இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்படவேண்டும் – சுரேஷ்

இந்தியா வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தூக்கி கொண்டு சீனாவை தடுக்கும் முகமாக நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும்  செய்து அதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.  என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியலயத்தில் இன்று இடம்;பெற்ற அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 22 வது நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்;சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அந்த கொடிய யுத்தம் நடந்து கொண்ட காலத்திலே தமிழினத்துக்கு நடந்த பல விரோத செயல்களை பல ஊடகங்கள் உண்மையைக் கொண்டுவர பட்டவேளையிலே அந்த காலத்தில் இருந்த அரசின் அடக்கு முறையால் ஊடகம் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டிருந்தது

அப்போது தமிழ் மக்களுக்கு வடகிழக்கிலே நடந்த கொடூர இனப்படுகொலைகள் கொடூர சம்பவங்கள் அச்சுறுத்தல்கள், காணாமல் போகப் செய்யப்பட்ட விடயங்களை உடனுக்கு உடன் அறிவிப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் கொழும்பிலே சிங்கள கோட்டையிலே துணிச்சலுடன் தமிழ் மக்கள் ஒரு நீதிக்காக போராடுகின்றனர்.

தமிழ் மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உட்படுகின்றர்கள் அதனை எதிர்த்து தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள். என அந்த ஆயுத போராட்டதை உலகத்துக்கு சர்வதேச ஊடகங்கள் ஊடாக நியாயப்படுத்தி தெரியப்படுத்தி வந்தார். இவ்வாறு செயற்பட்டமையினல் அவர் சந்திரிக்கா அமையார் காலத்தில் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அன்று குமார் பொன்னம்பலம் நீங்கள் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் நாட்டுமக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார் என கணித்து அன்று கூறினார். அப்போது  இருந்த அரசியல் தலைவர்கள் அவரின் கருத்தை நிராகரித்தனர்.

தமிழ் மக்களுடைய இன விடுதலைப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சமமாக வாழவேண்டும் அதற்காகத்தான் போராடுவதாக அன்று குமார் பொன்னம்பலம் அவர் கூறினார் அவ்வாறு பல புத்திஜீவிகள் நியாயப்பாட்டை சொல்லும் போது படுகொலை செய்யப்பட்டனார்.

எனவே அந்த காலத்திலே ஒரு இனத்தை குறிவைத்து அவர்கள் போராடியதால் இன்று இந்த நாடு அதலபாதாளத்திற்கு போயுள்ளது இந்த விடையங்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக இலங்கை மீது கண்வைத்துள்ள நாடுகள் உங்களுடைய நாடுகளின்; நலன்கருதி கொண்டு இந்த இலங்கை தீவிலே நீங்கள் நினைத்தவாறு அரசியலை நடாத்துவதாக இருந்தால் இதற்கு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டோம.;

இங்கே சீனா கால் ஊன்றி இருக்கின்றது சீனாவை தடுக்கும் முகமாக இந்திய தங்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல கூட்டுக்களையும் பல அரசியல் தலைவர்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலனை பாதிக்கின்ற வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகல்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.

எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.

இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊண்ற எத்தனிக்கின்றது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக நாங்கள் யோசிக்கின்றோம் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை நீங்கள் எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிக்க எத்தனிக்கின்றீர்கள்

எனவே  அந்த விடையத்தை கையைவிட்டு நீங்கள் கடந்த 70 வருடகாலமாக  போரடிவருகின்ற எமது இந்த மக்களை அடிமைகளாக்க நினைப்பதை கைவிட்டுவிட்டு தமிழ் மக்கள் விரும்புகின்ற வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு சுயநிர்ணயத்துடன் அங்கீகரிகப்பட்ட இறையான்மையுள்ள ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக நீங்க அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும்

மாறாக ஓற்றை ஆட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவருகின்ற வடக்கிழக்கு தமிழ் மக்களை   அதனை முடக்கும் விதமாக நீங்கள் செயற்படுவதாயின்  மக்கள் புரட்சி வெடிக்கும். அதேவேளை எங்கள் அரசியல் அபிலாiஷகளுக்கு உங்களைத்தாண்டி உலகத்தில் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் உங்களுடைய நலுனுக்காக இலங்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்கு வைத்திருக்க போடப்ட்ட ஒப்பதந்தம் தமிழ் மக்கள் நலன்கருதி நீங்கள் போடவில்லை 34 வருடங்களுக்கு மேலாக அன்றே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தம். எனவே மீண்டும் நீங்கள் பழையதை தூக்கி கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல நீங்கள் எத்தனிக்க கூடாது  என்றார்.

