தேசிய அரசாங்கத்தில் இணைய மாட்டோம்

“தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு தேசிய அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவை வழங்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன. எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு விடுக்கப்பட்டாலும் நாம் அதில் இணையமாட்டோம்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதால் பாரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. இதே ஜனாதிபதிதான் ஜனாதிபதி பதவியில் தொடர்வார். பாராளுமன்றத்திலும் அவர்களின் அதிகாரமே காணப்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் புதியதொரு ஆட்சியே எமது இலக்கு. அந்த இலக்கை அடையவே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.” எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

IMF அறிக்கை மீதான விவாதத்தை நடத்த அரசாங்கம் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

மார்ச் 28 ஆம் திகதி கொழும்பில் BIMSTEC மாநாடு ஆரம்பம்

5 ஆவது BIMSTEC மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் BIMSTEC மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாக பங்கேற்கவுள்ளார்.

30 ஆம் திகதி BIMSTEC மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமை தாங்கவுள்ளார்.

உச்சி மாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்திய குழுவாக BIMSTEC அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது BIMSTEC சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து வரும் ஈழ அகதிகளைக்கு உதவுமாறு தமிழக முதலமைச்சரிடம் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கோரிக்கை

இலங்கையில் வாழ முடியாதென்று இந்தியா செல்லும் உறவுகள் தொடர்பில் முதலமைச்சரிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாகவே மக்களுடைய தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பிள்ளைகளுக்கு சரியான முறையில் உணவு கொடுக்க முடியவில்லை. அவ்வாறான ஒரு பிரச்சினை இலங்கை நாட்டிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் உணவு பொருட்களின் விலை மிக உயர்வடைவதனால் அன்றாடம் உழைக்கின்றவர்கள் பட்டினியை எதிர் கொள்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. அதனால் இந்தியா செல்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அது தவிர்க்க முடியாதது என்றே கூறுகின்றேன். ஏனென்றால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவில்லை என்றால் தாய், தந்தை அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தான் யோசிப்பார்கள்.

ஆகவே இலங்கையில் பட்டினியால் இறப்பதை விட இந்தியா செல்வது சட்டவிரோத செயற்பாடாக இருந்தாலும் கூட, அவ்வாறான ஒரு செயற்பாட்டை மக்கள் செய்வது அந்த காரணங்களை வைத்து கொண்டு தான். எனவே இந்திய அரசாங்கம் அங்கே வருபவர்களை முகாம்களில் விட்டிருப்பதாக அறிகின்றேன். அந்தவகையில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

இலங்கையில் வாழமுடியாதென்று இந்தியா வரும் உறவுகளை நீதிமன்றத்தினை அணுகவைத்து சிறப்பு முகாம்களில் அடைக்காது, மக்கள் தங்கியிருக்கின்ற முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் முதலமைச்சரிடம் முன் வைக்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி கைவிடமாட்டார்!சிறீகாந்தா தெரிவிப்பு

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்றுஎங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,கூட்டமைப்புடன் நேற்று நிகழ்ந்த உயர்மட்ட பேச்சு வார்த்தைகளில், அரசாங்கத் தரப்பினால் மேலோட்டமான முறையில் வாக்குறுதிகள் தாராளமாகவழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களில் அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் சகல அத்துமீறல்களும் அடாவடி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படாத வரையில், இந்த வாக்குறுதிகள் எல்லாம் விரைவில் அர்த்தம் அற்றுப் போய்விடும்.

அத்துடன், அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதிலும், நீண்ட பல வருடங்களாக சிறைக்குள் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, காலதாமதம் செய்யாமல் விரைவாக விடுவிப்பதிலும் அரசாங்கத்திற்குஎந்த தடையும் இருக்க முடியாது.இந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்படுகின்றன.அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் தனது வாக்குறுதிகளின் விடயத்தில்அரசாங்கம் தன்னைத் தானே நிரூபித்தாக வேண்டும்.காலத்திற்கு காலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமது உடனடிஅரசியல்.தேவைகளுக்காக வழங்கிச் சென்ற வாக்குறுதிகள் எல்லாம் தமிழர் மனங்களில் இப்பொழுதும் பசுமையாகவே உள்ளன.

