அக்டோபர் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? சந்தேகிக்கும் ரணில் விக்ரமசிங்க

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் அக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படும் என வெளியாகும் தகவலை சந்தேகிப்பதாக இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சந்தைக்கு விநியோகிப்பதற்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பிரதிபலனாக அக்டோபர் நடுப்பகுதி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தக சபை ( இலங்கை) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் வைத்து ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிவப்புப் பட்டியலில்’ இருந்து அகற்ற செயற்கை சரிவை உருவாக்க முயலவில்லை – சுகாதார அமைச்சு

இலங்கையை ‘சிவப்புப் பட்டியலில்’ இருந்து அகற்றுவதற்காக, கோவிட் தொற்றுக்களில் செயற்கை சரிவை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேலா குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கைகளை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

இலங்கையில் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை வீழ்ச்சியை உருவாக்கி, சிவப்பு பட்டியலில் இருந்து, நாட்டை நீக்க முடியும் என்ற செய்தி தவறானது.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஒரு நாடு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படாது. அதற்கு ஏனைய அளவுகோல்களும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

செப்டெம்பர் 22 புதன்கிழமை, முதல் தமது நாட்டின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே இலங்கை சுகாதார அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Posted in Uncategorized

திலீபனுடைய நினைவேந்தலை மேற்கொள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கு தடையுத்தரவு

தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தலை நடத்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இலக்கம் AR/724/21இல் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அதனடிப்படையில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று கையளித்துள்ளார்.

குறித்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

துரைராசா ரவிகரன் ஆகிய நீங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு பொலிஸார் அறிக்கை செய்துள்ளனர்.

எனவே துரைராசா ரவிகரன் ஆகிய நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவையின் பிரிவு 106இற்கு அமைவாகப் பிறப்பிக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு பொலிஸார் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழரசுக்கட்சி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்குத் தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க யோசனை

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட ஏனைய விடயங்களில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே சபையின் ஆயுட்காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆராய்ந்து வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
நாட்டில் கடைசியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெற்றது.

சபைகளுக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ் மக்களது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் நாம் :எமது இயக்கத்திற்கும் வரலாறு உள்ளது-ரெலோ தலைவர் செல்வம்

தமிழ் மக்களது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் நாம் எங்களுக்கும் வரலாறு இருக்கின்றது. அதனை நாம் கூற முடியும். ஆனால் எங்கள் மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என காட்டினால் மக்கள் மனமுடைந்து மிகவும் மோசமான நிலைக்கு செல்வார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கு அனுப்பிய கடித விவகாரத்தால் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் குறித்து வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பொறுப்பு எங்களையும் சார்ந்திருக்கிறது. ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனிப்பட்ட கட்சிகள் பங்கு எடுக்க முடியாது. இது விடுதலை சம்பந்தமாக உருவாக்கப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பை சிதைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.

எமது மக்கள் பாரிய பிரச்சனையை தாங்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் மாறி மாறி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களைப் பற்றி பல கருத்துக்களை சொல்லியிருந்தாலும் கூட அதற்கான விளக்கத்தை எங்களாலும் சொல்ல முடியும் என்பது உண்மையான விடயம். எங்களுடைய இயக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றையும் நாங்கள் சொல்ல முடியும். அதற்கான காரணங்களையும் சொல்ல முடியும். எங்களுடைய மக்களுக்காக அவர்களது விடுதலைக்காக நாங்கள் துப்பாக்கி தூக்கியவர்கள்.

எப்பொழுதும் எங்களது சிந்தனை மக்களது விடுதலைக்காக இருக்க வேண்டும் என்பதே. ஆகவே, மாறி மாறி தனிப்பட்ட எதிர் கருத்துக்களை சொல்வதன் மூலம் மக்கள் வெறுப்படையும் தன்மை உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒன்றுமை இல்லாத காரணத்தினால் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றோம். வடக்கு – கிழக்ககில் தேசியத்தோடு நிற்பவர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் கூட, தென்னிலங்கை கட்சிகளை சார்ந்து இருக்கும் தமிழர்களுக்கும் கூடுதலான ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன . இதிலிருந்து மக்கள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பதிலுக்கு பதில் சொல்லாமல் விடுவதால் நாங்கள் அவர்கள் சொல்லும் விடயங்களுக்கு ஒத்துபோவதாக யாரும் கருதி விட முடியாது.