Posted in Uncategorized

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் (புதன்கிழமை ) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவிக்கையில், ”குறித்த  12 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் (புதன்கிழமை ) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இவர்களில் சிறுவர் ஒருவரும் அடங்குகின்றார்.

இதன் போது குறித்த மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது குறித்த மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, குறித்த சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களில் சிறுவர் ஒருவர் உள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, குறித்த சிறுவன் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியதோடு குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும்  அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொது மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.

ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதில்லை என மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின் படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.

மேலும்,  சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைக்கு ஏற்படவுள்ள நிலை – பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

2022ஆம் ஆண்டில் இலங்கை திவாலாகும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய பத்திரிகையான தி கார்டியன் தெரிவித்துள்ளது.

அன்னிய கையிருப்பு வறண்டு கிடப்பதாலும், வரலாறு காணாத பணவீக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நான்கு இலங்கையர்களில் ஒருவர் கூடிய விரைவில் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தமது வருமானத்திற்கான அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பாரிய பொருளாதார சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழினத்திற்கு எதிராக வாங்கிய கடன் இலங்கையை சர்வதேசத்திடம் பிச்சையெடுக்க வைத்துள்ளது : சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

சிங்கள-பௌத்த மேலாதிக்க வாதத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றித் தக்க வைத்துக்கொள்ளுவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று மக்களின் ஆணையை மீறி சர்வதேசத்திடம் அடகு வைப்பதற்கும் பிச்சையெடுப்பதற்கும் இலங்கையைத் தள்ளியுள்ளது என்று இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆளுந்தரப்பு அமைச்சர்களே மக்களை அச்சுறுத்தும் வகையிலும் எச்சரிக்கும் வகையிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எத்திரணியிலிருக்கக்கூடியவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தலுக்குப் போகுமாறு வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சிக்கு கோவிட்-௧௯ நோய்த்தொற்று தான் காரணம் என்று ஒரே மந்திரத்தையே உச்சாடனம் செய்கிறது.

ஆனால் உண்மையான காரணம் அது மாத்திரம் தானா? இந்த நாட்டில் கடந்த முப்பது ஆண்டுக்கால அழிவு யுத்தத்திற்கு இவர்கள் செலவிட்ட ஆயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாவிக்கப்பட்டிருந்தால் இந்த நாடு சொர்க்க புரியாக மாறியிருக்கும்.

இதற்கு மாறாக இனவாதமும் மேலாதிக்க சிந்தனையும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கு அழிவு யுத்தத்தையே அரசாங்கம் தீர்வாகக் கொண்டிருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் கட்டவிழித்துவிட்ட யுத்தத்தால் அவர்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படவில்லை. பலபத்தாண்டுகளாக அவர்கள் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையின்கீழ் வாழ்ந்துவந்தார்கள்.

இதன் உச்சக்கட்டமாக இறுதி யுத்த காலப்பகுதியில் தாலிக்கொடியை விற்று பால்மா வாங்கியதும், பொது இடங்களில் கஞ்சித்தொட்டியை வைத்து மக்களுக்குக் கஞ்சி ஊற்றியதும், சிறிய சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டிய காயங்களை மருந்தின்றியும் உரிய மருத்துவமனைகளின்றியும் அங்கங்களை அறுத்தெறிந்ததும் நாங்கள் அனுபவித்த சொல்லொணா துன்பங்கள்.

