உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாதுகாக்கும் என நம்புகிறோம்.

ஜனவரி மாதம் 4ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமாயின் பெப்ரவரி 25 முதல் மார்ச் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலத்தில் புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிடுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 8 ஆம் திகதி குறிப்பிட்டது,ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. ஆனால் ஜனவரி மாதம் 04ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்கள்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியது,

இந்த வாக்குறுதியை ஆணைக்குழு பாதுகாக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை  எதிர்வரும் மாதம் (ஜனவரி) 09 ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு 5 முதல் 7 வார காலத்திற்குள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என்றார்.

வரி அதிகரிப்பால் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் புலம்பெயர்வு

ஜனவரியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் காரணமாக  இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் செலவுகளை குறைப்பதற்கும் அல்லது வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வதற்கும் சிந்திக்கின்றனர் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

கடும் வருமானவரிகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள்  செலவுகளையும் முதலீடுகளையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

இலங்கை அரசாங்கம் வங்குரோத்து நிலையை அறிவித்து பத்துமாதங்களிற்கு பின்னர்  புதிய வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

எனினும் புதிய வரிகள் வருமானம் உழைப்பவர்களின் நுகர்வுதிறன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன, குறிப்பாக ஏற்கனவே கடன்பட்டவர்கள் வீடுகளிற்காக வங்கிகளில் கடன் பட்டவர்கள்  நுண்கடன்களை பெற்றவர்கள் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.

மாதாந்தம் 150,00 ரூபாயை உழைக்கும் இலங்கையர் ஒருவர்  தனது தனது வருமானத்தில் 2.3 வீதத்தினை செலுத்தவேண்டும் ஆனால் ஒரு மில்லியன் உழைப்பவர் 28.7 வீதத்தினை செலுத்தவேண்டும்.

எப்படி செலவுகளை குறைப்பது என தெரியவில்லை என்கின்றார் வங்கி துறையை சேர்ந்த 52 வயது நபர்.

இவர் ஏற்கனவே தனது வாகனங்களிற்கான லீசிங் மற்றும் வீட்டு கடன் போன்றவற்றை செலுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

நான் இரு கடன்களையும் பெற்றவேளை வட்டிவீதம் குறைவாக காணப்பட்டது என்னால் மாதம் ஒரு இலட்சம்  ரூபாயை சேமிக்க முடிந்தது என தெரிவித்த அவர் தற்போது பணவீக்கம் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால் எதனையும் சேமிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நான் மலிவான பொருட்களிற்கு மாறிவிட்டேன் என மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் தெரிவித்தார்.

இவரை போன்ற பல தனியார் துறை ஊழியர்கள் ( ஏற்கனவே வருமான வரி செலுத்துபவர்கள் ) புதிய வரி குறித்து ஏமாற்றம் வெளியிட்டனர்.

தனியார் துறையை சேர்ந்த பலர் தாங்கள் வரிகளை செலுத்த தயார் என குறிப்பிட்ட அதேவேளை வெளிப்படைத்தன்மையின்மை அரசாங்கத்தின் பண விரயம்  பொறுப்பற்ற அரசியல் தீர்மானங்கள் போன்றவை இந்த வரிகள் அவசியமற்றவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தனர்.

ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ள  அரசசேவை குறித்தும் தனியார் துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட வினைத்திறன் அற்ற அரசசேவையை தொடர்ந்தும் காப்பாற்றுவதற்கு அரசசேவையை சேர்ந்தவர்கள் தங்கள் சக்தியை வீணடிக்கின்றனர் இது எப்படி நியாயமான விடயமாகும் என வாகனங்கள் திருத்தும் நிலையத்தை சேர்ந்த சுனில் என்பவர் கேள்வி எழுப்பினார்.

எனது ஊழியர்கள் மோசமான காலநிலைக்கு மத்தியிலும்மேலதிக நேரம் வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலைபார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களிற்கு வருமானம் வழங்குவதற்காக தனியார் துறையை சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் எப்படி வரி சுமையை செலுத்த முடியும் எனகேள்வி எழுப்பினார்.

புதிய வரிகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் புதிய வரிகள் குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிடவுள்ளது.

2023 ஜனவரியின் கடைசி வாரத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரியின் இறுதி வாரத்தை கறுப்பு ஆர்ப்பாட்ட வாரம் என அறிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க அரசாங்கம் அறிவித்துள்ள தன்னிச்சையான வரிமாற்றங்கள் தங்களின் தொழில்துறையை சேர்ந்தவர்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட மகஜரை ஜனவரி 10 ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை தொழில் முயற்சியாளார்களுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

“சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau தெரிவித்தார்.

