தமிழ் கட்சி தலைவர்கள் சம்மந்தனின் இறுதி கட்டத்தில் அவருடன் முரண்பட விரும்பவில்லை – ஜனா எம்.பி

தமிழ் தேசிய தரப்புக்கள் நிரந்தமாக ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கத்துடன் போச்சுவார்த்தையில் ஈடுபடுவது கட்டாயமாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்காக நிரந்த அரசியல் தீர்வு தொடர்பில், இன்று தமிழ் மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தி, தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டு நாடாளுமன்றில் இருக்கும் பிரதிநிதிகளுடன் தான் ரணில் அரசாங்கம் பேச முற்படுகின்றது என்றார்.

அத்துடன், இந்த பேச்சுவாரத்தைகளில் தமிழ் கட்சி தலைவர்கள், சம்மந்தனுடன் முரண்பட விரும்பாமல் உள்ளனர். சம்மந்தன் உடன் இறுதி கட்டத்தில் முகத்தை முறிக்கவோ அவருடன் பிரச்சினையில் ஈடுபடவோ விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் இம்முறை பெரியளவில் சுதந்திரதினம் கொண்டாட ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஆரம்பகட்ட கலந்துரையாடலின் பின்பு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் இடம்பெறுவதை அடுத்து, பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தில், அதன் முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர தின விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கலாசார மத்திய நிலையத்தின் ஓர் இணைப்பு முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் ஆளுநர், இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிகள், யாழ். மாநகர சபையின் அதிகாரிகள், மத்திய கலாசார அமைச்சுடன் இணைந்து கலாசார மத்திய நிலையத்தில் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அத்தோடு சுதந்திர தின நிகழ்வு மாகாண மட்டத்தோடு இணைந்த ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்படுகின்றன. இதில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதால் பெரியளவில் நிகழ்வுகள் நடந்தேறும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

வியட்நாமிலிருந்தது நாடு திரும்பிய 151 பேரிடம் சிஐடி விசாரணை

வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சிஐடியினர் பின்னர் அவர்களை விடுதலை செய்வார்கள் என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8 ஆம் திகதி மியான்மாரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கனடாவுக்கு படகில் சென்றபோது படகு கடலில் மூழ்கும் நிலையில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர் .இவர்களில் 151 பேர் மீண்டும் இலங்கை திரும்ப விரும்பம் தெரிவித்தனர்

இதனையடுத்து சர்வதேச புலம்பெயர்அமைப்பின்  அனுசரணையுடன் இன்று (28) புதன்கிழமை மியான்மாரின்  விசேட விமான மூலம் 142 ஆண்கள் 9 பெண்கள் உட்பட 151 பேர் கட்டுநாயக்க   விமான நிலையத்தினை இன்று அதிகாலை 3 மணியளவில் வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வவுனியா கொழும்பு யாழ்ப்பாணம் உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த

சட்டவிரோத ஆள்கடத்தல் முகவர்கள் ஊடாக 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் டொலர்களை  வழங்கி இங்கிருந்து விமான மூலம் மியான்மாருக்கு சட்டபூர்வமாக சென்றடைந்துள்ளதாவும்.

பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக பயணித்துள்ளதாக சிஜடி யினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணையின் பின்னர் அவர்கள் வீடுகளிற்கு செல்ல  அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்

அநுராதபுரம் முதல் வவுனியா வரையான புகையிரத சேவைகள் ஜனவரி 5 முதல் ஐந்து மாதங்கள் இடை நிறுத்தம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கான புகையிரத சேவைகள் ஜனவரி 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணம் செல்வதற்காக குறித்த காலப்பகுதியில் விசேட பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  புதன்கிழமை (டிச.28)நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனவரியில் புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 400 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதாத்தின் பின்னர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மாதாந்த வருமானம் 1000 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 150 சதவீத உயர்வாகும். எவ்வாறிருப்பினும் இந்த வருமானத்தின் மூலம் எரிபொருளுக்கான செலவினை மாத்திரமே ஈடுசெய்யக்கூடியதாகவுள்ளது. சம்பளம் மற்றும்; மேலதிக கொடுப்பனவுகளை இதன் மூலம் ஈடுசெய்ய முடியாதுள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் மக்களுக்கான புகையிர சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் வடக்கு புகையிரகடவையை பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் கடந்த முறை புகையிரத கடவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம் 100 கிலோ மீற்றர் வேகத்தில் சுமூகமாக பயணிக்கக் கூடிய புகையிர சேவையை மக்களுக்கு வழங்கக் கூடியதாகவுள்ளது.