இன்று அதே நிலை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வந்துவிடுமோ என்று நாம் கவலையடைகின்றோம். இலங்கையின் சமகால பொருளாதார வீழ்ச்சியென்பது வெறும் கோவிட் இனால் மட்டும் ஏற்பட்டது அல்ல. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உள்நாட்டில் ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திக்கொண்ட இனவாதங்களும் ஒடுக்குமுறைகளும் சமச்சீரற்ற பொருளாதார முன்னெடுப்புகளும் இதை வறிய நாடு என்ற பட்டியலுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தது. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரும் இன்று வரையில் பாதுகாப்பு செலவீனம் என்பது யுத்த காலத்திலும் பார்க்க அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது யுத்தத்திற்காக வாங்கிய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்காகவே பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்திற்காக வாங்கிய கடன்கள் அடைக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இலங்கை போன்ற சிறிய நாட்டில், ஏறத்தாழ மூன்று இலட்சம் இராணுவமும், இதனைவிடவும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் ஆளணியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆளும் தரப்போ எதிர்த்தரப்போ இத்தகைய செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று எப்பொழுதாவது பேசியிருக்கின்றார்களா?

உலகநாடுகள் அனைத்திலும் கடன் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. கடன் வாங்கி, வாங்கிய கடனை கட்டுவதும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகக் கடன் வாங்குவதுமாகத்தான் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதா வேண்டாமா என்ற பட்டிமன்றமும் நடைபெற்றுவருகின்றது.

இப்பொழுது பங்களாதேஷ், இந்தியா, சீனா தொடக்கம் உலக நாடுகள் முழுவதிலும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அலைகிறார்கள். புத்த பகவான் பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியே மக்களிடமிருந்து உணவைப் பெறவேண்டும் என்று போதித்துள்ளார். இன்று பௌத்த மேலாதிக்கத்தில் திளைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் ஒட்டு மொத்த மக்களையும் பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்துள்ளது.

இன்று எல்லா வகையிலும் தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக மாத்திரமல்லாமல், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய வழியுமின்றி தவிக்கும் வீழ்ச்சியடைந்த ஒரு அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கம் மாறியிருக்கிறது. கடந்த ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் ‘உங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நாட்டை பொருளாதார ரீதியில் வளப்படுத்துகிறோம்’ என்று சவால் விட்டிருந்தார்கள்.

இன்று அவர்களே மக்கள் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இவர்களால் நாட்டை சோமாலியாவைவிட மோசமான நிலைக்குத் தள்ளியதைத் தவிர வேறு எதைச் சாதிக்க முடிந்தது? இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்று கருதினால் பல்வேறுபட்ட மாற்றங்களைச் செய்வதற்கு இலங்கை அரசும், எதிரணியினரும் தயாராக இருக்க வேண்டும்.

முதலாவதாக இது சிங்கள பௌத்த நாடு என்ற மேலாதிக்க சிந்தனையை விடுத்து, அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டு;ம். இரண்டாவதாக இனங்களிடையேயும், மதங்களிடையேயும், உழைக்கும் வர்க்கத்தினரிடையேயும் மோதல்களை உருவாக்கி அவற்றினூடாக வாக்குகளைக் கபளீகரம் செய்யும் நிலைவரங்களைக் கைவிட வேண்டும்.

இந்த நாட்டில் இருக்கக்கூடிய தேசிய இனங்கள் தங்கள் அபிவிருத்திகளைத் தாமே செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருக்கக்கூடிய முப்படைகளின் அதிகரிப்பை நிறுத்துவதுடன் அவற்றை இயன்றவரை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இலங்கையின் வெளி விவகாரக் கொள்கைகளை நாட்டு நலனுக்கேற்பவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவகையிலும் உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, தரகுப் பணம் வருகிறதே என்பதற்காக நாட்டை வல்லரசுகளிடம் விற்றுவிடக்கூடாது. ஆகவே இலங்கையின் பொருளாதாரத்தைத் திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும், மேற்கண்ட விடயங்கள் அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்படாவிட்டால், உலக நாடுகளிடம் பிச்சை எடுப்பதென்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஆட்சி மாறவேண்டும், பொருளாதாரம் வளம்பெற வேண்டும் என்பதிலும் நாங்கள் ஒருமித்த கருத்துள்ளவர்களாகவே இருக்கின்றோம். வரப்போகின்றவர்கள் எவ்வாறு இதனை மாற்றியமைக்கப்போகின்றார்கள் என்பதுதான் கேள்வி. வெறுமனே ஆட்சி மாற்றம் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. இந்த நாட்டு மக்கள் பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.

