“பதவி மாற்றத்தின் மூலம் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது” – மைத்திரிபால சாடல்

முக்கிய பதவியில் உள்ள ஒருவரை மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராகிவரும் நிலையில், ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தா்.
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான வளர்ச்சிகளை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு நபரை மாற்றுவதன் மூலம் அதை அடைய முடியாது. இறக்குமதி/ஏற்றுமதி மற்றும் நிறுவனப் பங்குகள் போன்ற பல அம்சங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றன”என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினைக்கான தீர்வு ஒரு பொதுவான வளர்ச்சி கட்டமைப்பில் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது. இதற்கு ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற மேம்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய நீண்ட காலத் திட்டம் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய், பூமடுகண்டலில் நில அபகரிப்பு முயற்சி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா பகுதியிலுள்ள பெரும்பாண்மை இனத்தவர்கள் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

பெரும்பாண்மை இனத்தவர்களின் குறித்த அபகரிப்பு முயற்சியை நேற்று முன்திகம் (12) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன், பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்தோடு குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் பிறிதொருநாளில் கலந்துரையாடல் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில், கொக்குத்தொடுவாய், பூமடுகண்டல் பகுதி என்பது தமிழர்களுடைய பூர்வீக மானாவாரி வயல் நிலங்களாகும்.

கொக்குத் தொடுவாய் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு தமது பகுதிகளிலிருந்து இடம்பெயரும் வரையில் பூமடு கண்டல் பகுதியில் 420 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் நீண்டகால இடப்பெயர்வின் பிற்பாடு கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்குத் தொடுவாய் பகுதியைச் சேர்ந்த தமிழ் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியமர்த்தப்பட்ட பிற்பாடு பூமடுகண்டல் பகுதியில் 138 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் தற்போது அப் பகுதியில் பெரும்போக மானாவாரி நெற்பயிற்செய்கைக்கான ஆயத்தப்பணிகளில், வயல்நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் ஈடுபடும்போது, வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் அதற்கு இடையூறு விளைவிப்பதுடன், குறித்த விவசாய நிலங்களில் தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் அப்பகுதித் தமிழ் மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரிடம் முறையிட்டிருந்தனர்.

அதற்கமைய 12.09.2021 அன்று குறித்த பகுதிக்குச் சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிலைமைகளை ஆராய்ந்தனர்.

அப்போது அங்கு பெரும்பாண்மை இனத்தவர்கள் பலர் தமிழ் மக்களின் குறித்த பூர்வீக வயல்நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும், அங்கு சென்ற தமிழ்மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்களுக்குமிடையில் வாய்த்தர்கங்கள் இடம்பெற்றதுடன், அபகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப் பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் வருகை தந்திருந்தார். குறித்த உத்தியோகத்தருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, பிறிதொருநாளில் மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலர் தலைமையில் குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வது என்ற முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கும் அபாயம்! – குரலற்றவர்களின் குரல் அமைப்பு

நாட்டில் தடுப்பு காவலிலுள்ள சிறைக்கைதிகளில் பலர், தொடர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற விபரீத நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20ஆயிரத்து 228 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதாவது, நாட்டினுடைய சிறைக்கட்டமைப்பின் பிரகாரம் சுமார் 12 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்துப் பராமரிக்க முடியும் என சிறைத்துறை தலைமையகம் கூறியுள்ளது.

மேலும், நாட்டுக்குள் அன்றாடம் அதிகரித்துச்செல்கின்ற குற்றச்செயல்கள் காரணமாகவே சிறைக்கூடங்கள் நிரம்புவதாக கூறிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிட முடியாது.

வளப்பற்றாக்குறைகளை கோடிட்டுக்காட்டிக்கொண்டிருக்கும் சட்டம் மற்றும் நீதித்துறையின் தாமதம், கைதிகளுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதிலிருந்து தூரமாகவே நிற்கிறது.

சட்டத்துறை காரியாலயத்திலும் நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின்றன.

வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நீதி அமைச்சு தெரிவித்து வருகின்றது. ஆனாலும் பெரும்பாலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் நீண்டகால தவணைத்திகதியிடப்பட்டு வருவதையே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

விசேடமாக இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ‘ஸ்கைப்’ தொழிநுட்பத்தின் வழியே நீதவான ஊடாக நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்று வருகின்றபோதும், பாதிக்கப்பட்ட தரப்பு நியாயங்களை நேரடியாக மன்றுக்கு எடுத்துக்கூறி முறையிடுவதில் இடையூறுகள் காணப்படுகின்றன.