எங்களுக்கும் வரலாறு இருக்கிறது. பதில் சொல்ல முடியும். மக்கள் காணியில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வரை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அது சம்மந்தமாக செயற்படுவதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் மாற்று கருத்துக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. எவரவர் எப்படி செயற்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். அதனை மக்கள் முடிவு எடுக்கட்டும். எதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டோமோ அதேசிந்தனையுடன் எங்கள் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை செய்வோம். எங்கள் மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என காட்டினால் மக்கள் மனமுடைந்து மிகவும் மோசமான நிலைக்கு செல்வார்கள். எங்கள் மீது உள்ள நம்பிக்கை சிதைக்கப்படும் போது சிங்கள கட்சிகளுடன் போகும் நிலையையும் உருவாகும். அதனால் நாம் மௌனம் காப்பது எங்கள் மீதான கருத்துக்களை ஏற்றுக் கொண்டோம் என்பது அல்ல எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முஸ்லிம், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்க வேண்டும் -ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியை வரவேற்பதுடன், முஸ்லிம் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam adaikalanathan) ஆலோசனை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகத்தியார் அடிகளாரும், திருகோணமலை மாவட்ட ஆயரும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எங்களுடைய மக்களது பிரச்சினைகளை ஒருமித்த நேர்கோட்டில் கையாள்வதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

அந்த வகையில் அதனை நாம் வரவேற்கின்றோம். எங்களது மக்கள் கழுத்தளவில் பிரச்சினைகளைத் தாண்டி திண்டாடி கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமை முக்கியம் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி எங்களது இனத்தின் பிரச்சினையை ஒற்றுமையாக உலகத்திற்குச் சொல்லுகின்ற ஒரு வாய்ப்பை இந்த முயற்சி ஏற்படுத்தும்.

ஆயரும், அடிகளாரும் அவர்களும் இணைந்து ஒரு அமைப்பாக இதனைச் செய்து இருப்பதாக அறியக் கிடைக்கிறது. இந்த விடயத்தில் ஒரு ஆலோசனையைச் சொல்ல விரும்புகின்றேன்.

வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் சகோதரர்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக அவர்களது தேசிய பிரச்சனையை வெளிக் கொண்டு வரும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது முஸ்லிம் தலைவர்களையோ இணைந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது மலையகம் சம்பந்தமாக மக்கள் படுகின்ற துன்பங்களை வெளியில் கொண்டு வருகின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அவர்களையும் இந்த விடயத்தில் உள்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றேன். இந்த முயற்சியை நான் வரவேற்கின்றேன்.

ஒற்றுமையாக எங்களுடைய மக்களது பிரச்சனைகளை வெளியுலகிற்குக் கொண்டு வருகின்ற போது அது மக்கள் சக்தியாகப் பார்க்கப்படும்.

அது ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையை உண்டு பண்ணும். இது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அந்த வகையில் இந்த முயற்சிக்கு எங்களுடைய ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம் – பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)

தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்.  அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும், இந்த அரசும், இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள். அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களில் உள்ளது. இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும்  என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை குறித்தும் தமிழ்த் தேசியத் தரப்பினரின் ஒற்றுமையான செயற்பாட்டின் தேவை குறித்தும்  இன்றைய தினம் (25) சனிக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,

தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் இன்று நிற்கின்றனர். வரலாற்றில் தோல்வியடைந்த இனமாக தொடர்ந்தும் எமது வரலாற்றை பதிவு செய்வதா, இல்லை வரலாற்றில் இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் எமது தமிழ்த் தேசிய செல்நெறியினை சரியான வழித்தடத்தில் கொண்டு சென்று எமது இலக்கினை அடைய நாம் செயல்பட்டோம் என்று பதிவு செய்வதா என்பதை தீர்மானிக்கும் சரியான சந்தியில் இன்று நிற்கின்றோம். அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும் ,இந்த அரசும் ,இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள். அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களில் உள்ளது.
இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும் .
தனிப்பட்ட அமைப்பு நலன், தனிப்பட்ட கட்சி நலன் , தனிப்பட்ட நபர் சார்ந்த நலன் எவையும் இது தொடர்பான தீர்மானம் எடுக்கும்போது கருத்தில் கொள்ளப்படாது தமிழ்த் தேசிய நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஆனால் நிகழ்வுகளும் நடத்தைகளும் இதற்கு முரணாகவே பளிச்சிடுகிறது.
தமிழ்த் தேசியத்திற்காக ஒருமித்து போராடிய இயக்கங்கள் தமக்கிடையே பிளவுபட்டு மோதுண்டு பின்னர் ஒருங்கிணைந்து பின்னர் பிளவுண்ட வரலாறு எமக்குரியது. அதன் பின்பும் கூட ஜனநாயக அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியத்தின் அவசியம் உணரப்பட்டு முரண்பட்ட அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு வரவைத்து தமிழ் ஒற்றுமை வலுவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஒற்றுமை, இந்த இணைப்பு சிலரது தனிப்பட்ட கட்சி, சிலரது தனிப்பட்ட செல்வாக்கு, சிலரது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு தாரை வார்க்கப்படக்கூடாது என்பது தமிழ்த் தேசியத்தை நேசித்த, நேசிக்கும் என்போன்றவர்களின் அவாவும் ஆதங்கமும் ஆகும்.