பல நூறு ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலைமையிலுள்ள அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை ஜனவரி 5ஆம் திகதியிலிருந்து புனர்நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றிலிருந்து அடுத்த 5 மாதங்களுக்கு இந்த புகையிரத பாதை மூடப்பட்டு புகையிரத சேவைகயும் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்துசபை மற்றும் மாகாண தனியார் பேரூந்து சங்கங்களுடன் இணைந்து விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கான புகையிரத சேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படும்.

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை மீள்நிர்மாணிப்பதற்காக 33 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.

Posted in Uncategorized

ஜனவரி முதல் சாரதி தகுதி புள்ளி வழங்கும் முறை அமுல்படுத்தப்படும் – போக்குவரத்து ஆணையாளர் நாயகம்

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி தகுதி புள்ளி” வழங்கும் முறைமையை அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

வீதியில் செல்லும் சாரதிகள் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படும்.

அந்த புள்ளிகளுக்கு அமைய தண்டங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதி மீறல்களுக்காக 20 தகுதி புள்ளிகள் பெற்ற சாரதியின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதன் பின், மீண்டும் ஓட்டுனர் உரிமம் பெற, ஆரம்பம் முதலே அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலும், ஜனவரியில் அமைச்சரவை அனுமதியைப் பெற்று, ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார்.

மின் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், எதிர்வரும் மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பருவகால நிலக்கரி கப்பல்களை கொள்வனவு செய்ததில் எஞ்சியிருந்த கப்பல்களில் இருந்து இந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என்றும், கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், நாட்டு மக்கள் வாழ்க்கை முறைக்கு மாற்றியமைக்க வேண்டும் என்றும் மின்சார அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் பொறியாளர்கள் சொல்வது போல் அடுத்த வருடம் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமா என்று செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அந்த பொறியாளர்களின் விருப்பம் நிறைவேறும் என்றார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை மீட்பதற்காக அல்ல என தெரிவித்த அமைச்சர், 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான செலவை ஈடுசெய்வதற்காகவே இந்த மின்கட்டணத்தை உயர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மின் கட்டண திருத்தத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்குவதற்கு உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பில் வழங்கப்படக்கூடிய சலுகைகள் தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும்,

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம்.எம். நைமுதீன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும்,

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவும் விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிக்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் வரவேற்பு

தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு விடயத்தை இப்போதாவது உணர்ந்து நிறைவேற்றிக்கொள்ள முன்வந்துள்ளார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஒருங்கிணைவாக மாத்திரம் இல்லாமல் தொடர்ச்சியாக ஓரணியாகச் செயற்படவேண்டும். நிச்சயமாக இந்த நல்லமுயற்சியை முறியடிக்க – குழப்ப தீய சக்திகள் முயலும். அதையும் முறியடித்து இந்த ஒற்றுமை தொடரவேண்டும்.” – இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டு செயற்படும் சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் சந்திப்பு நடத்தியிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓரணியாக – கூட்டமைப்பாகப் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர். இது தொடர்பில் சிவில் மற்றும் மதத் தலைவர்களிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயராஜ்,

“தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் கடந்த 13ஆண்டுகளாக பிளவுபட்டு நிற்கின்றார்கள். உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. இதனை முழுமனதாக வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிளவின் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்கள் சிங்கள அல்லது அரச சார்பு கட்சிகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்த நிலைமை தோன்றாமலிருக்க ஒன்றிணைவு அவசியம்.

மக்கள் சலுகைகளுக்காக வாக்களிக்கும் கலாசாரமும் இந்த ஒன்றிணைவு ஊடாக முடிவுக்கு வரலாம். தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தமிழ் மக்களுக்கு எப்போது நன்மையே பயக்கும்” – என்றார்.

சிவகுரு ஆதின குருமுதல்வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரியக்கத்தின் தலைவருமான வேலன் சுவாமிகள்,

“தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் ஒவ்வொரு நிலைப்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கும். இது எல்லாவற்றையும் கடந்து எங்களுடைய 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுடைய உயிர்த் தியாகங்கள்,  அர்ப்பணிப்புகள் வீண்போகாத வகையில் தமிழ்த் தேசிய பரப்பு ஒன்றாக வேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.

இந்த ஆறு கட்சிகளுக்கு தோன்றியுள்ள எண்ணம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வரவேண்டும்” – என்றார்.