அதற்கு இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் இன்று எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு, அடுத்துவரும் வாரங்களில் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படக்கூடிய சூழல், அதனால் ஏற்படக்கூடிய மின்சார வினியோகத் தடை, தற்போது சமையல் எரிவாயுவிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய்க்கும் வரப்போகும் தட்டுப்பாடு, போன்றவற்றால் அரச ஊழியர்களும் தனியார் துறை ஊழியர்களும் உரிய நேரத்திற்குப் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படப்போகின்றது. இந்த அபாயங்களைப் புரிந்துகொண்டு சகல அரசியல் கட்சிகளும் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால்அவர்களை விலத்தி வரைபை கையொப்பமிட்டு அனுப்புவோம்; வினோ எம்பி!

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா இன்னும் ஓரிருநாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பம் இட்டு இந்தியப்பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரை தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிருநாட்களில் தெரியவரும்.
ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்தி வைத்துவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்.

வார்த்தை பிரயோகங்களை சாட்டாகவைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப்பின்னால் நாங்கள் செல்வதா என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 வது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தை பிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் செயற்பட வேண்டும்.
அந்த வகையிலேயே இந்த முயற்சியினை எடுத்துள்ளோம் இது நிச்சயம் வெற்றிபெறும்.

இந்த விடயத்தில் எந்தவொரு ஆலோசனையும் இந்தியாவிடமிருந்து நாம் பெறவில்லை. இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை.

ஆனால் நாம் பாதிக்கப்பட்ட இனம் என்றவகையில் கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்ற ரீதியில், அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ற ரீதியில் அழுத்தங்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலைக்காக செய்கின்ற பெரிய கைங்கரியமாக இதனை பார்ப்பதாக தெரிவித்தார்.

Posted in Uncategorized

“உணவின் விலை ஏற்றத்தை தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி” ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

உணவின் விலை ஏற்றத்தைத் தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கைத் தீவின் ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரக் கட்டமைப்பு டொலர் இல்லாமை காரணமாக முற்றாக முடங்கி வருகின்ற அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே இறக்குமதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலங்கள் ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் காத்துக் கிடக்கின்றன.

அத்துடன் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, இறப்பர் , மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமையால் இந்த ஏற்றுமதிகளும் டொலர் இன்மையால் தடைப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஏற்றுமதி இறக்குமதி தடைப்படுவதால் வருமானம் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சென்று கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரச் சரிவும் பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கமும் மக்களை வாழ்வாதார ரீதியாக பாரிய அளவில் பாதித்துள்ளது இதனால் மரக்கறி வகைகள் உள்ளடங்கலாக அடிப்படை உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மக்கள் ஓரளவு விடுதலை பெற ஒரே வழி தற்சார்புப் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடும்பங்களும் கூட்டாகக் கையில் எடுக்க வேண்டும் நமது நாட்டிலே அதற்குப் போதியளவு சாதகமான சூழல் காணப்படுகிறது.

உதாரணமாக யுத்த காலத்தில் வன்னியில் போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டு கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காணப்பட்ட போது அந்த மக்கள் தற்சார்பு பொருளாதாரம் மூலமாக மரக்கறிகள், அரிசி, பால் முட்டை, பழங்கள், இறைச்சி வகைகள், மீன், மூலிகை மருந்துகள், கைத்தறி நெசவு, மட்பாண்ட கைத் தொழில், ஏனைய சுய தொழில்கள் எல்லாம் வன்னி மக்களின் சிறப்பான வாழ்க்கைத்தரத்தையும் சேமிப்பையும் உருவாக்கியது.