இது எவர் மீதும் வாசிக்கும் குற்றப்பத்திரிகை அல்ல. இன்றைய வாய்ப்பினை எமக்காக மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நமது தனிப்பட்ட கட்சி, தனிப்பட்ட கூட்டு, தனிப்பட்ட செல்வாக்கை பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் தேவையேற்படின் காட்டுவோம். அது ஏற்படுத்தும் பாதிப்பினைவிட இன்று நாம் ஒருமித்து பயணிக்காவிடில் ஏற்படும் பாதிப்பு எமக்கும் எம் இனத்திற்கும் கடந்த ஆறு தசாப்த கால எம் அரசியல் முனைப்புக்களையும் கபளிகரம் செய்து மீண்டும் பேரினவாதிகளின் கால்களில் மண்டியிடவைக்கும் என்பது மட்டும் திண்ணம் என்று என் அரசியல் அறிவு சொல்கிறது. என்மன ஆதங்கமும் இதுவே!. புரிவதும் புரிந்தும் தன்னிலையில் மாறாது தமிழ்த் தேசியத்தை அழிப்பதும், தமிழ்த் தேசியப் பரப்பில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும் . இது உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.

Posted in Uncategorized

தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

பல நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமானது, தமிழர் நலன் சார்பான ஒருமித்த செயல்பாட்டை முன்னெடுக்கும் தருணத்தில் தமிழர் தரப்பாகிய நாம் ஒருமித்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அutJ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இருக்கிறது. அகத்திலும் புலத்திலும் இருக்கும் நம் இனத்தை ஒன்றுபடுத்தி ஒரு தேசிய இனமாக கட்டியமைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். எமது நீண்டகால குறுகிய கால இலக்குகளை ஒன்றோடு ஒன்று முரண்படுத்தி குழப்பிக் கொள்ளாமல், வரையறுத்து பயணிக்க காலம் பணித்துள்ளது. இதனடிப்படையில் தமிழ்த் தேசிய பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவது எமது இலக்குகளை கட்டம் கட்டமாகவும் நேர்த்தியாகவும் சென்றடைய வழிவகுக்கும். இதற்கு உதாரணமாக திகழும், பல நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமானது, தமிழர் நலன் சார்பான ஒருமித்த செயல்பாட்டை முன்னெடுக்கும் தருணத்தில் தமிழர் தரப்பாகிய நாம் ஒருமித்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம்.

எதிர்வரும் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமான களநிலை ஆராய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு இலங்கை வர இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் தமிழர் தரப்போடும் கலந்துரையாடுவதற்கு ஆயத்தமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பிரேரணையை இலங்கை அரசு நிராகரித்திருந்தது. இதை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் அவதானத்தில் எடுத்திருந்தது. அதன் பிரதிபலிப்பாக கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை நீக்கும் வரைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதை தடைசெய்வதை பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளது. இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சியில் இதன் தாக்கத்தை நாடு அனுபவித்து இருந்தது. இதிலிருந்து மீளும் முகமாக இலங்கை அரசு ஐ.நா.வின் பரிந்துரைகளை கருத்தில் கொள்வதாக குரல் கொடுக்கிறது.

சர்வதேச அழுத்தங்கள், ஐ.நா. பிரேரணை என்பனவற்றிற்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாடு இலங்கையை இறுக்கமான பிடிக்குள் கொண்டுவந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் நீக்குவது என்பது பல்லாண்டு காலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் எமது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு வழிவகுக்கும். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழர் தரப்பினர் தமது ஆதரவினை ஒருமித்த நிலைப்பாட்டில் விரைந்து செயலாற்றுவது எம்மினத்தின் அவசியமாக உள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வருகையிலாவது தமிழர் தரப்பு தமக்குள் இருக்கும் பல கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருமித்த நிலைப்பாட்டில் எங்கள் ஆதரவை அவர்கள் முன்னெடுப்புக்கு தெரிவிப்பது காலத்தின் அவசியம்.