உணவுத் துறையில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) மூலதனத்திற்கான அணுகலை வழங்குவதற்கு உதவிசெய்யும் ஒரு புத்தாக்க விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதியினை உருவாக்குவதற்காக Keells Supermarkets மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) ஆகியவற்றுடன் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பானது (USAID) ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது.

இந்த வசதியானது மூலதனத்திற்கான அணுகலை அதிகரிப்பதன் ஊடாக கொவிட்-19 பெருந்தொற்றின்போது உருவாகி நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமடைந்த விநியோகச் சங்கிலித் தடங்கல்களை குறைக்கிறது.

“விநியோகச் சங்கிலிகளுக்கான நிதியளிப்பு முயற்சியில் USAID மற்றும் HNB ஆகியவற்றுடன் ஒன்றிணைவதானது, தற்போதைய நெருக்கடியின் போது MSMEs மூலதனத்தை அணுகுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

எமது பங்குதாரர்களுக்கு ஒரு பொதுவான மதிப்பீட்டினை உருவாக்குதல், உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவி செய்தல், மற்றும் உற்பத்திப் பொருட்கள் எமது வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய எங்களது இலக்குகளுக்கு இந்த வசதி உதவியாய் அமைகிறது.” என Keells Supermarkets இனது தாய் நிறுவனமான John Keells Holdings இனது தலைவர் சரித்த சுபசிங்க தெரிவித்தார்.

இந்த வசதியானது போட்டித்தன்மைவாய்ந்த நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட நிதியுதவியை MSME களுக்கு வழங்குகிறது.

இந்த வசதியானது அது செயற்பட்ட முதல் வாரங்களில் எட்டு விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் 430,000 அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கியது.

ஆறு மாதங்களில் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனைப் பெற்றுக் கொள்வதற்கு கிட்டத்தட்ட 100 MSMEகளுக்கு உதவிசெய்வதற்கு பங்காண்மை திட்டமிட்டுள்ளது.

“உணவுத் துறையில் MSME களுக்கு இது போன்ற ஒரு புத்தாக்க நிதியியல் தீர்வை வழங்குவதற்காக Keells உடன் ஒன்றிணைவதானது HNBஇற்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகும்.

வியாபாரங்கள் தொடர்ந்து சீராக இயங்குவதற்காக MSMEs மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல், சம்பளங்களை வழங்குதல் மற்றும் ஏனைய குறுகிய கால செலவுகளை மேற்கொள்தல் போன்ற அவர்களின் செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது உதவி செய்யும். MSMEகள் தமது வணிக நோக்கங்களை அடைவதற்கு இது மேலும் வலுவூட்டும் என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியில் HNB உடன் ஒன்றிணைந்ததற்காக USAID மற்றும் Keells ஆகிய இரண்டிற்கும் நாம் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என SME மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவிற்கான HNB இன் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன தெரிவித்தார்.

“சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau கூறினார்.

தமிழ் கட்சி தலைவர்கள் சம்மந்தனின் இறுதி கட்டத்தில் அவருடன் முரண்பட விரும்பவில்லை – ஜனா எம்.பி

தமிழ் தேசிய தரப்புக்கள் நிரந்தமாக ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கத்துடன் போச்சுவார்த்தையில் ஈடுபடுவது கட்டாயமாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்காக நிரந்த அரசியல் தீர்வு தொடர்பில், இன்று தமிழ் மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தி, தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டு நாடாளுமன்றில் இருக்கும் பிரதிநிதிகளுடன் தான் ரணில் அரசாங்கம் பேச முற்படுகின்றது என்றார்.

அத்துடன், இந்த பேச்சுவாரத்தைகளில் தமிழ் கட்சி தலைவர்கள், சம்மந்தனுடன் முரண்பட விரும்பாமல் உள்ளனர். சம்மந்தன் உடன் இறுதி கட்டத்தில் முகத்தை முறிக்கவோ அவருடன் பிரச்சினையில் ஈடுபடவோ விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் இம்முறை பெரியளவில் சுதந்திரதினம் கொண்டாட ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஆரம்பகட்ட கலந்துரையாடலின் பின்பு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் இடம்பெறுவதை அடுத்து, பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தில், அதன் முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர தின விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கலாசார மத்திய நிலையத்தின் ஓர் இணைப்பு முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் ஆளுநர், இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிகள், யாழ். மாநகர சபையின் அதிகாரிகள், மத்திய கலாசார அமைச்சுடன் இணைந்து கலாசார மத்திய நிலையத்தில் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அத்தோடு சுதந்திர தின நிகழ்வு மாகாண மட்டத்தோடு இணைந்த ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்படுகின்றன. இதில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதால் பெரியளவில் நிகழ்வுகள் நடந்தேறும் என தெரிவித்தார்.