திருகோணமலைமறை மாவட்ட ஆயர் அருள்திரு நோயல் இம்மானுவேல்,

“தமிழ்க் கட்சிகள் எமது மக்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை முன்னிறுத்தி ஒரு சரித்திரப்பூர்வமான சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்கள் என்று அறிகின்றேன். இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

தேர்தல் என்று வரும் போது, கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் வரக் கூடிய விளைவுகளை அனைவரும் அறிவர். தொடர்ந்து அதே பிழைகளை நாம் விடாமல் ஒன்றுபட்டு மக்களின் நலனையும் இருப்பையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு ஒற்றுமையாகச் செயற்படுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. இது மக்களின் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

எனவே, தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமது பேதங்களைக் கடந்து மக்களின் நலனில்  அக்கறையுள்ளவர்களாக செயற்படவேண்டும் என்பதே எமது தனிப்பட்ட விருப்பாகவும் வேண்டுதலாகவும் உள்ளது.

இந்த முயற்சியை முறியடிக்க பல தீய சக்திகள் செயற்படலாம். அவற்றையும் வென்று ஒற்றுமையாகச் செயற்பட வாழ்த்துகின்றேன்” – என்றார்.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி,

“இன்றைய காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவது என்பது மிக முக்கியமானது. இப்போது அரசுடன் பேச்சு இடம்பெறுகின்றது. தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றாகச் செயற்படுவது ஆரோக்கியமல்ல. ஒரே குரலில் பேசும்போதுதான் அது பலமாக இருக்கும்.

தீர்வுக்கான சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தச் சூழலில் நீங்கள் ஒன்றுபட்டு நின்று செயற்படவேண்டும் என்பதுதான் மக்களினதும் எங்களினதும் மனப்பூர்வமான விருப்பம்” – என்றார்.

தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார்,

“இந்த ஒற்றுமையை மக்கள் எப்போதோ வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், கட்சிகள் இதனைப் பேச்சில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நடைமுறையில் செய்து காட்டவில்லை. ஆனால், இப்போது ஒன்றிணைவதற்காக பேசுகின்றார்கள். இது சிறப்பாக நடந்தால் எமது இனத்துக்கு எதிர்காலம் நன்மையாக அமையும். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” – என்றார்.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வே.பத்மதயாளன்,

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து பயணிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்வேறு வேளைகளிலும் நாங்கள் உடைவுபட்டு பிளவுபட்ட எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது.

கட்சி ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகவும், பெரும் போர் முடிவடைந்து அதன் பின்னர் பல்வேறு விதமான அழுத்தங்கள் தாக்கங்கள் நிலவு நிலவுகின்ற சூழ்நிலையில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் களைந்து அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய கருத்துகளை அறிந்து, ஒரு புதிய பேராயராக உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அடுத்த தீர்மானங்களும் தீர்வுகளும் எதிர்காலத்துக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என நான் வேண்டுகின்றேன்.

ஏனென்றால் கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மக்களை மையப்படுத்திய அரசியலை நான் வலியுறுத்துகின்றேன்.

மக்கள் பிரதிநிதிகளை மாத்திரம் அல்ல மக்களை மையப்படுத்திய ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு ஆரம்பமே. இனி வர இருக்கின்ற தேர்தல்கள் எல்லாம் மக்களுக்காகவும் எங்களுடைய விடுதலை உணர்வு சார்ந்ததாகவும் மக்கள் மையப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற போது உண்மையிலேயே அது பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

இந்தச் செயற்பாட்டை நான் உண்மையிலேயே ஆதரிக்கின்றேன். இந்தச் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளையும் நான் பாராட்டுகின்றேன். தொடர்ந்து மக்களுடைய வாழ்வியலுக்காக இவர்கள் பாடுபடுவதையிட்டு நான் வாழ்த்துகின்றேன்” – என்றார்.

Posted in Uncategorized

வட கிழக்கிலுள்ள சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது – எல்லே குணவங்ச தேரர்

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.

நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கோட்டை – நாகவிகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்படும் பிக்குகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஒருசில தரப்பினரது முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளையும் குறை கூற முடியாது.

புத்தசாசனத்தில் உரிய கோட்பாடுகள் உள்ளன. பௌத்த பிக்குகள் அந்த கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். பிக்குளை அடக்கும் வகையில் சட்டங்களை இயற்றுவதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, உதிரிபாகங்களை இணைத்த வாகனத்தை போல் இயங்கும் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட முடியாது.

எனது விகாரையின் மாத மின்கட்டணம் 48 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மின்கட்டணம் அதிகம் என்பதற்காக புத்த பெருமானின் சிலையை இருளிலா வைப்பது.

மின்சார அமைச்சரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன்,மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதற்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை விடுத்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்கிறது. தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக்  கொள்ளவேண்டும் என்றார்.

Posted in Uncategorized

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரம் வியட்நாம், சிங்கபூர், பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்