கிறிஸ்மஸ் கொண்டாடத் தயாராகும் அமைச்சர்கள்- கொழும்பு பேராயர் கண்டனம்

தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள், பொறுப்பான அமைச்சர்கள் பெருமளவிலான பணச்செலவில் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

மட்டுமாகலை புனித இருதய தேவாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கிறிஸ்துமஸ் வரவுள்ளது. சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையின் தலைவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு நகரை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்தேன். பயன் என்ன? மக்களின் பொக்கெட்டுகள் காலியாக உள்ளன. உலகில் எல்லா நாடுகளிடமும் பிச்சை எடுக்கும் நாடாக இலங்கை மாறிவிட்டது.
தலைவர்களுக்கு ஏழைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள், மாறாக மக்களிடம் சென்று அவர்களின் வலிகள் மற்றும் துன்பங்களை விசாரிப்பார்கள் . எவ்வாறாயினும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடமையை புறக்கணித்து பாராளுமன்றத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

“மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி குழந்தைத்தனமாக நடந்து கொள்கின்றனர். இன்று உணவின்றி நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள், குழந்தைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால் நோய்வாய்ப்படுகிறார்கள். எனினும், தலைவர்கள் மக்களின் துயரங்களைக் கண்டும் காணாதது போல் செயற்படுகின்றனர்” என பேராயர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏராளமானோர் வேலை வாய்ப்பையும், வருமான ஆதாரங்களையும் இழந்துள்ளனர். இலங்கையில் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், பொருட்களின் விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் கணிசமானோர் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்என பேராயர் மேலும் தெரிவித்தார்..

இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் 26 இலட்சம் குடும்பங்கள்

இலங்கையில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை கலால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

68 இலட்சம் குடும்பங்களில் 17 இலட்சம் பேர் சமுர்த்தி பயனாளிகள் எனவும் மேலும் 7 இலட்சம் பேர் சமுர்த்தி நன்மைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது மதுபானத்திற்கு 75 சதவீத வரியும், சிகரெட்டுக்கு 65 முதல் 75 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர்,

“அரச வருமானம் நாட்டிலேயே மிகக் குறைந்த நாடாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டதுடன், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் தென்னை, பனை போன்றவற்றின் மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், சகல துறைகளிலும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

அத்தியாவசியமற்ற உணவு மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதை முடிந்தவரை நிறுத்த வேண்டும். பொருட்கள், மருந்துகள் மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களை பயன்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

எட்வர்டு ஸ்னோடனுக்கு குடியுரிமை வழங்கிய புதின்

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமையை, அந்நாட்டு அதிபர் புதின் வழங்கியுள்ளார்.

வேறு நாடுகளை பூர்விகமாகக் கொண்ட 75 பேருக்கு குடியுரிமை ஆணையை ரஷ்யா வழங்கியுள்ளது. இதில் ஸ்னோடனும் இடம்பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து இதுவரை ஸ்னோடன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஸ்னோடன் ரஷ்யாவுக்கு அகதியாக தஞ்சம் புகுந்தார்.

ஸ்னோடனை அமெரிக்கா அரசு தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால், ரஷ்யா இதற்கு சம்மதிக்கவில்லை. அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து வந்தது. இந்த நிலையில் ஸ்னோடனுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் போராடும் நாடு, மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்: மீனாட்சி கங்குலி

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிக்கும் உரிமையை முடக்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சட்டங்கள் நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைப்பதையும் உறுதிப்படுத்துகிறது  என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குமுறை ஜனாதிபதியின் அவநம்பிக்கையான முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் போராடும் ஒரு நாடு மக்களின் குரல்களைக் கேட்க வேண்டுமே தவிர அவர்களை சிறையில் தள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐ.சி.சி.ஆர்.பி.யின் கீழ் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இலங்கைக்கு கடமைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் என்பவற்றை தடுப்பதற்கு, வலுவான தீர்மானம் அவசியம் என்றும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  உறுப்பு நாடுகள், இலங்கை மக்களின், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிறைவேற்றுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Posted in Uncategorized

இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு

இந்திய அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  திறப்பு தங்களிடமே தரப்பட்டதாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  நினைத்து செயற்படுவது வேதனைக்குரியது – பா.உ. ஜனா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவையொட்டி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று தியாகி திலீபன் அவர்களது 35ஆவது ஆண்டு நினைவு தினம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக நினைவு கூரப்பட்டதையிட்டு உண்மையிலேயே வேதனையடையக் கூடியதாக இருக்கின்றது. இத்தனை இழப்புக்களுக்குப் பின்பும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் எங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை என்பதை நினைக்கும் போது உண்மையில் வேதைனையாக இருக்கின்றது. இருந்தாலும் தியாகங்கள் என்பது பல்வகைப்பட்டது. 1974ஆம் அண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று பொன் சிவகுமாரன் தன்னுடைய உயிரைத்தியாகம் செய்ததிலிருந்து 2009 மே 18 வரை பல தியாகங்கள் தமிழர்களின் உரிமையைப் பெறுவதற்காக இந்த நாட்டிலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் திலீபனுடைய தியாகம் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு தியாகமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஏனென்றால், போராட்டத்தில் மோதலில், குண்டு வெடிப்பில் தன்னுடைய உயிரை எம் மக்களுக்காகத் தியாகம் செய்யாமல் உண்ணா நோன்பிருந்து அஹிம்சை வழியில், காந்திய வழியில் தன்னுடைய உயிரை ஈர்த்த ஒரேயோரு நபர் என்றுதான் நாங்கள் கூறக்கூடியதாக இருக்கும்.

