வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது – சித்தார்த்தன் எம்.பி.

நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்த கல் பகுதியை அனுராதபுரத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, வவுனியாவின் இனப்பரம்பலை சீர்குலைக்கும் அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியென்பதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.

நேற்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் அவர்களினுடைய பேச்சின்படி, மாகாண சபைத் தேர்தல் விடயமாக அவர் கூறிய விடயங்கள் – இரண்டு கட்சிகளுமே தேர்தல் நடாத்த வேண்டும் என்று பாராளுமன்றில் சொல்கிறார்கள்.

தேர்தல் நடத்துவதிலே இருக்கக் கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக பேசப்படுகின்றது. எங்களுடைய உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். பழைய முறையிலே சென்று தேர்தலை நடத்த முடியும் என்று. ஆகவே இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்த மட்டில் இந்த மாகாண சபை என்பது ஒரு அதிகார போட்டிக்கான விஷயமாக இருக்கிறதே ஒழிய தமிழ் மக்களை பொறுத்த மட்டில் இது ஒரு முக்கியமான விடயமாகும். ஆகக் குறைந்தது சிறிதளவாவது நாங்கள் எங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய விடயங்களை பார்ப்பதற்கான ஒரு சபையாக பார்க்கின்றோம்.

ஏனென்றால் எங்களுக்கு தெரியும் இந்த மாகாண சபை ஒரு முழுமையான தீர்வாக இருக்க முடியாமல் விட்டாலும் நிச்சயமாக அதனை நாங்கள் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் . ஆகவே இப்போது கௌரவ பிரதமர் அவர்களும் எதிர்க்கட்சியிலே இருக்கின்றவர்களும் இதனை நடத்தத்தான் வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஆகவே நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று வினயமாக கேட்கின்றோம்.

பிரதமர் அவர்கள் நான்கு மிக முக்கிய அமைச்சுக்கு பொறுப்பாக இருக்கின்றார். மிக முக்கிய அமைச்சுக்கள் நாட்டின் முழுமையான நிர்வாகத்துக்கு அது பொறுப்பாக இருக்கின்றது. பிரதமர் அவர்களைப் பொறுத்த மட்டில் அவர் ஒரு நீண்ட காலம் அதாவது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்ற அங்கத்தவராக இருந்திருக்கிறார். பல தடவைகள் அமைச்சராக இருந்திருக்கிறார். பல தடவைகள் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் எல்லாம் பல பிரச்சினைகளை கொண்டு செல்லுகின்ற போது அவர் அதனை கரிசனையாக கேட்டு முழுமையாக நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார்.

அவரைப் பொறுத்த மட்டில் இந்த விஷயங்களிலே மிக கவனமாக நேர்மையாக யார் எந்த எதிர்க்கட்சியில் இருந்தால் என்ன? அதனை கொண்டு வந்தால் அதனை தீர்ப்பதில் மிக அக்கறையாக செயல்பட்டிருக்கிறார். எங்களுடைய பிரச்சினையிலும் நான் நேரடியாக எடுத்துச் சொன்ன பிரச்சினையை அவர் தீர்த்திருக்கிறார். நான் கட்டாயமாக அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுன்னாகத்தில் ஒரு தபால் கந்தோர் கட்டவேண்டும் என்ற மக்களினுடைய ஆர்வம் மிக நீண்டகாலமாக இருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலே கௌரவ மனோ கணேசன் அதற்கான நிதியை ஒதுக்கி அதற்கான அடிக்கல் 2019 ஆம் ஆண்டு நாடினார். அப்போது அரச அதிபராக இருந்த வேதநாயகம் அவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தப்காரரிடம் 2019 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முடிவுற வேண்டும் என்று சொல்லி அந்த கட்டடத்தை முடிக்க கேட்டிருந்தார்.

