காணி, பொலிஸ் அதிகாரங்கள் நிர்வகிக்கப்படும் வகையில் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தலாம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண ஆணைக்குழுக்கள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதன் போது அரசியலமைப்பு திருத்தங்களுக்காக சுதந்திர கட்சி பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்திருந்தது. இதன் போது 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் தயார் என்பதை தெரிவித்திருந்தோம்.

காணி ஆணைக்குழு , மாகாண காணி ஆணைக்குழுவாக செயற்படுமானால் எவ்வித சிக்கலும் இல்லை என்பதை நாம் அந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தோம். தற்போதும் மாகாண காணி ஆணைக்குழு காணப்படுகிறது. இதில் இறுதி தீர்மானத்தை எடுப்பது ஜனாதிபதியாவார்.

அதன் அடிப்படையிலேயே மாகாண காணி ஆணைக்குழுவும் , தேசிய காணி ஆணைக்குழுவும் செயற்பட வேண்டும். இதில் எவ்வித தலையீடுகளும் இன்றி இவ் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுமாக இருந்தால் எவ்வித சிக்கலும் இல்லை.

அதே போன்று மாகாண பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவது சிறந்ததாகும். ஆனால் முதலமைச்சருக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாற்றுதல் மற்றும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான உரிமை வழங்கப்படக் கூடாது என்பதையும் நாம் வலியுறுத்தியிருந்தோம்.

தற்போதுள்ள சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவைப் போன்று , அரசியலமைப்பு பேரவை ஊடாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை நிறுவ முடியும். இதனை நிறுவுவதால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படப் போவதில்லை. அரசியல் ரீதியில் பொலிஸ் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்படக் கூடாது.

எனவே யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் , அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காரணம் சிங்கள மக்கள் மத்தியில் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அச்சம் காணப்படுகிறது. எனவே தான் மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு நாம் தயாராக உள்ளோம். இவற்றின் அடிப்படையில் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை. பேச்சுவார்த்தைகள் ஊடாக இது தொடர்பில் எம்மால் இணக்கப்பாடொன்றை எட்ட முடியும் என்றார்.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும் செயற்பாடுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள்.

நாட்டு மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்கலாம்.புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாகாண சபை தேர்தல் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாக்கவில்லை.மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக மாகாண சபை தேர்தலை பிற்போட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் கூட்டமைப்பினர் உண்மை நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்; அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வலுவற்றதாகி விடும் என குறிப்பிடும் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.தமிழ் மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கபோவதில்லை. ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் போது அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

மாகாண சபை முறைமையை எதிர்க்க போவதில்லை – ஜே.வி.பி

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முரண்பாடற்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்தால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்வோம்.தேசிய பிரச்சினை விவகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பொழுதுபோக்காக பார்க்கிறாரே தவிர அவரிடம் உண்மை நோக்கம் கிடையாது.

அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் சர்வக்கட்சி கூட்டத்தில் பங்காளியாக போவதில்லை.மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம்,உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வழங்கிய நேர்காணல் வருமாறு,

கேள்வி ; நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது சாதகமாக அமையுமா?

பதில் ; உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெற வேண்டும்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் மக்களின் ஆதரவு அத்தியாவசிமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கிடையாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புடன் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். ஆகவே தேர்தலை நிச்சயம் நடத்த வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறு அரசாங்கத்திற்கு எதிரானதாக அமையும். தமக்கு மக்களாணை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு சென்று மக்கள் விரும்பும் அரசாங்கத்தை தோற்றுவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

கேள்வி ; உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளீர்கள்.

பதில் ; நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம். பாரம்பரியமான அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்ததன் பிரதிபலனை நாட்டு மக்கள் தற்போது அனுபவ ரீதியில் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் நாட்டு மக்கள் முதலில் மாற்றமடைய வேண்டும்.

