உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்புறப் பொறிமுறை அவசியமில்லை – அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வெளிப்புறப் பொறுமுறையொன்றின் தேவை ஒருபோதும் இல்லையென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

அதேபோன்று, அவ்வாறான பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் உள்ளக சட்டக் கட்டமைப்பின் கீழ், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஊடகச் சந்திப்பு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஜெனீவா குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை” எனும் தலைப்புகளின் கீழ், இன்றைய ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறை கூட்டத்தொடரின் போது, அதன் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையின் போது, காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்கல், எல்.டி.டி.ஈ சிறைக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சிக்குரியதென்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து, இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து, இலங்கையுடன் கைகோர்த்து நின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு, அவர்களின் விசேட பாராட்டுக்கு இலக்காகியுள்ளன என்றும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இலங்கையானது அமைதியான நாடாக விளங்குகிறது.

பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தைப் பரப்பும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றே, நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது, சீரமைக்கப்பட்ட கொள்கையாகும் என்று எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு, அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே இலங்கையின் நோக்கமென்றும் இதன்போது, இந்நாட்டின் அமைவிடம் தொடர்பில் அதிக அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தயார்ப்படுத்தல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த செயலாளர் ஜயநாத் கொழம்பகே, அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும் அது தொடர்பில், உலகின் பல நாடுகளுக்கு, கடந்த மாதங்களில் பல்வேறுபட்ட அறிக்கைகள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பிரதிபலனாகவே, அந்நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்றன, இது விடயத்தின் பாரிய ஒருங்கிணைப்புடன் செயலாற்றியிருந்தன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“கொவிட் சவாலை வெற்றிகொள்வது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்” என்ற உள்ளடக்கத்துடனேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்களதும் உரைகள் அமையவுள்ளன என்று, இந்த ஊடகச் சந்திப்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

தத்தமது நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பான இணக்கப்பாடுகளுடன், கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்கு, இம்முறை கூட்டத்தொடர் பாரிய சந்தர்ப்பத்தை வழங்குமென்றும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல்வேறு தவறான அபிப்பிராயங்களைச் சீர்செய்வதற்கும், இம்முறை ஐ.நா கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திக்கொள்வார் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது – ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

கடந்த ஐ.நா சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. அத்துடன் இலங்கை அரசு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளமை தொடர்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்..

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க முடியாது.
குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்த விடயங்கள் மீண்டும் ஒத்துழைக்கத் தயார் என்று கூறப்படுகின்ற நிலையில் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறாக எமது தமிழ் பிரதேசங்களில் பல்வேறு அத்து மீறல்கள் நடந்து கொண்டு உள்ளதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அவ்விடயம் சம்பந்தமான கருத்துக்கள் கூறப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது.

மேலும் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆணையாளரின் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.

இந்த நாட்டில் இடம் பெறும் இராணுவ ஆட்சி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஆசிரியர்களின் போராட்டம் இவை அத்தனையும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டுள்ளதே தவிர அரசாங்கம் அவற்றை எல்லாம் உடனடியாக செய்ய வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்கிற உத்தரவு குறித்த அறிக்கையில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.

கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது.மக்களும் அதனை வரவேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடையமாக அமைந்துள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக நாங்கள் எதிர் பார்க்கின்ற சர்வதேசம் என்கிற விடயம் கை விட்டு போய் விடுமோ? என்கின்ற கேள்வி எங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறித்த அறிக்கையில் எமது பல பிரச்சினைகள் தொடர்பாக மேலோட்டமாக காட்டப்பட்டுள்ளது.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு நிலைப்பாட்டை இந்த அறிக்கை சொல்லவில்லை. அதனை விட இலங்கை அரசாங்கத்தை நம்புவதாகவும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் நல்லதொரு மனிதர் என்கின்ற போர்வையில் அவரை புகழ்ந்து பேசுகின்ற ஒரு நிலையும் அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குகின்றது போன்ற ஒரு நிலையும் காணப்படுகிறது.

இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் இருக்கும் வரை தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. கால தாமதத்தை ஏற்படுத்துகின்ற வாய்ப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் கருத்தை உள்வாங்கிய வெளியுறவுக்கொள்கை நிலைப்பாட்டை பலப்படுத்தவேண்டும் – ரெலோ

நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பலப்படுத்தவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ தெரிவித்துள்ளது.

நோர்வேயில் பாராளுமன்றத் தேர்தலில் பங்காற்றிய புலம்பெயர் தமிழர்களை பாராட்டுகிறோம் என்ற தலைப்பில் நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்ற்றுப் பாராட்டும் வகையில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2021 செப்டம்பர் மாதம் 13ம் திகதி நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

புலம்பெயர் நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும்போது கொள்கை ரீதியாகக் குறைந்தபட்சம் திம்புக்கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர் தரப்புக் கோரிக்கைகளைக் கொள்கை ரீதியாக ஆதரிக்கும் கட்சிகளுக்குத் தமிழர்கள் கூட்டாக வாக்களிக்கும் நிலைப்பாட்டைக் கைகொண்டது பொருத்தமான ஓர் அணுகுமுறை என்று நாம் கருதுகிறோம். இது சம்பந்தமாக நோர்வே வாழ் எமது உறவுகளின் பிரதிநிதிகளோடு நாம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தோம்.