ஆனால் அந்த கட்டடம் முடிவு பெறவில்லை. ஆனால் அது முடிவுற்றதாக அதற்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கட்டடம் அப்படியே இருந்தது. வேலைகள் நடைபெறவில்லை. நான் இந்த பாராளுமன்றத்தில் அந்த பிரச்சினையை எடுத்த போது பிரதமர் அவர்கள் அதனை முடித்துத் தருவதாக உறுதி கூறினார். இப்போது அந்த கட்டடம் ஏறக்குறைய முடிந்து விட்டது. இன்னுமொரு சிறு அழகுபடுத்தும் வேலைகள் நடக்கின்றது. அதன் பிறகு அது திறக்கப்படும். அதற்கு எங்களுடைய சுன்னாகம் பகுதி மக்கள் சார்பாக நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எப்படி மனோகணேசன் அதனை ஆரம்பித்தாரோ அதே போல பிரதமர் அவர்கள் அதை முடித்து வைத்திருக்கின்றார். இருவருக்குமே நான் நன்றி கூற வேண்டும். அதே போல உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெறாமல் 8 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பணமில்லை என்ற காரணம் கூ றப்பட்டிருக்கின்றது. அது வேற விஷயம். ஆனால் அந்த உள்ளூராட்சி சபையிலே வேட்பு மனு தாக்கல் செய்த பலர் அரச உத்தியோகத்தர்களாக இருக்கின்றார்கள். அதிகமானோர் வேலைக்கு போய்விட்டார்கள்.

ஆனால் பலருக்கு இன்னும் அவர்களினுடைய படிகள் கொடுக்கப்படவில்லை. பலர் இருக்கின்றார்கள் நான் வேண்டுமென்றால் அவர்களினுடைய விபரங்களை தர முடியும்.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த அனைவருக்கும் அவர்களினுடைய படிகள் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன்.

அதே போல இத்தகைய நடக்காத ஒரு தேர்தலுக்கு நிர்வாக செலவாக 940 மில்லியன் ரூபா செலவு செய்ததாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

இது நான் பத்திரிகையில் பார்த்த விஷயம். இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் வேட்பு மனுக்களை எடுப்பதற்காக 940 மில்லியன் ரூபாவை செலவு செய்வது என்பது ஒரு வீண் விரயமாக தான் நான் பார்க்கின்றேன். மிகப் பெரும் தொகையான பணம் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. பல சந்தர்ப்பத்திலே அரசியல்வாதிகள் விரயம் செய்கிறார்கள். ஊழல் செய்கிறார்கள். என்ற குற்றச்சாட்டுக்கள் தொகையாக வந்து கொண்டிருக்கும். இதில் பல அதிகாரிகள் செய்யும் ஊழல் விடயங்களினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இவற்றையும் நிச்சயமாக பிரதமர் அவர்கள் கவனிக்க வேண்டும்.

ஏனென்றால் அவர்களின் கீழே தான் முழுமையான அதிகார நிர்வாகம் இருக்கின்ற படியால் பிரதமர் அவர்கள் இந்த பொருளாதார மீட்சிக்கு செயல்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே பொருளாதார மீட்சி என்பது எல்லாருமே ஒத்துச் செய்ய வேண்டிய ஒரு விஷயம்.

சிலர் செய்கின்ற பிழைகளால் பொருளாதாரம் வீழ்ச்சியிடைந்து கொண்டிருக்கிறது என்பது நிச்சயமான ஒரு விஷயம்.

மாகாண சபையை பற்றி சொல்லி இருக்கிறோம். அதை நடத்துவதற்கான கட்டாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக இன்னொரு விஷயம் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் 2015 ஆம் ஆண்டு இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அன்று பிரதமராக இருந்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கணக்காளர்களை நியமிக்கப்போகிறோம் என்று தமிழ் கட்சிகளுக்கு உறுதியளித்தார். அப்போது வஜிர அபேவர்தன அவர்கள் அமைச்சராக இருந்தார். எத்தனை பேரை நியமிக்கப்போகிறர்கள் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கப்படும், பின்பு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று நியமிக்க கூடாது என்று கூற அது நியமிக்காமல் விடுபடும்.