நடைமுறையிலிருந்துவந்த தண்டனைக் கைதிகளுக்கான வீட்டு விடுப்பு வழங்கும் செயற்பாடானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் தமது அன்புக்குரிய உறவவுகளைப் பார்த்துப்பேசுவதற்கு கைதிகளால் முடியாமல் இருக்கின்றது.

மேலும், ஊட்டச்சத்துடன் கூடிய போசாக்கான உணவு, போதுமான மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியத்தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் கைதிகள் விரக்தியடைந்துள்ளார்கள்.

இவ்வாறான விடயங்களால் சிறைத்தடுப்பில் உள்ளவர்கள் இயல்புக்கு மாறான உடல், உள நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வருவதாக கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.

அத்துடன் தொடர் மன அழுத்தமானது வன்முறை, போதைக்கு அடிமைப்படுதல், தற்கொலை எண்ணம் போன்ற விபரீத நிலைக்கு கைதிகளை இட்டுச்செல்லும் அபாயம் ஏற்படலாம்” என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வுகோரி புதுச்சேரி முதலமைச்சருடன் பேச்சு

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் ஆகியன இணைந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து, இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி முதலமைச்சர்களை சந்தித்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் இன்று (12) சந்தித்தனர்.

இவர்களது கோரிக்கைகளை கேட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி, மத்திய அரசுக்கு எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் என். ஏ. கோன், சமதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், இளைஞர் அணி பொறுப்பாளர் வர்மா, சமதா கட்சியின் புதுச்சேரி மாநிலத்தலைவர் தினகரன், பொதுச்செயலாளர் ராஜகுரு, ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகநூல் பதிவு: இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை!

திருகோணமலையில் முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில்,  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில்,  திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள்  ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கூறியுள்ளதாவது, “கடந்த வருடம் 27.11.2020 திகதியன்று, எனது மகனான பாலகிருஷ்ணன் ரதிகரன் (28 வயது)  முகநூலில் கவிதை ஒன்றினை பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சுமார் ஒரு வருடமாக எனது மகனை இழந்து, எங்களது குடும்பம்  துன்பத்தில் உள்ளது. எனவே, ஜனாதிபதி எமது நிலைமையை உணர்ந்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சண்முகராஜா கலைச்செல்வி தெரிவித்துள்ளதாவது,  “கடந்த 02.07.2021 திகதியன்று  எனது மகன் விதுலக்ஸ்சன் (24 வயது) கைது செய்யப்பட்டார்.

மேலும், எங்களது குடும்பம் அவரது உழைப்பில்தான் வாழ்கின்றது. ஆகவே எனது மகனை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிறிஸ்டி வினோத் லிஷாலினி தெரிவித்துள்ளதாவது, “எனது கணவர் கிறிஸ்டி வினோத் (36 வயது) கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட எனது குடும்பம் தற்சமயம் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றது.

ஆகவே, அவரை விடுதலை செய்து எங்களது துயரை போக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

ஈழப் பிரச்சினைக்கு, இந்திய நடைமுறைகள் ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் – வே.இராதகிருஷ்ணன்

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு, இந்திய சட்டத்தின் கீழான நடைமுறைகள் ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான வே.இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைய்தீனின் அழைப்பை ஏற்று, தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் நாட்டு மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை.

அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள் நிறைவேறவில்லை.

புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.

இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.

இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது.

30 வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட உள்ளது.

முதல் நாளான நாளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.

மேலும் அன்றைய தினமே ஆப்கானிஸ்தான் , வெனிசூலா , மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளன.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம்.

மறுப்புறம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என கணிக்கப்படுகின்றது.

அதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதன் போது தேசிய நல்லிணக்கம், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் நட்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமை நிலவரம் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர மையங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப்பரப்பில் தற்போதுள்ள அரசியல் குழப்பங்கள் குறித்து  தலைமைக்குழுவில் ஆராய்வு – செயலாளர் நாயகம் ஜனா

தமிழ்த் தேசியப்பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் 18ஆம்திகதி மத்தியகுழு கூடி ஆராயவிருக்கிறது என்று இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் பரப்பிலும் ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே  பாராளுமன்ற உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா)இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் தமிழ்த் தேசியப் பரப்பிலும் தற்போது பேசுபொருளாக இருக்கும் நாளை (13) நடைபெறவிருக்கும் ஐ;கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 48வது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஆணையாளருக்கு தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து பல முனைகளிலும் கடிதங்கள் எழுப்பட்டுள்ளன. இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளினாலும் எழுதப்பட்ட கடிதங்களில்  பல குழப்பங்பள் மக்கள் மத்தியில் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்துவிட்டது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடையாது என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு கட்சியினரை ஒரு கட்சியினர் வசைபாடிக் கொண்டும் இருக்கின்றன.

