கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித்தை களமிறக்குவோம் – டிலான் பெரேரா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.கூட்டணியின் பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம். சஜித்- டலஸ் அணிக்குள் முரண்பாடில்லை என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும்,சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெருமவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு 2022.07.20 ஆம் திகதி ஆரம்பமானது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்துக்கு அமைய அன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அவர் தான் பிரதராக நியமிக்கப்பட்டிருந்திருப்பார்.

இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகபெரும வெற்றிப் பெற்றிருந்தால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருப்பார்.பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன பக்கம் உள்ளதால் அவர்கள் வெற்றிப்பெற்றார்கள்.

பாராளுமன்றத்திலும்,வெளியிலும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தரப்பினருடன் இணக்கமாக செயற்படுகிறோம்.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக குறிப்பிடப்படுகிறது.உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தேர்தல்களையும் பிற்போடுவது ஆச்சரியத்துக்குரியதல்ல, ஆகவே அரசாங்கத்துக்கு எதிரான பலமான சக்தியை நாங்கள் உருவாக்குவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.கூட்டணியின் பொதுவேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம்.

சஜித் -டலஸ் அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என்றார்.