1977ல், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் காலத்தில் இருந்து 40 வருடங்கள் கழித்து சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம் வரையில்,தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளுக்கு சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள்காற்றில் பறக்கவிடப்பட்டதை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட உரிமை கோரும் தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் உதவியும், அமெரிக்கா, பிரிட்டன்உட்பட மேற்குலக நாடுகளின் ஆதரவும் அவசரமாக தேவைப்படும் இக்கட்டானஇந்த நேரத்தில், தமிழர்களை தான் அனுசரித்துப் போவதானஓர் தோற்றப்பாட்டினை காட்டுவதற்கு அது முயற்சிக்கின்றது என்பது தெட்டத்தெளிவானது.

தமது பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும்பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்றுஎங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது.காணமலாக்கப்பட்ட தமிழர்களின் விவகாரத்தில், இந்த அரசாங்கம் எதுவும்செய்யமாட்டாது. அப்படிச் செய்வதாக, இருந்தால் தமக்குத் தாமே படுகுழிதோண்டுவதாகவே அது இருக்கும் என்பதும் அரசாங்கத் தலைவர்களுக்கு நன்கு தெரியும். அதனாலத் தான் காசைத் தந்து, கண்ணீர் விடும் உறவுகளின் வாய்களைமூட வைக்கலாம் என்ற முட்டாள்த்தனமான சிந்தனை மேலோங்கி நிற்கின்றது.

இந்த நிலைமையில், தமக்குள் பரஸ்பர விமர்சனங்களையும்,குற்றச்சாட்டுக்களையும் தமிழர் தரப்பு தவிர்த்துக் கொண்டு, இன்றையசூழ்நிலையை இனி எப்படி பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். விசுவாசத்துடன் சொல்வதானால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என்பதுநடக்குமாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போதுஉத்தியோகபூர்வமாக தனக்கு வழங்கப்பட்டு, இப்பொழுதும் அரசாங்கத்தின்தயவில் தான் தொடர்ந்து வசித்து வரும் ஆடம்பர அரச மாளிகையை மீண்டும்அரசாங்கத்திடம் கையளித்து விட்டு, ஓர் பாராளுமன்ற உறுப்பினர் என்றமுறையில் தனக்கு தரப்பட வேண்டிய அரசாங்க குடியிருப்பு தொகுதி வீடுஒன்றிலிருந்து, அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சம்பந்தன் வரமுடியுமாக இருந்தால், பேச்சுவாரர்த்தை மேசையில் அவரின் ஆக்ரோச குரலுக்குபலமடங்கு பலம் சேரும்.

ஏற்கனவே, பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள நிபந்தனை விதிக்கப்படவேண்டும் என்ற ரெலோவின் நிலைப்பாடு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாலும் அதன் ஏனைய இரண்டு கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்துரெலோ ஒதுங்கி நின்றதன் மூலம், பேச்சுவார்த்தை மேசையில் சம்பந்தனின் குரலுக்கு எதிர்மறையான முறையில் வலு சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதைகுறிப்பிட்டாக வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசின் ‘113’ படைபலத்தை தகர்க்க – ’11’ அணியினர் பலமுனை தாக்குதல்!

‘இலக்கை விரைவில் அடைவோம்’ – என கண்டி மண்ணில் விமல் சபதம்!

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ‘மொட்டு’ அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு – இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவருமான விமல் வீரவன்ச நேற்று (24.03.2022) சூளுரைத்துள்ளார்.

அத்துடன், பஸில் ராஜபக்சவின் அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டிவிட்டு, நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்துவதற்கான ‘அரசியல் நாடகத்தையே’ 11 கட்சிகள் அரங்கேற்றிவருகின்றன என எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் அடியோடு நிராகரித்தார்.

” எந்தவொரு ராஜபக்சக்களுக்காகவும் சோரம் போக தயாரில்லை.” – எனவும் விமல் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உட்பட ’11 கட்சிகள் அணி’ யின் பிரதிநிதிகள் இன்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து, ஆசி பெற்றதுடன், சமகால நிலைவரம் பற்றியும் உரையாடினர். இதன்போது ‘முழு நாடும் சரியான பாதைக்கு’ எனும் தமது அணியின் வேலைத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் பற்றி மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, ” ஆணவ போக்கில் செயற்படும் – அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக செயற்படும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” – என்ற அறிவிப்பை விமல் விடுத்தார்.

2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

பங்காளிக்கட்சிகளின் ஆதரவு கிட்டியது. அதன்பின்னர் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அரவிந்தகுமார், டயானா போன்றவர்களும் அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் அரச வகம் இருந்தன.

அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை (150) விஞ்சிய ஆதரவு. எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் அரசு விசேட பெரும்பான்மையை இழந்துவிட்டது. சுதந்திரக்கட்சியும் காலைவாரும் நிலையிலேயே உள்ளது.

சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச ,சந்திம வீரக்கொடி, விதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் தொலவத்த ஆகியோருக்கும் அரசுடன் நல்லுறவு இல்லை. சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.காவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எனவே, மொட்டு கட்சிக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான சாதாரண பெரும்பான்மை ( 113 ஆசனங்கள்) ஆதரவு கூட ஊசலாடுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விமல் தரப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மைகூட நிலையாக இல்லாவிட்டால் ஆட்சியை முறையாக முன்னெடுக்க முடியாது. அரசியல் ஸ்தீரமற்ற தன்மை உருவாகும். அது வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையலாம்.

எனவே, அரசியல் நெருக்கடியை தவிர்க்க தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கு அரச தலைமை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘விமல்’ தரப்பினரால் தனித்து ‘அரசியல் போர்’ தொடுத்து இந்த அரசை ஆட்டம் காண வைப்பது கடினம். அதற்காக கடுமையாக போராடவேண்டிவரும். எனவே, பிரதான எதிரணிகளுடன் சங்கமித்து போரை முன்னெடுத்தால் இலகுவில் இலக்கை அடையலாம்.

ஆனால், எதிரணிகள் மற்றும் விமல் தரப்புகளின் இணைவு என்பது இழுபறியில் இருக்கும் ஒன்று. அது சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுபோல – பிரதான எதிரியை வீழ்த்த ‘தற்காலிக’ சங்கமத்துக்கு சாத்தியம் இல்லாமலும் இல்லை.

11 அணியின் மூலம் அரசின் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை இலகுவில் இலக்கு வைக்கலாம் என்பதால் மேற்படி தரப்பை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பதும் அரசியல் இராஜதந்திரம் அல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது .

ஆர்.சனத்

தமிழரையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கே பேச்சு நாடகம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

தமிழரையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கே பேச்சு சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. இதனைக் கூறினார்.

கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்படவேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சுட்டிக்காட்டினார்.

பேச்சை மேசையைக் கூட்டமைப்பினர் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்துக் கோட்டாபய அரசைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். .

தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தீர்வை வழங்க இந்தக் கோட்டாபய அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது எனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

காணாமலாக்கப்படவர்களின் உறவினர்கள்ஸதாக்கப்பட்டதற்கு நீதி கோரி யாழில் போராட்டத்திற்கு அழைப்பு

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வலிந்து

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் இன்றையதினம் காலை 10 மணியளவில் நல்லூர்
இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கண்டனப் பேரணி தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ.லீலாவதி கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் கண்டனப் பேரணி முற்றவெளியில் நிறைவடையும்.

இந்த பேரணியில் கட்சி மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து இந்த போராட்டத்தை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றார்.

சீனாவினால் இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் 2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு வருட நிறைவு இவ்வருடம் அனுஷ்டிக்கப்படுவதை நினைவுகூரும் வகையில், இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக சீன தூதரகம் குறிப்பிட்டது.

போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதன் மொத்த பெறுமதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

COVID-19 தொற்று பரவல் மற்றும் சர்வதேச அளவிலான மாற்றங்கள் காரணமாக, உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நிலைமைகள் என்பன பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ் இரண்டு நாடுகளின் தொழில்நுட்ப குழுக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடி, உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை மிக விரைவில் மேற்கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சீனா தொடர்ந்தும் இலங்கையின் சமூக பொருளாதார ரீதியிலான அபிவிருத்திக்கு தம்மால் இயன்றளவு உதவிகளை மேற்கொள்ளும் என சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுக்க பணச்சபை முறைமையே தீர்வு – பிரபல அமெரிக்க பொருளியலாளர் ஆலோசனை

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 203 இலிருந்து 290 வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு இலங்கை ‘பணச்சபை முறைமையை’ ஸ்தாபிப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹன்க், மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளைச் செய்துவருகின்றார். அவ்வாறு செய்திருக்கும் பதிவொன்றிலேயே அவர் மேற்கண்ட விடயம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

‘இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 26 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கக்கூடிய டொலர் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் அந்நாட்டிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன’ என்று ஸ்டீவ் ஹன்க் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு இலங்கையில் கடந்த 1884 தொடக்கம் 1950 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த ‘பணச்சபை முறைமை’ மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுத்தியுள்ளார்.

இலங்கை சிலோன் என்று அறியப்பட்ட காலப்பகுதியில் பணச்சபை முறைமை நடைமுறையில் இருந்ததுடன் 1950 ஆம் ஆண்டில் அம்முறைமை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.