ஆகவே எல்லோரும் சிந்தித்து நீங்களும் வாழும் இடத்திலே சிறந்த தற்சார்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதீத விலை ஏற்றத்தை தடுப்பதுடன் நாட்டின் உள்ளக பொருளாதாரத்தையும் குடும்பப் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் அரசியல் ? யதீந்திரா

நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும் உனது வாழ்நாளாகும். நமது அரசியலுக்கும் இது பொருந்துமா? ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் – ஆண்டுகள் கழிகின்ற போது, நத ஆண்டுக்கான அடைவுகளை மக்கள் காணவேண்டும். ஆனால் ஈழத் தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரையில், அடைவுகள் எப்போதுமே எட்டாக் கனியாகவே இருக்கின்றது. வரலாம் – நடக்கலாம் – நடக்கூடும் – இப்படியான சொற்களோடு, பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கழிந்து செல்கின்ற போது, தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றங்களும் பதிவாகவில்லை ஆனால் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன – நடப்பதாக காண்பிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் சிந்தித்தால், கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், ஈழத் தமிழர் அரசியலின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும் ஆண்டுகளா?

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களுக்கான பிள்ளையார் சுழியிடப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்றது. 2012இல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணை, அமெரிக்க ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது அப்போது அமெரிக்க பிரேரணை என்றே பரவலாக அழைக்கப்பட்டது. அப்படி பார்த்தால் அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்து பத்துவருடங்களாகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், என்னுமடிப்படையில்தான், இந்த ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இப்போதும் தொடர்கின்றன. ஆனால் பத்துவருடங்களாகியும் இன்னும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை. சர்வதேச அழுத்தங்களின் மூலம் இலங்கை அரசை அடிபணியச் செய்யலாம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கும் போது, மறுபுறம், பொறுப்புக் கூறலை தொடர்ந்தும் வெற்றிகரமாக தட்டிக்கழிக்கலாம் என்னும் நம்பிக்கையுடன் சிங்கள ஆளும் வர்க்கம் செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் யுத்தத்தில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட சிங்கள ஆளும் வர்க்கமானது, யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களிலும், தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை தோற்கடிப்பதிலும் வெற்றிகண்டிருக்கின்றது. இந்த அனுபவங்களுக்கு சாட்சியாகவே, 2021ஆம் ஆண்டு, தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்துசெல்கின்றது. முன்னைய ஆண்டுகள் போல்!

2010இல், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதிலிருந்து, தமிழ் தேசிய தரப்புகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில், ஏராளமாகவே பேசப்பட்டிருக்கின்றது. ஒற்றுமைப்படுத்துவதற்கான ஏராளமான முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவும் வெற்றியளிக்கவில்லை. இந்த அனுபவங்களுக்கும் 2021 விதிவிலக்காக இருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதில் கூட, தமிழ்-தேசிய கட்சிகளால் ஒற்றுமையுடன் செயற்பட முடியவில்லை. 2021இல் இடம்பெற்ற, ஆக்கபூர்வமான விடயமென்றால் – ஒன்றைத்தான் குறிப்பிட முடியும். அதாவது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்புக்களைத்தான் குறிப்பிட முடியும். இந்தியாவை நோக்கி செல்லும் நோக்கிலேயே இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவை நோக்கிச் செல்லும் அணுகுமுறை முற்றிலும் சரியானது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் குறித்த சந்திப்புக்களின் மூலமான இணக்கப்பாடு, ஒரு ஆவணமாக வெளியில் வந்திருக்கவில்லை. நாடு கடும்போக்கு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில் – தமிழ் மக்களுக்கு ஓரளவாவது பாதுகாப்பாக இருக்கும் மாகாண சபை முறைமையும் கூட, இல்லாதொழிக்கப்படலாம் என்னும் ஆபத்தான சூழலில்தான், மேற்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசியலில் எதிர்வுகூறல்கள் எப்போதுமே சிக்கலானது ஏனெனில் உலக அரசியலில் மாற்றங்களை எதிர்வு கூறமுடியாது. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி கூறுவது போன்று, நாளைய காலநிலையை இன்று எதிர்வுகூற முடியாது. நிலைமைகள் எப்படியும் மாற்றமுறலாம் ஆனால் அந்த மாற்றங்களின் தன்மையை ஒரளவு அனுமானிக்கலாம். இந்த அனுமானங்களின் அடிப்படையில்தான் அரசியல் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே எந்தவொரு ஆய்வும் முடிந்த முடிவல்ல.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் 2022இல் இடம்பெறப் போகும் நிகழ்வுகளில் முக்கியமானதாக இருக்கப் போவது இரண்டு விடயங்கள்தான். ஒன்று, தமிழ் பேசும் கட்சிகள் என்னுமடிப்படையில் இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவுள்ள கூட்டுக் கோரிக்கை முக்கியமானதொரு விடயமாக இருக்கும். இது நடந்தால், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான சூழலில், புதுடில்லியை நோக்கி முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக இருக்கும். இந்தியா, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் வலியுறுத்திவருகின்ற நிலையில், மேற்படி கோரிக்கைக்கு, ஒரு முதன்மையான அரசியல் முக்கியத்துவமுண்டு.