மீண்டும் நாங்கள் செல்வோம். சென்று கதைக்கின்ற பொழுது நியமிக்கப்படும். பின் அதே முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்க வேண்டாம் என்று சொல்லும் போது நியமிக்கப்படாமல் விட்ட சந்தர்ப்பம் இருக்கிறது . அந்த சபை ஒழுங்காக நடக்காமல் இருக்கின்ற போது பல உப சபைகள் இருக்கின்றன. அதற்கு கணக்காளர் போடப்பட்டிருக்கிறது. பிரதேச அலுவலகம் தரமுயர்த்தப்படுகின்றது. மிக நீண்டகாலமாக தமிழர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதை செய்ய முடியாத நிலையிலே இந்த அரசாங்கம் இருக்கின்றது. வெறும் வாக்குக்களுக்காக. யாருடைய வாக்கு தேவை என்று நினைக்கின்றார்களோ அந்த வாக்கின் பக்கத்திலே நிற்கின்ற நிலைமை இந்த நாட்டிலே இருக்கின்றது. இதையும் பிரதமர் அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மேலும், வவுனியா நெடுங்கேணி பிரதேசத்திலே வெடி வைத்த கல்லு – அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்த ஒரு பகுதியை கொண்டு வந்து அதிலே இருக்க கூடிய கிராம நிர்வாகிகள் உடன்சேர்ந்து அதிலே இருக்கக்கூடிய கிராம நிர்வாகத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த கிராமத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசசபைக்கு 30 கிலோ மீற்றர் காட்டுப்பாதையால் வரவேண்டும். அந்த மக்களே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள் அந்த அனுராதபுர மக்களே எழுதி கொடுத்திருக்கின்றார். பிரதேச சபையிலே தங்களை விட்டு விடுங்கள் மீண்டும் அனுராதபுரத்துக்கு போக வேண்டும் என்று. அதை செய்வதற்கு இந்த அரசு தயங்குகிறது. ஏனென்றால் அங்கே ஒரு திட்டம் இருக்கின்றது. நீண்டகாலமாக அந்த திட்டத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.

போகஸ்வேவ என்ற இடத்திலே ஏற்படுகின்ற குடியேற்றம். இந்த குடியேற்றத்தின் மூலம் பக்கத்துக்கு அனுராதாதபுரத்திற்குள்ள நிலங்களை சேர்ப்பது, அதிலிருக்கக்கூடிய மக்களை சேர்ப்பது வெளி மாவட்டத்திலிருந்து மக்களை குடியேற்றுவது, இதன் மூலம் வவுனியா மாவட்டத்துக்குரிய குடிப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

இந்த முயற்சிகள் எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசுவது நிச்சயமாக நடைமுறைக்கு சரிவராது.

ஏனென்றால் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் முழுமனதுடன் இந்த செயல்பாடுகளில் பங்கு பற்ற வேண்டும். அவர்கள் முழு மனதுடன் செயல்பாடுகளில் பங்குபற்றுவதாக இருந்தால் அவர்கள் சரியான முறையிலே நடாத்தப்பட வேண்டும். அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இதை நிச்சயமாக அரசாங்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு முழுமையான உரிமை உண்டு – ஜனாதிபதி ரணில்

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.

தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.

எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலின் கரங்களை தமிழ்க்கட்சிகள் பலப்படுத்த வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அதைவிடுத்து வெளியில் இருந்துகொண்டு ஜனாதிபதியையும், அரசையும் தமிழ்க் கட்சிகள் சாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். கஜேந்திரகுமாரையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம். விக்னேஸ்வரனையும் அவரின் கட்சியையும் நாங்கள் மதிக்கின்றோம்.

ஆனால், இந்த மூன்று தரப்பினரும் வெளியில் இருந்துகொண்டு அரசியல் தீர்வு வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும்.

அவர்கள் வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. தீர்வை வென்றெடுக்கத் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தைத் தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவையில் பாதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மோசடிகளை வெளிப்படுத்திய நபரை விளக்கிவிட்டு மோசடி குழுவினரை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எதிர்கட்சி அலுவலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் என்னுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.

இதன் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சரை வரவழைத்து இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீடுகளுடன் கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்துடனேயே நான் அவரை அழைத்தேன்

நான் கிரிக்கெட் நெருக்கடியை தீர்ப்பதற்காகவே செயற்பட்டேன்.

அவ்வாறு இல்லாமல் ரொசான் ரணசிங்கவை இணைத்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக நான் அவரை அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் என்னை சந்தித்ததன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்களும் என்னை வந்து சந்திக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது நிறுவனங்களாக மாற்றப்படவுள்ள அரச ஊடகங்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும் என வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதலான புள்ளி விபரங்களை முன்வைத்து, இந்த அலைவரிசைகள் எவ்வாறு நட்டம் அடைந்துள்ளன என்பதை குழுவின் தலைவர் தௌிவுபடுத்தியுள்ளார்.

இந்த அலைவரிசைகளுக்கு திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இதற்கமைய, இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேல் சுரேஷ் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2024 வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் அடிப்படையி​லேயே வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய் பெற்றுக்கொண்டார்.

“நான் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பசறையில் உள்ள இளைஞர்களுக்காக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் அரசியலில் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள்,” என்றார்.

இலங்கையின் பிரச்சினையை தமிழ்நாடு அரசுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன – முத்தையா முரளிதரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வின் போது அவர் இதை பேசினார்.