ராஜபக்ஷர்களின் பலவீனமான அரசாங்கத்தை போராட்டத்தின் ஊடாக மக்கள் வீழ்த்தினார்கள்.போராட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.ராஜபக்ஷர்களின் பாதுகாவலரான ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.ஆகவே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கேள்வி ; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி கூட்டத்தை ஏன் புறக்கணித்தீர்கள்.

பதில் ; தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விடயத்தில் அரசாங்கத்திற்குள் பரஸ்பர வேறுப்பாடு காணப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாறுப்பட்ட நிலைப்பாட்டில் உள்ளார்கள்.ஆகவே அரசியல் தீர்வு விவகாரத்தில் முதலில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் அரசாங்கம் ஒன்றிணைந்து ஒரு இணக்கப்பாட்டை முன்வைத்தால் தேசிய பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்வோம்.அதனை விடுத்து ஜனாதிபதியின் ஊடக காட்சிப்படுத்தலில் கலந்துக் கொள்வது பயனற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் 84 கூட்டங்கள் இடம்பெற்றன. குறைந்தபட்சம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஒரு வரைபை கூட அவர் சமர்ப்பிக்கவில்லை. இடைவிலகல் மற்றும் தாமதப்படுத்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரமாகும்.

கேள்வி ; தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் தீர்வு காண முடியாதா ?

பதில் ; தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினால் மாத்திரம் தீர்வு காண முடியாது.அரசியலமைப்பில் மொழி உரிமையை உறுதிப்படுத்தி விட்டு நடைமுறையில் மொழி உரிமைகளுக்கு முரணாக செயற்படும் போது அரசியலமைப்பில் காப்பீடுகள் வழங்குவது கேள்விக்குள்ளாக்கப்படும்.

கேள்வி ; மாகாண சபை முறைமைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றீர்களா?

பதில் ; மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும்,தமிழ் தலைமைகளின் இணக்கப்பாடான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை தற்போது உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்க்க போவதில்லை.

கேள்வி ; சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதார மீட்சிக்கு நாணய நிதியத்தை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாதா?

பதில் ; பொருளாதார மீட்சிக்கு நாணய நிதியத்தை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் இல்லை என்ற ஜனாதிபதியின் மந்திரத்திற்கு நாங்கள் இணங்க போவதில்லை.2.9 பில்லியன் டொலர்களை கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.தேசிய மட்டத்தில் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஆதரவு அவசியம்,தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்கள் ஆதரவு வழங்குவார்கள்.

விக்டோரியா நூலாண்ட் இன்று சிறுபான்மையின பிரதிநிதிகளை சந்திக்கிறார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட், இன்று (பெப். 01) சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் ஆபிரகாம் சுமந்திரன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ரிசாட் பதியுதீன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொள்வார்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கப்பட வேண்டும் என சம்பந்தன் விரும்பினார் – ஸ்ரீகாந்தா

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் நசுக்கபட வேண்டும் என்பதனை சம்பந்தன் முழு மனதாக விரும்பினார் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் சாவச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னதாக சம்பந்தனுக்கு பதிலாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிலே, சுயமரியாதையும், துடிப்புமுடைய தமிழன் போர்க்களத்தில் குழந்தைகள், பெண்கள் தொடக்கம் முதியவர்கள் வரை விமான குண்டு வீச்சிற்கும் , ஷெல் அடிகளிற்கும் பலியாகி கொண்டிருந்த பொழுது தலைவராக இருந்திருந்தார்.

நான் திட்டவட்டமாக கூறுகின்றேன் யுத்தம் கட்டாயம் நிறுத்தபட்டிருக்கும்.எமது 22 எம்பிக்களும் அப்போது பல்வேறு நாடுகளில் செயலாற்றி வரும் நிலையில் ராமதாஸ் எங்களை டெல்லிக்கு அழைத்து இந்திய பாராளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைத்தார்.