அடுத்தது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா மீளவும் இணையவுள்ளது. 2024 வரையில் அமெரிக்கா இந்த பொறுப்பில் இருக்கப் போகின்றது. டொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, 2018இல், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது. இதனைத்தான் ஜனவரியில் அமெரிக்கா, இலங்கை தொடர்பில் சில விடயங்களை அறிவிக்கவுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். ஒபாமா தலைமையிலான, ஜனநாயக கட்சியின் நிர்வாகம்தான் 2012இல், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணையை நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில் மீளவும் ஜனநாயக கட்சியின் நிர்வாகம், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை விடயங்கள், மீது சில அழுத்தங்களை பிரயோகிக்க வாய்ப்புண்டு. இந்த இரண்டு விடயங்கள்தான், ஈழத் தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவுள்ள பிரதான விடயங்களாக இருக்கப் போகின்றன. இதற்கப்பால் பலரும் பல விடயங்கள் தொடர்பில் பேசலாம் ஆனால் அவைகள் எவையும் பிரதான விடயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இந்தியாவின் உறுதியான தலையீடுகள் இல்லாவிட்டால், இந்த விடயத்தில் முன்னேற்றங்களை காண முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட இரண்டு பிரதான விடயங்களின் அடிப்படையில்தான் 2022இற்கான தமிழர் அரசியல் நகரப் போகின்றது. ஆனால் இந்த விடயத்திலும் அளவுக்கதிகமான கற்பனைகள் கூடாது. இதனை விளங்கிக் கொள்வதற்கு, இந்துசமுத்திர பிராந்தியத்தில் இடம்பெறும் புவிசார் அரசியல் அதிகாரப் போட்டிகளை உற்றுநோக்க வேண்டும். புவிசார் அரசியலை கையாளுவதன் ஊhடாக, தமிழர்கள் வெற்றிகளை குவிக்க முடியுமென்று கூறுவதில் எப்போதுமே இந்தக் கட்டுரையாளர் உடன்படுவதில்லை. ஏனெனில் புவிசார் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பல்ல. ஒரு தரப்பாக இருப்பதற்கான பலமும் தமிழர்களிடம் இல்லை.

இலங்கையை மையப்படுத்தியிருக்கும் புவிசார் அரசியல் என்பது, அடிப்படையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுடன்தான் தொடர்புறுகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால், இலங்கைத் தீவின் மீதான வெறுப்பும் காதலும், சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் வெளிவிவகார முடிவுகளில்தான் தங்கியிருக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய-அமெரிக்க அதிகார சக்திகளுடன் ஒத்துப் போகும் போது, அது காதலாகவும், முரண்படும் போது – அது வெறுப்பாகவும் வெளிப்படுகின்றது. அன்று, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வெளிவிவகார அணுமுறையினால்தான், இந்திரா காந்தி-இந்தியா, சிங்கள ஆட்சியாளர்கள் மீது வெறுப்புற்றது. அந்த வெறுப்பின் விளைவாக வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம். எனவே, அதிகார சக்திகளின் காதலுக்கும் வெறுப்புக்கும் இடையில்தான் தமிழர்களின் அரசியல் சிக்கியிருக்கின்றது. இதனை விளங்கிக்கொள்ளாமல் புவிசார் அரசியல் தொடர்பில் சிந்தித்தால், அது ஒரு நல்ல பகல் கனவாகவே இருக்க முடியும்.