‘இலங்கையில் உள்ள பிரச்சனையை… இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது உண்மை. அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை… இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவில்லை,

தமிழக அரசுக்கு அங்குள்ள உண்மையான பிரச்சனை என்னவென்று புரியவில்லை. ஏனெனில் இலங்கையில் இது மிகவும் வித்தியாசமானது. இலங்கையில் தமிழ் சமூகத்தில், பல துணைக்குழுக்கள் உள்ளன. இது அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

எனது தாத்தா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1920களில் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்காக இலங்கை சென்றார். ஆங்கிலேயர்கள் எங்களை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் இலங்கையில் எங்கள் தலைமுறை உருவானது. நாங்கள் அனைவரும் மத்திய மலைநாட்டில் வளர்ந்தோம். நாங்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்… அவர்கள் பேசும் விதம், ஸ்லாங் வேறு, ஆனால் மொழி ஒன்றுதான்.

எனவே சிலர் ஒரு பகுதியை பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். மத்திய பிராந்தியத்தில் நாங்கள் தனி நாடு விரும்பவில்லை. நாங்கள் அனைவருடனும் இணக்கமாக வாழ விரும்பினோம்.

இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தனது நாட்டில் உள்ள பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை.

போர் மற்றும் என்ன நடந்தது என்பது பற்றி நான் எதுவும் கூறாததாலும், நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்பட்டதாலும்… 5-10 சதவீத அரசியல்வாதிகள் நான் இனத்திற்கு துரோகி என்று நினைக்கிறார்கள்’. இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நடந்த போராட்டங்கள் குறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசுகையில், சேதுபதியை நடிக்க வைப்பது பிரச்சனையாகிவிடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்றார்.‘ஒரு விளையாட்டு வீரரைப் பற்றிய ஒரு ஊக்கமளிக்கும் திரைப்படத்தை நாங்கள் எடுக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவில்லை. அதை ஒரு வகையான பிரச்சாரம் என்று நினைக்கிறார்கள்… மேலும் பல அரசியலும் படங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது. அரசியல் மற்றும் திரைப்படங்களைப் பற்றி பேசுவதில் தவறில்லை, ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்ய முடியாமல் இருப்பது உங்களை மூச்சுத் திணறச் செய்வது போன்றது.

எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. விஜய் சேதுபதி ஒருபோதும் விலக விரும்பவில்லை, ஆனால் பிறகு அவர்தான் ஏன் இவ்வளவு வம்புகளை உருவாக்க வேண்டும் என்றார்? அதனால் வேறு நடிகரைத் தேடினோம்’, என்று ஸ்ரீபதி கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது நடுவரால் சக்கிங் என்று புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த முரளிதரன்,

1995 இல், நான் சிக்கலில் இருந்தபோது – நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், இலங்கைக்காக விளையாடினேன், அப்போது தமிழ்ப் போர் உச்சத்தில் இருந்தது. மதம் அல்லது எதையும் பார்க்காமல் இந்தியாவைப் போலவே இலங்கையும் எனக்கு ஆதரவளித்தது.2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையும் முரளிதரன் நினைவு கூர்ந்தார்.

’அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் வாத்துகளைப் போல உட்கார்ந்து இருந்தோம். எங்கள் பேருந்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை’… என்றார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் மட்டக்களப்பு விஜயம்

இலங்கைக்கான தென்னாபிரிக்க நாட்டு உயரஸ்தானிகர் சண்டிலி இ.ஸ்சோல்க் இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் கிழக்கின் பிரசித்தி பெற்ற பாடசாலையான ஆங்கிலேயரால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி தேவைகள் குறித்தும் கல்லூரி அதிபருடனும் நலன் விரும்பிகளுடனும் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் ஏ பி மதன் நெறிப்படுத்தலில் குறித்த தென்னாபிரிக்க மிகஸ்தானிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.

புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அண்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தும் பாடசாலையினுடைய தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன் உள்ளிட்ட பலர் இங்கு சமூகம் அளித்திருந்தனர்.

பாடசாலையின் தேவைகள் குறித்து உயரஸ்தானிகளிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட வீர சாணிகள் எதிர்காலத்தில் இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் வெளியேறவுள்ள இந்திய தூதுவருக்கு சபாநாயகர் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார்.

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியாவே முதலாவதாக முன்வந்தது.

தனது சேவைக்காலத்தில் இலங்கை – இந்திய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேட கவனம் செலுத்துவதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா சாதகமான நிலையில் உள்ளது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகரிடம் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.