இந்திய நாடாளுமன்றிலுள்ள கட்சித் தலைவர்களிடம் இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பாராளுமன்றிலுள்ள அத்தனை கட்சி தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோளாக தனித்தனியாக சந்திக்கும் ஆவலோடு ஒரு கடிதத்தைபாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் இராமதாஸ் எமக்கு அனுப்பி அந்த கடிதத்தை கையொப்பமிட்டு அதனை மீண்டும் தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதனை கையொப்பமிட்டு மீண்டும் அனுப்புமாறும் அதனை தான் ஆவணபடுத்துமாறும் கூறிய போதும் குறித்த கடிதம் கிடைத்தது என்றுகூட பாட்டாளி மக்கள் தலைவருக்கு சம்பந்தன் அறிவிக்கவில்லை.

ஏனெனில் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட்ட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார். அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எமது கடமை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும் – கதிர்

ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் புதுடில்லியில் இடம்பெற்ற தமிழர்களுக்கான சமூக நல அறக்கட்டளையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு அடிப்படைத் தீர்வுமின்றி நிரந்தரத் தீர்வுமின்றி அவல நிலைக்குள் வாழந்து கொண்டிருக்கும் எமது ஈழத்தமிழினம் 70 ஆண்டு காலமாக தங்களது உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை ரிதியாகவும் போராடுகின்ற இனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றது.

எமது மக்களுடைய உரிமை சார்ந்த போராட்டங்கள் ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போது எமது மக்கள் தாயகத்தில் பலம் மிக்க ஒரு சக்தியக இருந்தாhகள். இலங்கைத் தீவைப் பொருத்தவரையில் 65 சதவீதம் கடற்பரப்பையும் கடல் சார்ந்த நிலத்தையும் கொண்ட எமது தாயகம் எமது கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் போன்று இருந்தது.

அந்தக் காலத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியமான பகுதியாகிய எமது தாயகப் பகுதி தமிழர்கள் வசம் பாதுகாப்பு அரணாக இருந்தது. அது தமிழ் மக்களுக்கு மட்டுமலல்லாது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒரு இரும்புச் சுவராகவே இருந்தது.

ஆயுதப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் நாங்கள் எமது பலத்தை எமது தாயக மண்ணில் இழந்து நிற்கின்றோம். உண்மையாக இலங்கை அரசாங்கம் காலம் காலமாக இந்திய அரசாங்கத்தை மிக இலகுவாக ஏமாற்றி வருகின்றது. இதனை இந்தியா நன்கு உணர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விட்டால் இந்தியாவின் மாநிலங்கள் மேலும் பிரிக்கப்பட்டு விடும் என்ற ஒரு பொய்யான செய்தியை இலங்iகையின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பாடமாகப் புகட்டி வருகின்றார்கள். இந்த அடிப்படையிலே தான் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயத்தில் இந்தியா நீண்டகாலம் மௌனம் காத்தது.

தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் இந்தியாவிற்கு பாதமகமாக அமையாது என்ற விடயம் ஈழப் போராட்டம் திட்டமிட்டு நசுக்கப்பட்டதன் பின்னர் வெளிப்படையாகி இலங்;கையின் உண்மையான முகத்திரை கிழிக்கப்பட்டது. இன்று தமிழர்களின் வல்லாதிக்கப் பூமி வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் மிக மிகப் பாதகமான விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் பிரிக்கின்ற போது இலங்கை அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயமான நகர்வுகளை தெற்;காசியப் பரப்பிலே நிறைவேற்றக் கூடிய சாத்தியமான பக்கங்கள் உருவாக்கப்பட்டது. அதில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டது.

இந்திய அரசாங்கம் தோல்வி கண்டது. அந்தத் தோல்வியின் அடிப்படையில் தான் இன்று தமிழர்களின் தாயகப் பகுதியான வட கிழக்கில் எமக்கு வேண்டாத அந்நிய சக்தி நாடுகளை களமிறக்கி இந்தியாவின் பூகோள ரீதியான பாதுகாப்பிற்கு அச்சறுத்தலான விடயங்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.