உண்மையில், அவருடைய அதே காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவன் என்ற ரீதியில் அவருடன் ஒரே இயக்கத்தில் இணைந்து பயணிக்காவிட்டாலும் சம காலத்தில் இரு வேறு திசைகளில் பயணித்தவன் நான் என்ற வகையில் இன்று 35 வருடங்களில் முதல் முறையாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் புழகாங்கிதமடைகின்றேன். அந்தவகையில், திலீபன் அவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை மு;னவைத்து உண்ணா நோன்பிருந்து 12 நாட்களில் மரணத்தைத் தழுவியிருந்தார். அந்த ஐந்து கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் 35 வருடங்கள் கடந்த போதும்; நிலுவையில், கோரிக்கைகளாகவே இருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும். இராணுவ முகாம்களிலும், சிறைகளிலுமிருக்கும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளில் மூன்று இன்றும் தொடர்ச்சியாகவே இருக்கிறது.

அந்த வகையில், தமிழ் ஈழப் போராட்டத்தில் குறிப்பாக, பிரதானமாக 5  இயக்கங்கள் சமகாலத்தில் போரிட்டிருந்தாலும் அந்த இயக்கங்களுக்குள் ஒற்றுமையீனும் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில்  தங்களுக்குள் பல வகையான முரண்பாடுகளுடன் அந்த போராட்டங்கள் தங்களுக்குள்ளும் நடைபெற்றது. இருந்தாலும் தமிழர்களின் உரிமைக் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சக்தி இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உணர்ந்ததன் நிமிர்த்தம் 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. வடக்குக் கிழக்கில் தமழ் மக்களின் பெரும் பிரதிநிதியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இன்று ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றிருந்தாலும் தனித்துவமாக நடந்து கொண்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே தந்துவிட்டதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று கூற முடியாது அந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே மணிவண்ணன் தரப்பினரும், கஜேந்திரகுமாரும் உரிமை கோருகிறார்கள். எனவே அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடமே பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் திறப்பைத் தந்து விட்டுச் சென்றிருப்பதாக தாங்கள் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினத்தை, இங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தில் கூட செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல.

நாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இடத்தில் திலீபன் அவர்களை நினைவு கூர்ந்தாலும் இன்றைய சூழலில் பெருமளவான மக்கள் அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மனமிருந்தாலும், இலங்கை அரசியன் புலனாய்வுப்பிரிவினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து, அதாவது விசாரணைகளுக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக இப்படியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நிலை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால், இன்று சற்றுக் குறைந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று கூறமுடியாது. கடந்த காலங்களில் திலீபன் உட்பட எமக்காக உயிர் நீத்த அத்தனை தியாகிகளையும் நினைத்து அனைவருக்குமாக பிரார்த்திப்போமாக என்றார்.

Posted in Uncategorized

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்?

கொழும்பில் உள்ள பல விசேட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபரால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எனினும், கொழும்பின் மத்திய பொருளாதார வலயத்தின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பால், பாரியளவில் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள்  ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களினால் ஏற்படும் பொருளாதார சேதங்கள் அதிகமாக உள்ளபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதன் மூலம் வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கிணங்க, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, புலனாய்வுப் பிரிவினரை ஒருங்கிணைத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு, பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாடு திரும்பியதும் வர்த்தமானி இரத்துச் செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டும் ஐ.நாவில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

இலங்கையில் ஸ்திரமான சூழ்நிலை உருவாகி வருகின்ற போதிலும், போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால்  காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்துவர் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக நிலவிவரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட விடயங்கள் இவை.

கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டது அரசாங்க அதிகாரிகள் அங்கு தமது கடமைகளைச் செய்யமுடியாது போனது. இதுபோன்ற முக்கிய முடிவெடுக்கும் இடங்கள் தடைபட்டால், அத்தகைய இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை திங்கட்கிழமை  (26)அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதோடு, ஒலுவில் துறைமுகம் பாவனைக்கு உகந்தாக இல்லாத  நிலையில், அதன் நுழைவாயில் பிரதேசத்தைச் சூழ மணல் மேடு குவிவதாலும், கடலரிப்பு காரணமாக அயல் கிராமங்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாலும், அலைத் தடுப்புச் சுவரின் தவறான நிர்மாணம் காரணமான சீர்கேடுகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும்  அவரது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளையும் மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாகவும் உயர்ஸ்தானிகர்  தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில்  மீன்பிடித் துறை அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக ஆலோசகர் ரகேஷ் பாண்டே, துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தையொன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.