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளை ஈழத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாவும், ஈழத் தமிழர்கள் தனி இனமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் அங்கீகரித்தல் ஆகிய நிலைப்பாடுகள் அடிப்படையானவை.

இவ்வருட ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் சமூகத்தோடு ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அங்கு தீர்மானம் இயற்றும் நாடுகளுக்கும் இக்கோட்பாடுகளை முன்வைத்து கூட்டுக் கோரிக்கையை சமர்பித்துள்ளோம்.

குறைந்தபட்சம் இந்த கோரிக்கைகளை கொள்கையளவில் பிரகடனப்படுத்தும் கட்சிகளை நோர்வே புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக ஆதரிக்கவேண்டும் என தெளிவு படுத்தியிருந்தோம்.

இந்த கொள்கை அடிப்படையில் , நோர்வேயின் தலைநகர் தேர்தற்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கொண்டிருந்த ரொட்த் கட்சி கடந்த பெப்ரவரி மாதத்தில் ஈழத் தமிழர் தேசியம் சார்ந்த கொள்கையை கட்சியின் நிலைப்பாடாக அறிவித்திருக்கிறது. இது ஒரு முன்மாதிரியான, வரவேற்கத்தக்க செயற்பாடு.

நோர்வே தழுவிய தேசிய மட்டத்தில் ஏனைய கட்சிகளையும் அதைப் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுமாறு தமது அரசியல் நடவடிக்கைகளை புலம் பெயர் தமிழர்கள் ஒருமித்த நிலையில் கட்டமைக்கவேண்டும் எனவும் எமது நோர்வே வாழ் உறவுகள் முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் ஈழத் தமிழ் தேசத்தின் அங்கீகரித்த ரொட்த் எனும் சிவப்பு கட்சி 8 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்ட நோர்வே வாழ் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே தமது நாடுகளின் வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நோர்வே புலம்பெயர் தமிழர்கள் பலப்படுத்தவேண்டும்.

நோர்வேயில் பரந்து வாழும் தமிழர்கள் எமது தேசியம் சார்ந்த கொள்கை வகுப்பை வலியுறுத்தும், பலப்படுத்தும் வகையில் நீங்கள் ஆதரிக்கும் கட்சிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்குமாறும் வேண்டுகிறோம்.

ஈழத் தாயகத்தில் எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்வின் விடிவுக்காய் போராடிக் கொண்டிருக்கும் எமது வேலைத்திட்டங்களுக்கு வலுச் சேர்க்க,  புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்தேசிய உறவுகளை இவ்வகையான செயல்பாடுகளை ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோருகிறாம்.

ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் – ரமேஷ் பத்திரண

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள  தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எவ்வாறாயினும், ​கொரோனா ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்த பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சிறு வணிகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே டாக்டர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.

இந்த மாத இறுதிக்குள் நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் ஆமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மூன்று தடைவைகள் நீடிக்கப்பட்டதன் அயப்படையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

ரஞ்சனுக்குப் பொது மன்னிப்பு -இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மறுப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த தகவல்களை மறுத்துள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றார்.

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருடைய கடிதத்தில் கிட்டத்தட்ட 08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனஇ நாட்டின் மூத்த பிரஜை மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நடிகராக, ஒரு சமூக சேவையாளராக, ஒரு அரசியல்வாதியாக ரஞ்சன் ராமநாயக்க, பொது மக்களுக்கான சேவைகளை ஆற்றிவந்த ஒருவர் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பலருக்குஇ தற்போதைய அரசாங்கத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காரணத்தினால் அத்தகைய பாரிய குற்றமல்லாத விடயத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு துன்பப்படுவது துரதிர்ஷ்டவசமான விடயம் என முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021 ஜனவரி 12 ஆம் திகதி நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Posted in Uncategorized

காணிப்பதிவுகளை நிறுத்துங்கள் – வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத் தலைவர்

வலிகாமம் வடக்கில், காணி பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் தெரிவித்தார்.

தற்பொழுது இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 31 வருடங்களாக வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்றார்.

அரசாங்கத்தால் இராணுவம் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்காக, அக்காணிகளின் காணிகளின் உரிமையாளர்கள், தம்மை பதிவு செய்யுமாறு பல தடவைகள் கோரப்பட்டு, பொதுமக்களும் அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் இன்றுவரை தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார்.

ஏற்கெனவே இராணுவத்திடமிருந்து தமது காணியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது வரை அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தாலும், இராணுவத்திடம் காணிகள் உள்ளோர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இனியும் விவரங்களை சேகரித்து கொண்டிருக்காது, அந்த விவரம் சேகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்தப் பதிவு நடைமுறையை சற்று பிற்போடுமாறும், அரசாங்கத்தை கோரினார்.

ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணி விவரங்கள்இராணுவ தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீண்டும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கூறுவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

அரசாங்கம்  மக்களுக்குரிய காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் எனவும் எனவே, பொதுமக்களின் நலன் சார்ந்து பொதுமக்களின் காணிகளை கையளிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அத்துடன், ‘ஒவ்வொரு வருடமும் ஐ.நா சபையில் அமர்வு ஆரம்பமாகும் போது, ஆட்சியில் உள்ள அரசாங்கமானது, காணி விடுவிப்பு தொடர்பில் சில முன்னெடுப்புகளை முன்னெடுக்கும். ஆனால் ஐக்கிய நாட்டு சபையின் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், அது புஷ்வானமாக போய்விடும். எனவே இம்முறை இந்த அரசாங்கமானது வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும்’ எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார்.

யாழ். பிள்ளையார் குள சுற்று வேலியின் பௌத்த கொடியின் வர்ணங்களால் சர்ச்சை

யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற பிள்ளையார் குளத்தின் சுற்று கம்பங்களுக்கே, இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

1996ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த இந்தக் குளத்தின் பரப்பளவு 2013ஆம் ஆண்டு மீள அளக்கப்பட்ட போது, 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளமை தெரியவந்தது.

இவ்வாறான நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில், அவர் பார்வையிட்டு சென்ற  நிலையில், இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியும்  ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோரியும் இத்தாலி வாழ் இலங்கையர்களினால் நேற்று போலொக்னா நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை அங்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ளன.

எனினும் அவ்வறிக்கையின் பிரகாரம் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிரதமரின் இத்தாலி விஜயத்தையடுத்து, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி, இத்தாலி வாழ் இலங்கையர்கள்  ஞாயிற்றுக்கிழமை போலொக்னா நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதில் கலந்துகொண்ட கத்தோலிக்கப் பாதிரியொருவர் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் கத்தோலிக்கர்கள் மாத்திரமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பலரும் உயிரிழந்தார்கள்.

அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சுமார் இரண்டரை வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதற்கு நீதிவழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியே நாங்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கின்றோம்.

நாம் வேறெந்தவொரு அரசியல் நோக்கங்களையும் முன்னிறுத்தி செயற்படவில்லை. மாறாக உயிரிழந்தவர்களுக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது ஒரேயொரு கோரிக்கையாகும்.

இந்தச் சம்பவத்திற்கான பதிலைப் பெறாமல் நாடு என்றவகையில் முன்நோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், அது அனைத்துச் சமூகங்களுக்கும் பாதுகாப்பற்றதொரு நாடாகவே அமையும். எனவே இவ்விடயத்தில் உரிய தரப்பினர் தலையிட்டு, நீதிநிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

இறக்குமதின் கட்டுப்பாடுகளை அரசும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் – ஆளும் தரப்பு பா.உ.

இலங்கைக்கு இறக்குமதியாகும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட நூறுவீத உத்தரவாத தொகை குறித்து அரசாங்கமும் மத்திய வங்கியும் பரிசீலிக்க வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இடம்பெற்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தற்போதைய நிலையில் இந்த நடவடிக்கை பாதகமாக அமையலாம் என்றும் கூறினார்.

எனவே கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும் குறித்த பட்டியலில் உள்ள சில பொருட்களை விலக்கி மக்கள் மீதுள்ள சுமையை குறைக்க மத்திய வங்கியின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீதா குமாரசிங்க கேட்டுக்கொண்டார்.

கடந்த 09ஆம் திகதிஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களுக்கு 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு இவ்வாறு 100 சதவீத உத்தரவாத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கம் இழக்கச்செய்வதன் மூலம் செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – செல்வம் எம்.பி.

தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் 32 ஆம் நாளைக் கடந்து செல்கின்றநிலையில், ‘திருச்சி சிறப்பு முகாமில் நடைபெறும் இலங்கை தமிழர்களின் போராட்டம் அவர்கள் அனைவரும் உயிர் விடும் நிலைக்கு சென்றுள்ளது’ என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (திங்கட்கிழமை) ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அவர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், அவர்கள் அனைவரும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும், நீதிமன்றத்தில் எந்தவித வழக்குகளும் இல்லாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

வழக்கு உள்ளவர்களின் வழக்குகள் அனைத்திற்கும் அவர்கள் தீர்ப்பை பெறும் காலம் உடனடியாக துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு இலங்கையில் இருந்து எல்லை தெரியாமல் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றவர்கள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை மனதில் கொண்டு செயற்பட்டு, அவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்க அரசு முன்வர வேண்டும்.

அதேவேளை சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை யாரும் செய்யக்கூடாது. இனிவரும் காலங்களில் இந்திய சட்டங்களுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

மேலும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.