வடக்கு கிழக்கு தாயகப் பகுதியில் அந்நிய சக்திகள் அங்கே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நிச்சயமாக இந்தியாவின் தமிழ்நாடு மட்டுமல்லாத ஏனைய மாநிலங்களுக்குள்ளும் இந்த நாடுகள் உடுருவிச் சென்று எதிர்வரும் காலங்களில் இந்திய அரசாங்கத்தின் மாநிலங்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் வெற்றியாக அமையும்.

எனவே ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அந்த அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தில் இருந்து என்று வெளியேற்றப்படுகின்றதோ அதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்.

இன்று சந்தர்ப்;பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் எமது இனம் சிக்குண்டு தவிக்கின்றது. 2009ம் ஆண்டு எமது ஆயதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எங்களது தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக நாங்கள் உருவெடுத்திருக்கின்றோம்.

இறுதிக் கட்டத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் இனி அரசியற் போராட்டமாக மாற்றப்படும் விடயத்தைத் தலைவர் கூறியிருந்தார். அந்த சிந்தனைக்கு அமைவாக ஜனநாயகப் போராளிகள் ஆகிய நாம் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஈழத்தமிழர்களும் இந்திய தேசமும் எதிர்காலத்தில் நட்புறவுச் சமூகமாக இணைந்து தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கருதி நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி செயற்படுவதாக FIDH குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி செயற்படுவதாக மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனம் (International Federation for Human Rights) குற்றம் சுமத்தியுள்ளது.

போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் நாட்டில் தந்திரோபாய ரீதியாக அடக்குமுறை கையாளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனத்தில் 116 நாடுகளை சேர்ந்த 188 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் போராட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானது என மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆதிலுர் ரஹ்மான் கானின்  (Adilur Rahman Khan)கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போராட்டக்காரர்களின் உரிமைகளை தற்போதைய அரசாங்கம் எந்தளவிற்கு பாதுகாக்கிறது என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி ,  நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 08 பேர் தாக்கப்பட்டமை குறித்தும் அந்த அறிக்கையில் கடுமையாக சாடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான முதல் நான்கு ஊடகவியலாளர்கள் நியூஸ்ஃபெஸ்ட் இலச்சினை பொறிக்கப்பட்ட T-Shirts
அணிந்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக அடையாள அட்டையுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள்  தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நான்கு ஊடகவியலாளர்களை காப்பாற்றுவதற்காக சென்ற மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் பாரதூரமான நிலைமை என சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக துப்பாக்கி குண்டுகள்,  கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை பிரயோகத்தினை பயன்படுத்துவது, பொதுமக்களின் ஒன்றுகூடலை அநாவசியமாக கட்டுப்படுத்துவது, அவசரகால சட்டத்தை பயன்படுத்தி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது , சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவை பாரதூரமான விடயம் எனவும் சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பிலான இடைக்கால மீளாய்வு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை வௌயிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்கும் – அமெரிக்கா உறுதி

அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் தொடர்பில் கருத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஒரு நாடாக செயற்படுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சர்வதேச கடன் வழங்குவோரின் நம்பிக்கையான தீர்மானங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,

இலங்கை மிக விரைவில் ஸ்திரமான பொருளாதாரத்தை அடையும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் குறிப்பிட்டிருந்ததாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் ஊடாக அதன்கீழ் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த நிலையில், நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி நீண்டகாலமாக சிறுபான்மையின மக்களையும் விமர்சனங்களை முன்வைப்பவர்களையும் அமைதிப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப் பட்டுவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச்சபை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் மூலம் இந்த மனித உரிமை மீறலை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நியூரம்பெர்க் போன்ற புதிய நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரவும் அழைப்பு விடுப்பதாக உலகத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு உயர்மட்ட அதிகாரிகள் மீது கனடா இந்த மாத தொடக்கத்தில் தடைகளை அறிவித்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கையை கனடா நிறுத்த வேண்டும் என சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியிடம் தமது தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்ததாக வேலாயுதபிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையின் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா முன்னர் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களை தடை பட்டியலிட்ட ஒரே நாடு கனடா என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.