இலங்கைத் தீவின் இன்றைய அரசியலை ஒரு ஆட்சி மாற்ற தோல்விக்கு பின்னரான அரசியலாகவே நாம் நோக்க வேண்டும். 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இந்திய – அமெரிக்க பின்னணி இருந்ததாக பரவலாக நம்மப்பட்டது. தனது தோல்விக்கான காரணமாக, இந்திய உளவுத்துறையின் மீதே மகிந்த முதலில் குற்றம் சாட்டியிருந்தார். இதே 2015, இல்தான், நீண்டகாலமாக இராணுவ ஆட்சியின் பிடியிலிருந்த மியன்மாரிலும் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டது. அமெரிக்கா அதனை ஆதரித்திருந்தது. ஆனால் இந்த இரண்டு ஆட்சி மாற்றங்களுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச கொம்பனி மீளவும் ஆட்சியிலிருக்கின்றது. மியன்மாரில் மீளவும் இராணுவ ஆட்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆங்சான் சூகி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில், இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்குமா?

ஏனெனில் இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தால், கடும்போக்கு ராஜபக்ச தரப்பு, சீனாவை நோக்கி அதிகம் சாய்ந்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இலங்கையின் மீதான சீனாவின் பிடி மேலும் இறுகுவதை தடுக்கும் அதே வேளை, ஆட்சியாளர்களும் அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்துவிடாத வகையிலும்தான் அமெரிக்க அழுத்தங்கள் பிரயோகிப்படலாம். இந்த அழுத்தங்களின் இறுதி இலக்கு மீண்டுமொரு ஆட்சி மாற்றமாகவும் அல்லது ராஜபக்ச முகாமிற்குள்ளேயே ஒரு அரசியல் சீரமைப்பாகவும் இருக்கலாம். இதற்கிடையில் பிறிதொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, 2024இல் இடம்பெறவுள்ள தேர்தலில், மீளவும் அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறிவிடும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், 2022இல் இடம்பெறப் போகும் அரசியல் நகர்வுகளை நாம் அனுமானிக்க வேண்டும். ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, நிலைமைகள் எவ்வேளையிலும் நமக்கு பாதகமாக மாறலாம். எனவே நிலைமைகள் சாதகமாக இருக்கின்ற சூழலை கணித்து, அதற்கேற்ப செயற்படுவதன் மூலம்தான், பெறக் கூடியதை நாம் பெற முடியும். ஒரு தனி பாய்சலில் விடயங்களை தமிழர்களால் ஒரு போதுமே வெற்றிகொள்ள முடியாது. ஏனெனில் அதற்கான பலமோ, வாய்ப்புக்களோ, வெளியாரின் ஆதரவோ ஈழத்-தமிழர்களுக்கில்லை. இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் அனுபவங்கள் இதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன.

எனவே 2022ம் அண்டு, இதுவரை கற்றுக் கொண்டதைக் கொண்டு செயற்படுவதற்கான முக்கியமான காலமாக இருக்கப் போகின்றது. ஆனால் தொடர்ந்தும் கற்றுக்கொள்ள மறுத்து அல்லது, கற்றுக்கொண்டதாக கற்பனையில் மிதந்து, காலத்தை விரயம் செய்தால் – இந்த ஆண்டும் முன்னைய ஆண்டுகள் போன்றே தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்து செல்லும். கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், நமது அரசியலின் வீழ்ச்சியை மேலும் உறுதிப்படுத்தும். இறுதியில் தமிழர்கள் இருப்பார்கள் ஆனால் தமிழருக்கான தனித்துவமான அரசியல் இருக்காது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கவில்லை : உரிமத்தை வசமாக்கிக்கொண்டுள்ளோம் என்கிறார் கம்மன்பில

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். மாறாக 51 சதவீத பங்குகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வசமாக்கி உரிமத்தினை உறுதிப்படுத்தியுள்ளோம் என்று அமைச்சரவை இணைபேச்சாளரும் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (4) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் வாரத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் குறித்த ஒப்பந்தத்தை கையெழுத்திட எதிர்பார்த்துள்ளோம்.

