அரசாங்கத்தின் மாற்று முகம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது; எம்.பி.கைதிற்கு கண்டனம்- ரெலோவின் மத்திய குழு உறுப்பினர்  க.விஜிந்தன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் பொலீசாரால் அநாகரிகமான முறையில் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளமான க.விஜிந்தன் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

எங்கள் மண்ணில் தமிழர்களின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படவேண்டிய, மனதில் வைத்து பூசிக்கப்படவேண்டிய தியகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.கஜேந்திரன் அவர்கள் பொலீசாரால் மிகவும் கொடூரமான, அநாகரிகமான முறையில் நினைவேந்தல் இடம்பெறுகின்ற இடத்தில் அங்கு ஏற்றப்பட்ட தீபத்தினை காலால் மிதித்து அவர்களை தாக்கி மிகவும் கேவலமான முறையில் இழுத்துச்செல்லப்பட்டது ஒர அநாகரிகமான செயற்பாடு.

இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் எங்கள் தமிழ் இனத்தினை அழிப்பதற்கான மாற்று முகம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் கண்டிக்கபடவேண்டும் என்பதுடன், சர்வதேசத்தால் உன்னிப்பாக கவனிக்கப்படவும்  வேண்டும். ஐ.நா பேரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த சம்பவத்தினை மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும் . இறந்தவர்களை கூட நாங்கள் நினைவிற்கொள்ளமுடியாத நிலை இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் கைதினை மிகவும் கண்டிக்கின்றோம் அவரின் சிறப்பு உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாக கண்டித்து நிற்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.