இல்லாத போதிலும், பணம் அச்சிடுதல் தொடர்கிறது.

ஏப்ரல் 6, 2022 (நேற்று) மட்டும் இலங்கை மத்திய வங்கி 119.08 பில்லியன் ரூபாய்யை அச்சிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், பசில் ராஜபக்ஷ இன்னும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கி அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரங்களை பிரயோகித்து வருகின்றார்.

பல அமைச்சர்கள் இராஜினாமா தொடர்பான பொதுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள போதிலும், அமைச்சர்கள் பலர் தமது தனிப்பட்ட அலுவலகங்கள் ஊடாக அமைச்சுக் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜினாமா செய்ததாகக் கூறும் அமைச்சர்கள் எவரும் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ வாகனங்களையோ, அரச சொத்துக்களையோ ஒப்படைக்கவில்லை

பசில் ராஜபக்ச எதிர்வரும் சில தினங்களில் நிதியமைச்சில் மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதாகவும், ஜனாதிபதி பதவி விலகினால் ஜனாதிபதி பதவியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கைப்பற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவும் அவர் ஊடாக நாட்டை ஆட்சி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகார பரிமாற்றத்திற்கு தேவையான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் மேலும் பெறுவதற்காக அரசாங்கத்தின் பல சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக அவர் தனிப்பட்ட பேச்சுக்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – தமிழக முதல்வர் மத்திய அரசிடம் தெரிவிப்பு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, இன்று (ஏப்.7) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதல்வர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்துக் கொண்ட முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தமிழக முதல்வர் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.