80 இலட்சம் எண்ணெய் தாங்கிகளை ஒரே சந்தர்ப்பத்தில் களஞ்சியப்படுத்தக் கூடிய திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியை அமைத்து நூறு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும் , அவற்றில் பலவற்றை இன்னமும் பயன்படுத்தாத நிலைமையே காணப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்களின் காரணமாக கொலன்னாவை, முத்துராஜவெல ஆகிய இடங்களில் பல பில்லியன் செலவிட்டு பாரிய தாங்கிகளை அமைத்துள்ளோம்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறாகும். 1987 , 2003 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே மேலும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் நாம் 14 எண்ணெய் தாங்கிகள் தவிர்ந்த ஏனைய 85 தாங்கிகளையும் இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் 16 மாதங்களுக்குள் பயன்படுத்தாமல் காணப்பட்ட தாங்கிகளை பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதற்கு எம்மால் முடிந்துள்ளது. அதற்கமைய கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அனுமதியின் ஊடாக அனைத்து தாங்கிகளும் மீள இலங்கைக்கு கிடைக்கப் பெறுகிறது.

அதன் பின்னர் 3 ஒப்பந்தங்களின் ஊடாக 24 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும் , 14 எண்ணெய் தாங்கிகளை இந்திய பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும், 61 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை இணைத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்திற்கு 50 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 14 தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ள போதிலும், 85 தாங்கிகளை இலங்கை வசப்படுத்தியுள்ளோம்.

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த ஒப்பந்ததத்தை கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது. எனவே மீண்டும் இது தொடர்பில் கலந்துரையாடி ஒப்பந்தத்தினை கையெழுத்திடும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எவ்வாறிருப்பினும் அடுத்த வாரமளவில் ஒப்பந்தத்தை கையெழுத்திட முடியும்.

99 எண்ணெய் தாங்கிகளில் 14 தாங்கிகள் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், எஞ்சியுள்ள 61 தாங்கிகளும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட் என்ற நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகும். இது நூறு வீதம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாகும்.

இந்த 61 எண்ணெய் தாங்கிகளில் 49 வீதம் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், 51 சதவீதம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமும் காணப்படுகிறது. அதற்கமைய இந்நிறுவனத்தின் பெரும்பான்மை நிர்வாகம் இலங்கை வசமே காணப்படுகிறது.

பணிப்பாளர் சபையின் 7 உறுப்பினர்களில் நால்வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே நியமிக்கிறது. அது மாத்திரமின்றி நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிக பங்கு இலங்கை வசமாவதன் ஊடாக அது அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உரியதாகிறது.

அரச நிறுவனமாகும் போது கணக்காய்வாளர் நாயகத்தினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தவும், போக் குழுவிற்கு பணிப்பாளர் சபையை அழைத்து கேள்வியெழுப்பவும், பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வியெழுப்பவும் முடியும்.

அதனடிப்படையில் முழுமையாக அரச பொறிமுறையின் கீழ் இயங்கும் ஒன்றாகவே இந்நிறுவனம் அமைந்துள்ளது. மாறாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாக அல்ல என்றார்.

Posted in Uncategorized

மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது இலங்கை

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, வாங்கிய கடன்களுக்கான மீள் செலுத்தும் தொகையை செலுத்தவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் 29 நாள் மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அரசு கடந்த வருட இறுதியில் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 130 பில்லியன் ரூபாய்களும், ஜுலை மாதம் 213 பில்லியன் ரூபாய்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. கடந்த வருடம் இலங்கை அரசு மொத்தமாக 825 பில்லியன் ரூபாய்களை (ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள்) அச்சிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதன் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசு முழுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.