இந்த வேளையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக் கூட்டம்  மெய்நிகர் வழியாக நேற்றைய தினம் (11) நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் இக் கருத்துக்கள் சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு இந்தக் குழப்பத்திற்கு முடிவுகாண்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

இருந்தும் இது சம்பந்தமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு எதிர்வரும் 18ஆம் திகதி மெய்நிகர் வழியாகக் கூடி தீர்க்கமான முடிவொன்றை எடுக்க இருக்கிறது.

கட்சிகளின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதும் கலந்துரையாடப்படுவதும் வழமையானதே. தமிழ்த் தேசியம் சார்ந்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற வகையில் தொடர்ச்சியான முயற்சிகளை எமது கட்சி எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மூடப்பட்ட யாழ். சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்கவும் –  வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து,பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறை மாவட்டங்களின் ஆயர்கள் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவுற்றபோதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் சர்வதேச நிறுவனங்கள்,மனித உரிமை கண்காணிப்பாளர்கள்,இராஜதந்திர அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அவசியமாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சுவிட்சர்லாந்து தூதரகத்தினுடைய அலுவலகத்தின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்பதை ஆயர் மன்றம் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து அலுவலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளினால் வடக்கு-கிழக்கு மக்கள் அடைந்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கின்றோம்.

அத்துடன் இலங்கையை தமது பூர்வீகமாகக் கொண்டு தற்போது சுவிஸ் பிரஜைகளாக இருக்கின்றவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற நிலையில் அவர்களது சமூக, கலாசார,பொருளாதார தேவைகளை கண்காணிக்க யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் சுவிஸ் தூதரக அலுவலகம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்,இவற்றை கருத்தில் கொண்டு அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் விரைவில் மீளத் திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது

Posted in Uncategorized

பதுக்கப்படும் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கவே அவசரகாலச்சட்டம் – நீதி அமைச்சர்

பதுக்கப்பட்ட பொருட்களை அதாவது சீனி, மா போன்றவற்றை அரசுடமையாக்கி பொது மக்களுக்கு விநியோகிக்கும் அதிகாரம் நுகர்வோர் பாகாப்புச் சட்டத்தில் கிடையாது. அதனாலேயே இந்த அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது.
என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் நுகர்வோரை பாதுகாப்பதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அலர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா வைரஸ் தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக காணப்படுகிறது. இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரிட்டன், நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தற்போது வேகமாக பரவிவருவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நமது நாடு நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் வருமானத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரிசி, சீனி, மா போன்ற பொருட்களுக்கு இயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

இதனால் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுப்பதற்காக பொது மக்கள் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கான பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதற்காவும் மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு ஜனாதிபதியினால் அவசர கால விதிகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மற்றும் பதுக்கலை தடுப்பதற்கு நுகவோர் பாதுகாப்புச் சட்டம் நாட்டில் உண்டு. இந்நிலையில் அவசரகால விதிமுறைகளை அமுலாக்கும் தேவை ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அதாவது இவ்வாறு பதுக்கலில் ஈடுபடுவோரை நீதி மன்றத்தில் ஆஜார்படுத்துவதன் மூலம் நீதி மன்றம் தண்டனையாக தண்டப்பணம் விதிக்க முடியும். ஆனால் பதுக்கப்பட்ட பொருட்களை அதாவது சீனி, மா போன்றவற்றை அரசுடமையாக்கி பொது மக்களுக்கு விநியோகிக்கும் அதிகாரம் நுகர்வோர் பாகாப்புச் சட்டத்தில் கிடையாது. அதனாலேயே இந்த அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்குச்சட்டம் ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி இதனை அமுல்படுத்தினார். ஆனால் நாம் இதனை செய்யவில்லை. தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது தொற்று பரவுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட பகுதியை தனிமைப்படுத்தும் அதிகாரம் சுகாதார பணப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படுகிறது. நோய் பரவுவதை தடுப்பதற்கு இது பெரு உதவியாக அமைகிறது என்றும் என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.