வியட்நாமிலிருந்தது நாடு திரும்பிய 151 பேரிடம் சிஐடி விசாரணை

வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சிஐடியினர் பின்னர் அவர்களை விடுதலை செய்வார்கள் என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8 ஆம் திகதி மியான்மாரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கனடாவுக்கு படகில் சென்றபோது படகு கடலில் மூழ்கும் நிலையில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர் .இவர்களில் 151 பேர் மீண்டும் இலங்கை திரும்ப விரும்பம் தெரிவித்தனர்

இதனையடுத்து சர்வதேச புலம்பெயர்அமைப்பின்  அனுசரணையுடன் இன்று (28) புதன்கிழமை மியான்மாரின்  விசேட விமான மூலம் 142 ஆண்கள் 9 பெண்கள் உட்பட 151 பேர் கட்டுநாயக்க   விமான நிலையத்தினை இன்று அதிகாலை 3 மணியளவில் வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வவுனியா கொழும்பு யாழ்ப்பாணம் உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த

சட்டவிரோத ஆள்கடத்தல் முகவர்கள் ஊடாக 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் டொலர்களை  வழங்கி இங்கிருந்து விமான மூலம் மியான்மாருக்கு சட்டபூர்வமாக சென்றடைந்துள்ளதாவும்.

பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக பயணித்துள்ளதாக சிஜடி யினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணையின் பின்னர் அவர்கள் வீடுகளிற்கு செல்ல  அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்

அநுராதபுரம் முதல் வவுனியா வரையான புகையிரத சேவைகள் ஜனவரி 5 முதல் ஐந்து மாதங்கள் இடை நிறுத்தம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கான புகையிரத சேவைகள் ஜனவரி 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணம் செல்வதற்காக குறித்த காலப்பகுதியில் விசேட பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  புதன்கிழமை (டிச.28)நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனவரியில் புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 400 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதாத்தின் பின்னர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மாதாந்த வருமானம் 1000 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 150 சதவீத உயர்வாகும். எவ்வாறிருப்பினும் இந்த வருமானத்தின் மூலம் எரிபொருளுக்கான செலவினை மாத்திரமே ஈடுசெய்யக்கூடியதாகவுள்ளது. சம்பளம் மற்றும்; மேலதிக கொடுப்பனவுகளை இதன் மூலம் ஈடுசெய்ய முடியாதுள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் மக்களுக்கான புகையிர சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் வடக்கு புகையிரகடவையை பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் கடந்த முறை புகையிரத கடவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம் 100 கிலோ மீற்றர் வேகத்தில் சுமூகமாக பயணிக்கக் கூடிய புகையிர சேவையை மக்களுக்கு வழங்கக் கூடியதாகவுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலைமையிலுள்ள அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை ஜனவரி 5ஆம் திகதியிலிருந்து புனர்நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றிலிருந்து அடுத்த 5 மாதங்களுக்கு இந்த புகையிரத பாதை மூடப்பட்டு புகையிரத சேவைகயும் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்துசபை மற்றும் மாகாண தனியார் பேரூந்து சங்கங்களுடன் இணைந்து விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கான புகையிரத சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படும்.

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை மீள்நிர்மாணிப்பதற்காக 33 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.

Posted in Uncategorized

ஜனவரி முதல் சாரதி தகுதி புள்ளி வழங்கும் முறை அமுல்படுத்தப்படும் – போக்குவரத்து ஆணையாளர் நாயகம்

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி தகுதி புள்ளி” வழங்கும் முறைமையை அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

வீதியில் செல்லும் சாரதிகள் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படும்.

அந்த புள்ளிகளுக்கு அமைய தண்டங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதி மீறல்களுக்காக 20 தகுதி புள்ளிகள் பெற்ற சாரதியின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதன் பின், மீண்டும் ஓட்டுனர் உரிமம் பெற, ஆரம்பம் முதலே அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலும், ஜனவரியில் அமைச்சரவை அனுமதியைப் பெற்று, ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார்.

மின் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், எதிர்வரும் மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பருவகால நிலக்கரி கப்பல்களை கொள்வனவு செய்ததில் எஞ்சியிருந்த கப்பல்களில் இருந்து இந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என்றும், கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், நாட்டு மக்கள் வாழ்க்கை முறைக்கு மாற்றியமைக்க வேண்டும் என்றும் மின்சார அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் பொறியாளர்கள் சொல்வது போல் அடுத்த வருடம் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமா என்று செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அந்த பொறியாளர்களின் விருப்பம் நிறைவேறும் என்றார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை மீட்பதற்காக அல்ல என தெரிவித்த அமைச்சர், 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான செலவை ஈடுசெய்வதற்காகவே இந்த மின்கட்டணத்தை உயர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மின் கட்டண திருத்தத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்குவதற்கு உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பில் வழங்கப்படக்கூடிய சலுகைகள் தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.