மேலும் நம் தாயகப் பரப்பில் எமது இனம் முகம் கொடுத்து நிற்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையாக காணி அபகரிப்பு, குடியேற்றம் மற்றும் இராணுவ மயமாக்கல் ஆகிய விடயங்களையும் ஒருமித்து ஐரோப்பிய பிரநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவர இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த எமது முயற்சிக்கு ஒன்றிணையுமாறு அனைத்து தமிழ் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

 

அரசாங்கத்தின் மாற்று முகம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது; எம்.பி.கைதிற்கு கண்டனம்- ரெலோவின் மத்திய குழு உறுப்பினர்  க.விஜிந்தன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் பொலீசாரால் அநாகரிகமான முறையில் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளமான க.விஜிந்தன் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

எங்கள் மண்ணில் தமிழர்களின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படவேண்டிய, மனதில் வைத்து பூசிக்கப்படவேண்டிய தியகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.கஜேந்திரன் அவர்கள் பொலீசாரால் மிகவும் கொடூரமான, அநாகரிகமான முறையில் நினைவேந்தல் இடம்பெறுகின்ற இடத்தில் அங்கு ஏற்றப்பட்ட தீபத்தினை காலால் மிதித்து அவர்களை தாக்கி மிகவும் கேவலமான முறையில் இழுத்துச்செல்லப்பட்டது ஒர அநாகரிகமான செயற்பாடு.

இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் எங்கள் தமிழ் இனத்தினை அழிப்பதற்கான மாற்று முகம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் கண்டிக்கபடவேண்டும் என்பதுடன், சர்வதேசத்தால் உன்னிப்பாக கவனிக்கப்படவும்  வேண்டும். ஐ.நா பேரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த சம்பவத்தினை மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும் . இறந்தவர்களை கூட நாங்கள் நினைவிற்கொள்ளமுடியாத நிலை இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் கைதினை மிகவும் கண்டிக்கின்றோம் அவரின் சிறப்பு உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாக கண்டித்து நிற்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்க அரசு முயற்சிக்கிறது – ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா நிரோஸ்

சர்வதேசம் சென்று காலஅவகாசத்தை கோருவதற்கான நோக்கத்தோடு, தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதாக இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் சர்வதேச அளவில் பல சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்கள். சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று சொல்கின்றார்கள். ஆனால் இங்கே வருடக்கணக்கில் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணையின்றி சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். .

இடையிடையே ஓரு சிலர் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் விடுவிக்கப்பட்டு வருகின்றபோதும் ஏராளமானவர்கள் தொடர்ச்சியாக சிறைகளில் இருந்து வருகின்றார் அவர்களை விடுவிப்பது என்பது ஜனாதிபதியை பொறுத்தவரையில் ஒரு சாதாரண விடயம்.பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கலாம். கோத்தபாய பதவியேற்றதன் பின்னர் பொதுமக்களை கொன்ற இராணுவ அதிகாரியை விடுதலை செய்திருந்தார். பாரத லகஸ்மன் கொலை தொடர்பாக சிறையிலிருந்ததுமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு பாரதூரமான மனித உரிமை மீறல்களை செய்தவர்களுக்கு ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் விடுதலை செய்திருந்தார். ஆனால் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்தும் அப்பாவி இளைஞர்கள் அவர்களுடைய முதுமைக் காலம் வரையிலே சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை விடுவிப்பதற்கு போதுமான நடவடிக்கை இல்லை.

சிறைக்கு பொறுப்பான அமைச்சர் அண்மையிலேயே மிலேச்சத்தனமாக நடந்து, அரசியல் கைதிகளின் உரிமையை பறிக்கக்கூடிய வகையில் நடந்திருக்கின்றார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அரசியல் கைதிகளிற்கு தண்டனை வழங்கிய பின்னர் பொதுமன்னிப்பளிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் அறிவிப்பு கண்துடைப்பெனவும் தியாகராசா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் தாய்மார்கள் இன்றும் வீதிவீதியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் உடைய அரச படையினரிடம் சாட்சியங்களின் அடிப்படையில் சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சர்வதேசம் சென்று காலஅவகாசத்தை கோருவதற்கான நோக்கத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதாக சில பல விடயங்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உள்நாட்டு பொறிமுறை அடிப்படையில் தீர்வு வழங்கப் போகின்றோம் என கூறுகின்றனர். காணாமல்போனவர்களுக்கு மரணசான்றிதழ் வழங்கப் போகின்றோம் என கூறியுள்ளனர். இந்த இடத்தில் நாம் ஒரு கேள்வியை கேட்கின்றோம்.

காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதாக சொல்வது, இவர்களை கொன்று விட்டேன் என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்கின்றதா?

வலி வடக்கில் பல தனியார் காணிகளில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருக்கின்றது. இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அதிக அளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விடுதலைப் புலிகளை அழித்தது போல கொரோனாவை அழித்து விடுவோம் என்று கூறியிருந்தார். அந்த அடிப்படையில்தான் என்று அரசாங்கம் பாதுகாப்பு சாவடிகளை அதிகரிக்கின்றதா தெரியவில்லை. வைத்தியர்களின் பணியில் இராணுவத்தின் தலையீடு மிக மோசமாக உள்ளது என்றார்.

Posted in Uncategorized